first review completed

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி

From Tamil Wiki

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி (அலெக்சாண்டர் மிகைலுவிச் துபியான்ஸ்கி, Alexander Mikhailovitch Dubiansky, Alexander Dubianskiy, Alexander Dubyanskiy, or Aleksandr Dubiansky)(1941-2020) ரஷ்ய தமிழறிஞராகவும், மொழியியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவர் தமிழின் சங்க நூல்களை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தியவர்களில் முன்னோடி.

பிறப்பு,கல்வி

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி ஏப்ரல் 27, 1941-ஆம் ஆண்டு ரஷ்யாவில் மிகையல் மற்றும் கெலன் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி சில ஆண்டு கால ராணுவ சேவைக்குப் பின்னர் 1965-ஆம் ஆண்டு மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டில் ( Moscow State University's Institute of Oriental Language) தமிழ்ப் பட்டப்படிப்பை முடித்து பின்னர் அங்கேயே முதுநிலைப் பட்டப்படிப்பையும் முடித்தார்

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி செவ்வியல் தமிழ் இலக்கியத்தின் கவிதையியல் என்று சங்கத்தமிழ் பற்றி ஆய்வு செய்து அதே கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில் இந்த ஆய்வை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 1979-ஆம் ஆண்டு இந்தியவிற்கு வந்து சென்னை பல்கலைக்கழகத்தில் ஒன்பது மாதங்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டார். பேராசிரியர் ந.சஞ்சீவி அவர்களிடம் புறநானூறு கற்றார். பின்னர் பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் தொல்காப்பியம் பயின்றார்.

தனிவாழ்க்கை

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நத்தாலியா என்பவரை திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு தான்யா என்ற ஒரே மகள்.

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டில் ( Moscow State University's Institute of Oriental Language) 1973- ஆம் ஆண்டு விரிவுரையாளராக பணியமர்ந்தார் பின்னர் உதவிப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றினார். பின்னாளில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையின் தலைவராக பணியில் இருந்தார். மேலும் இவர் பத்திற்கும் மேற்ப்பட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

நன்றி-bbc.com

பங்களிப்பு

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி ரஷ்யாவில் உள்ள லெனின் கிராட்டில் தமிழ் சொல்லிக்கொடுக்க ஒரு பள்ளியை உருவாக்கினார். தூயதமிழில் பேசவும், எழுதவும் பலரை பயிற்றுவித்தார் மேலும் பல ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார், பெரும்பாலானவை தமிழாய்வுகள்.

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 1979-ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியிலிருந்து தமிழ்ப் பாடல்கள் என்ற தலைப்பில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களிலிருந்து சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழ் இலக்கியம் ஒரு பார்வை என்ற தலைப்பில் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்கள் குறித்து ரஷ்ய மொழியில் ஒரு நூலை 1987-ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 1989-ஆம் ஆண்டு பழந்தமிழ் பாடல்களில் சடங்கு,புராண இலக்கிய வேர்கள் என்னும் இரு நூல்களை ரஷ்ய மொழியில் எழுதியுள்ளார். இந்த நூல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவர் புறநானூற்றை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி உலகெங்கிலும் பயணங்கள் மேற்கொண்டு பல்வேறு ஆய்வரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இவர் 2010-ஆம் ஆண்டில் கோவையில் நடந்த செந்தமிழ் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு தொல்காப்பியம் பற்றி உரையாற்றினார். தமிழ் எழுத்தாளர்களான ஜெயகாந்தன், சிவத்தம்பி, வைரமுத்து மற்றும் பலருடன் நல்ல தொடர்பில் இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்புப் பட்டறை ஒன்றை ரஷ்ய ஆராய்ச்சி மாணவர்களுக்கு நடத்திவந்தார். 2016-ஆம் ஆண்டு தமது 75-வது பிறந்தநாளின்போது பல்வேறு தமிழறிஞர்களின் கட்டுரைகளடங்கிய தமிழ் தந்த பரிசு என்ற 600 பக்கங்கள் கொண்ட நூலை வெளியிட்டார்.

விவாதங்கள்

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 2010-ஆம் ஆண்டு செந்தமிழ் மாநாட்டில் சமர்ப்பித்த தொல்காப்பியம் பற்றிய கட்டுரை பலவிவாதங்களை உருவாக்கியது. இந்த கட்டுரையில் “தொல்காப்பியத்தை ஆராய்ந்த அறிஞர்களில் ஒருவரான சுப்ரமணிய சாஸ்திரி தொல்காப்பியத்தின் பல பகுதிகள் சம்ஸ்கிருத நூல்களின் நேரடி மொழிபெயர்ப்புகள் என்று கூறியுள்ளார். நான் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அந்தக் காலத்தில் பிரதிகளுக்கிடையே இருந்த உறவு என்பது மொழிபெயர்ப்பு என்பதாக அமைந்திருக்கவில்லை. மாறாக, ஒரு மொழியில் இருப்பதை இன்னொன்றில் வழங்குவது என்ற விதத்தில்தான் இருந்தது. ஒன்றிலிருந்து கடன் பெறுவதையோ, ஒன்றன் கருத்தாக்கத்தை இன்னொரு மொழியில் பயன்படுத்துவதையோ அப்போது யாரும் தவறாக நினைக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். தொல்காப்பிய அழகியலுக்கு இந்திய இலக்கியத்தில் மூலங்கள் உண்டா என அந்த விவாதம் விரிவடைந்தது.

விருது

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கியின் பணியைப் பாராட்டி அவருக்குத் தெற்காசியக் கல்விச் சங்கம் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது (Exemplar Academic Awards) 2013-ல் வழங்கியது.

மறைவு

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நவம்பர் 18, 2020-ஆம் ஆண்டு, தனது 79- ஆம் வயதில் கொரோனாவினால் உயிரிழந்தார்.

இலக்கிய இடம்

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 2000-ஆம் ஆண்டில் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சடங்குகள், தொன்மங்கள் குறித்து எழுதிய நூல் தமிழுக்கு அவர் அளித்த முக்கியமான பங்களிப்பு என்று பழ. நெடுமாறன் வரையறுக்கிறார்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.