first review completed

வி.பாலாம்பாள்

From Tamil Wiki
Revision as of 09:06, 22 May 2022 by Logamadevi (talk | contribs)
வி.பாலாம்பாள் (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

வி.பாலாம்பாள் தமிழின் தொடக்க கால நாவலாசிரியைகளில் ஒருவர். வி.பாலம்மாள் என்பதே இவர் பெயர் என்றும் பாலாம்பாள் என்பது பிற்கால வரலாற்று நூல்களில் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளரான அரவிந்த் சுவாமிநாதன் குறிப்பிடுகிறார். சிறுகதையாசிரியர், இதழாளர், பதிப்பாளர். இவரின் 'சாணக்ய சாகஸம் அல்லது சந்திரகுப்த சரிதம்’ பெண் எழுத்தாளரால் எழுதப்பட்ட முதல் சரித்திர நாவல்.

வாழ்க்கைக் குறிப்பு

திருச்சியை அடுத்த மணக்காலில் டாக்டர் ஏ.ஆர். வைத்தியநாத சாஸ்திரி, சாருமதி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். அக்கால முறைப்படி இல்லத்திலிருந்தே கல்வி பயின்றார். தமிழ், ஆங்கிலம், கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். தன் புரட்சிக்கருத்துகளாலும், செயல்பாடுகளாலும் இவர் ‘சகோதரி பாலாம்பால்’ என்று அழைக்கப்பட்டார்.

இலக்கியவாழ்க்கை

அக்கால விவேகபானு, வித்யாபானு, செந்தமிழ் இதழ்களின் மூலம் இலக்கிய அறிமுகம் பெற்றார். நடேச சாஸ்திரி, ராஜம் ஐயர், பாரதி, மாதவையா ஆகியோரின் எழுத்துக்கள் இவருக்கு ஆதர்சமாக இருந்தது. 'தேவதத்தன் அல்லது தேசசேவை’ எனபது இவரது முதல் நாவல். இவரின் இரண்டாவது நாவலான 'சாணக்ய சாகஸம் அல்லது சந்திரகுப்த சரிதம்’ நூலை சுதேசமித்திரன், செந்தமிழ், வைசியமித்திரன் உள்ளிட்ட இதழ்கள் பாராட்டி எழுதின. இந்நாவல் பெண் எழுத்தாளரால் எழுதப்பட்ட முதல் சரித்திர நாவல். 1919-ல் சென்னை மாகாணத்திலிருந்த பள்ளிகளில் இந்நாவல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. சாணக்ய சாகஸத்தின் இரண்டாவது பாகத்தை ‘விவேகோதயம்’ இதழில் தொடராக எழுதினார். 1921-ல் இது நூலாக வெளிவந்தது. இவரது புத்தகங்கள் அக்காலத்தில் ஆயிரத்திற்குமேல் விற்க்கப்பட்டதை நூல் குறிப்பிலிருந்து அறிய முடிகிறது. பர்மா, மலேயா போன்ற நாடுகளிலும் இவரது புத்தகங்களுக்கு வரவேற்பிருந்துள்ளது.

இதழியல்

இவர் சிறுகதைகளுக்காகவே ‘சிந்தாமணி’ என்ற பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்தினார். ‘கற்பக மலர்’ என்ற இதழையும் சிறுகதை வெளியீட்டுக்காக கொணர்ந்தார். இவை தொகுப்புகளாக கற்பக மலர்-1, கற்பக மலர்-2, கற்பக மலர்-3 என சிறு சிறு தொகுப்புகளாக வெளிவந்தது. இரு இதழ்களின் ஆசிரியராக செயல்பட்டார். ’விவேகோதயம்’ இதழின் துணை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார்.

பதிப்பாளர்

தனது தாயின் பேரில் “ஸ்ரீமதி பிரசுராலயம்” பதிப்பகத்தைக் கொணர்ந்தார். அதன் மூலம் தன் நூல்களை வெளியிட்டார்.

மறைவு

இறுதிக்காலத்தில் ஜபல்பூரில் வாழ்ந்து வந்தவர், உடல் நலிவுற்று காலமானார்.

நூல்கள்

நாவல்கள்
  • தேவதத்தன் அல்லது தேசசேவை
  • சாணக்ய சாகஸம் அல்லது சந்திரகுப்த சரிதம்
  • தீண்டாமை அல்லது தீட்சிதரின் கோபம்
  • பத்மநாபன் அல்லது பணச்செருக்கு

===== சிறுகதைகள்

  • மனோகரி அல்லது மரணத்தீர்ப்பு
  • உண்மைக்காதல்
  • திலகவதி
  • பரோபகாரம்
  • விருந்தில் விலங்கு
  • அவள் இஷ்டம்
  • மன்னிப்பு
  • பணச்செருக்கு
  • கல்லட்டிகை
  • ஒப்பந்தம்
  • இவர் யார்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.