பிரான்சிஸ் வைட் எல்லிஸ்

From Tamil Wiki
Revision as of 23:23, 29 April 2022 by Ramya (talk | contribs)
எல்லீசன்

பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (எல்லீசன்) (1777-1819) பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சியின் முன்னோடி. "தென்னிந்திய மொழிக் குடும்பம்" என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளிப்படுத்தினார். மொழிபெயர்ப்புப் பணிகள் மற்றும் பதிப்புப் பணிகள் முக்கியமான பங்களிப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆண்டு வரை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரி. 1796 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் எழுத்தராகச் சேர்ந்த இவர் 1798 ஆம் ஆண்டில் துணைக் கீழ்நிலைச் செயலராகவும், 1801 ஆம் ஆண்டில் துணைச் செயலராகவும், 1802 ஆம் ஆண்டில் வருவாய்த்துறைச் செயலராகவும் படிப்படியாக உயர்ந்தார். 1806 ஆம் ஆண்டில் மசூலிப்பட்டினத்தில் நீதிவானாக நியமிக்கப்பட்டார். 1809 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் நிலச்சுங்க அதிகாரியாகப் பதவி ஏற்றுக்கொண்ட இவர், 1810 ஆம் ஆண்டில் சென்னையின் கலெக்டர் ஆனார்.

இலக்கியவாழ்க்கை

எல்லிஸ் வெளியிட்ட திருவள்ளுவர் நாணயங்கள்

இராமச்சந்திரக் கவிராயரிடம் இவர் தமிழ் கற்று கவிதை எழுதுமளவு புலமை பெற்றார். சென்னை நகரில் ஏற்பட்ட குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகக் கிணறுகளைத் தோற்றுவித்ததோடு, அவற்றுக்கருகில் தமிழில் கல்வெட்டுக்களையும் பொறித்தார். இக்கல்வெட்டுக்கள் தமிழ் பாடல்களாக அமைந்திருந்தன. இராயப்பேட்டையில் உள்ள அத்தகைய கல்வெட்டுப் பாடலொன்றில் இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு என்று ஒரு நாட்டின் முக்கிய உறுப்பாக நீரைக் குறிப்பிடும் திருக்குறளும் மேற்கோளாக வந்துள்ளது. சென்னையின் நாணயசாலை இவரது பொறுப்பில் இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் இரண்டு திருவள்ளுவரின் உருவம் பொறித்து வெளியிடப்பட்டன. ஐராவதம் மகாதேவன் 1994 ஆம் ஆண்டில் இந்த நாணயங்களை அடையாளம் கண்டு எழுதினார். 1816ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டிருப்பதை உணர்ந்து, "தென்னிந்திய மொழிக் குடும்பம்" என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளிப்படுத்தினார். இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி. திருக்குறளுக்கான ஒரு விளக்கவுரையையும் அவர் எழுதினார். தமிழின் யாப்பியலைப் பற்றியும் இவர் எழுதி வெளியாகாதிருந்த ஒரு நூலை தாமசு டிரவுட்மன் இங்கிலாந்தில் கண்டுபிடித்து வெளிப்படுத்தினார். 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சியின் ஊற்றுக்கண்ணாக "எல்லிசு" இருந்தார் என்று அயோத்திதாசப் பண்டிதர் குறிப்பிட்டார். தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவித் தமக்குக் கிடைத்த சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டார். திருக்குறள், நாலடி நானூறு போன்ற நூல்கள் இவ்வாறு அச்சிடப்பட்டவற்றுள் சிலவாகும்.

பிரான்சிஸ் வைட் எல்லிஸ்

பிற பணிகள்

தென்னிந்திய மொழிகள் உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் பயிற்றுவிக்கும் நோக்கோடு, சென்னைக் கல்விச் சங்கம் என அழைக்கப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை 1812-ல் நிறுவினார். எல்லிசின் மொழியியல் ஆய்வுகளுக்கு இக்கல்லூரியே களமாக அமைந்தது.

மறைவு

எல்லீசன் தன் 41-வது வயதில் 1819-ல் இவர் காலமானார்.

நினைவு

சென்னையில் அண்ணா சாலையும் வாலாஜாசாலையும் சந்திக்கும் புள்ளிக்கு அருகில் உள்ள சாலைக்கு எல்லீஸ் சாலை என பெயர்வைக்கப்பட்டது. இந்தச் சாலை உள்ள இந்தப் பகுதி எல்லீஸ்புரம் என்று அழைக்கப்படுகிறது.

உசாத்துணை