நல்லாவூர் கிழார்
- கிழார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிழார் (பெயர் பட்டியல்)
நல்லாவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் அகநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றும் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
நல்லாவூரில் பிறந்தார். கிழார் என்ற சிறப்புப் பட்டம் அரசரால் கொடுக்கப்பட்டது.
இலக்கிய வாழ்க்கை
சங்ககாலத்தில் திருமணச் சடங்குகள் பற்றிய செய்திகள் மருதத்திணைப் பாடலான அகநானூற்றுப்(86) பாடலில் உள்ளது. நற்றிணையிலுள்ள(154) குறிஞ்சித்திணைப்பாடல் அகத்துறைப்பாடல். "இரவுக்குறித் தலைவன் சிறைப்புறமாக வரைவு கடாயது" எனும் துறையின் கீழ் இது வருகிறது.
திருமணச் சடங்குகள் பற்றி
- உழுத்தம்பருப்பு வடையுடன் பெருவிருந்து.
- பந்தல் போட்டுப் புதுமணல் பரப்புதல்.
- மணப்பந்தலில் விளக்கு வைத்து மாலைகள் தொங்கவிடுதல்.
- நிறைமதி நாளில் விடியற்காலத்தில் திருமணம் நடைபெறும்.
- பொதுமக்களின் ஆரவாரத்துடன் வயது முதிர்ந்த பெண்களில் சிலர் தலையில் நிறைகுடத்துடன் முன்னே வருவர். சிலர் புதிய அகல் விளக்குடன் பின்னே வருவர். இடையில் மணப்பெண் அழைத்துவரப்படுவாள்.
- மக்களைப் பெற்றவரும், மங்கலநாண் எனப்படும் வாலிழை அணிந்தவருமாகிய மகளிரில் நான்கு பேர் மணப்பெண் தலையில் நீரில் நனைத்த பூக்களையும், நெல்லையும் தூவி வாழ்த்துவர்.
- வாழ்த்து: 'கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆகு' என்பர். கற்பு நெறியில் வழுவாமல் வாழ்க. நல்ல குழந்தைகளாலும், பொருளாலும் பலவாறாகப் பலருக்கும் உதவி புரிக. உன்னைப் பெற்ற கணவனை விரும்பும் பிணையலாக (பெண்மானாக) நடந்துகொள்க - என்பர்.
- முதல் இரவு: பெற்றோர் தர 'பேர் இல் கிழத்தி ஆகு' என்று சொல்லி ஓரறையில் ஞெரேல் என மணமக்களைக் கூட்டுவிப்பர். மணமகள் குனிந்த தலையுடன் முகத்தைத் துணியால் மூடிக்கொண்டிருப்பாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு மணமகன் முகத்திரையை விலக்குவான். 'உன் விருப்பம் யாது' என்பான். அவள் மகிழ்ந்து அவனை வணங்குவாள். மதைஇய நோக்கோடு அவனைப் பார்ப்பாள்.(பிறகு இணைவர்)
பாடல் நடை
- அகநானூறு 86
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
- நற்றிணை 154
கானமும் கம்மென்றன்றே; வானமும்
வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி,
பல் குரல் எழிலி பாடு ஓவாதே;
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த
வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை
அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது
துஞ்சுதியோ- இல, தூவிலாட்டி!-
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே; சாரல்
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும்,
நிலம் பரந்து ஒழுகும், என் நிறை இல் நெஞ்சே?
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]
- வைரத்தமிழ்-நற்றிணை 154
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
03-Dec-2022, 09:09:02 IST