under review

உதயசங்கர் எஸ்பி

From Tamil Wiki
உதயசங்கர் எஸ்பி

உதயசங்கர் எஸ்பி தேசிய மொழியில் எழுதும் மலேசிய இந்திய எழுத்தாளர். சிறுகதைகள், கட்டுரைகள், பத்திகள், கவிதைகள், விமர்சனங்கள், நாவல்கள் எனப் பல துறைகளிலும் இலக்கியப் பங்களிப்பை வழங்கி வருகிறார். ஆங்கில மொழியிலும் இவர் எழுதி வருகிறார். ‘Shafie Uzein Gharib’, ‘Hanumam 0’, ‘Leonard Loar’ ஆகிய புனைப் பெயர்களில் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

ஜூன் 10, 1972-ல்  'அவ்லோங்’ தைப்பிங்கில் பிறந்தார். இவர் தந்தை  திரு நாராயணன் த/பெ சங்கரன். தாயார் திருமதி சரோஜினி த/பெ இராமசாமி. இவர் குடும்பத்தில் எட்டாவது பிள்ளை. ஆரம்பக் கல்வியை 'அவ்லோங்' கான்வென்ட் பள்ளியில் பயின்றார். இடைநிலைக் கல்வியை ரிட்சுவான் இடைநிலைப்பள்ளியில் பயின்றார். இவர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் இளங்கலைப் பட்டமும் தேசிய இலக்கிய துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர்.

தனி வாழ்க்கை

உதயசங்கர் எஸ்பி மலேசிய வானொலி, தொலைக்காட்சி பிரிவில் (RTM) மலாய் மொழி செய்தியின் ஆசிரியராகவும் தொகுப்பாளராகவும், பத்திரிகை வர்ணனையாளராகவும், இயற்கை பேரிடர் பிரிவின் மேற்பார்வையாளராகவும் 1996-ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை பணியாற்றினார். பல தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 1996 முதல் 2010 வரை பகுதி நேர விரிவுரையாளராகவும், பெர்னாமா வானொலி 24-ல் 2008-2009 ஆண்டு வரை செய்தி ஆசிரியராகவும், 2010-2011-ஆம் ஆண்டு வரை சினார் ஹரியன் செய்தித்தாளின்  உதவி ஆசிரியராகவும் இருந்துள்ளார். 2011-ஆம் ஆண்டு தொடங்கி, மொழி, எழுத்து, ஊடகம், மேடை பேச்சு போன்ற துறைகளில் தன் சேவைகளை வழங்கியுள்ளார். பல்வேறு மாநில, தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் புரவலர், பேச்சாளர், அனுசரணையாளர், ஒருங்கிணைப்பாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் வழிகாட்டியாக விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளார். 2011 முதல் முழு நேர இலக்கிய செயற்பாட்டாளராக இருக்கிறார். இவர் பிரபாவதி த/பெ கோவிந்தராஜூ என்பவரை 2000-ஆம் ஆண்டில் மணமுடித்தார். இவருக்கு தேவிஷினி பிரபா சங்கரி எனும் மகள் உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

ஆரம்பப் பள்ளியிலேயே மலாய் ஆங்கில இலக்கியங்களை வாசிக்கத்தொடங்கி, இடைநிலைப்பள்ளிகளில் மலாய் மற்றும் ஆங்கில மொழியில் கதைகள் எழுதத் தொடங்கினார். இடைநிலைப்பள்ளி இதழ்களில் இவர் எழுதியுள்ளார். 1992-ஆம் ஆண்டு முதன்முதலில் 'டேவான் பெலாஜார்' எனும் இதழில் இவரின் ‘ஐயா’ (Ayya) எனும் சிறுகதை இடம்பெற்றது. இந்தப் படைப்பே இவரை எழுத்தாளராக அறிமுகப்படுத்தியது.

இலக்கிய செயல்பாடுகள்

கடந்த 30 ஆண்டுகளாக மலாய் மொழியிலும் ஆங்கில மொழியிலும் சிறுகதைள், கட்டுரைகள், பத்திகள், கவிதைகள், விமர்சனங்கள், நாவல்கள் எனப் பல துறைகளிலும் இலக்கியப் பங்களிப்பை வழங்கி வருகிறார். கூரிய விமர்சனப் பார்வை கொண்டுள்ள இவர் சமூகப் பிரச்சினைகளையும் எழுத்தின் வழி வெளிக்கொணர்ந்துள்ளார். சிறுபான்மை மக்களின் அடையாளப் பிரச்சினைகள், இண்டர்லோக் (Interlok), உரிமத்தொகை (Royalty) போன்ற பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்துள்ளார். இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். ஏப்ரல் 11, 2022 சமூக ஊடகப் பதிவில் அவர் நபிகள் நாயகத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆகஸ்ட்டு 1999-ல் 'காவியன்' (Kavyan) அமைப்பினைத் தொடங்கி இலக்கிய பணியைச் செய்து வருவதுடன், தேசிய மொழியில் ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்குச் சிறுகதை, கதை, நாவல், கவிதை, கட்டுரை பட்டறைகளையும் எழுதும் வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறார். தேசிய மொழியில் எழுதும் பிற எழுத்தாளர்களின் படைப்புகளையும் தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார்.

விருதுகள்

எழுத்தில் இன ஒற்றுமையை முன்னிறுத்தியதற்காக Universal Peace Federation எனும் நிறுவனத்தின் ‘சமாதானத் தூதர்’ விருதை ஆகஸ்டு 24, 2008 இல் பெற்றுள்ளார்.

நூல் பட்டியல்

சிறுகதை தொகுப்புகள்

  • ‘Orang Dimensi’ (1994)
  • ‘Siru Kambam’ (1996)
  • ‘Yang Aneh-Aneh’, (1997)
  • ‘ Surat Dari Madras’ (1999),
  • ‘Nayagi’ (2000),
  • ‘Sasterawan Pulau Cinta’ (2001),
  • ‘Rudra Avatara’ (2008),
  • ‘Kathakali’ (2009),
  • ‘Kisah Dari Siru Kambam’ (2013)
  • ‘Pulau Pendatang’ (2015)
  • ‘Putaria’ (2020)

நாவல்கள்

  • ‘Hanuman: Potret Diri’ (1996)
  • ‘Panchayat: Edisi Khas’ (2012)
  • ‘Hanuman Suara Hati’ (2013)

நாட்டுப்புற கதைகள்

  • ‘Koleksi Cerita Ikan’ (1997)
  • ‘Cerita Rakyat Asia Co-mel’ (1997)
  • ‘Nari-Nari’ (1995)
  • ‘Munis Dengan Harimau’ (1996)

கட்டுரை தொகுப்புகள்

  • ‘Malaiur Manikam’ (2016)
  • ‘Mandala Bicara’ (2016)
  • Suvarna Bhumi’ (2022)

இதர படைப்புகள்

பதிப்பாசிரியர் பணிகள்

  • ‘Vanakam’ (2002)
  • ‘Busana Bahasa’ (2019)
  • ‘Landasan Hidup’ (2020)
  • ‘Peluru Aksara’ (2020)[1]

உசாத்துணை

காவியன் அமைப்பின் அகப்பக்கம்

உதயசங்கர் எஸ்பி அகப்பக்கம்

உதயசங்கர் நேர்காணல்-வல்லினம்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.