first review completed

புலவர் கா. கோவிந்தன்

From Tamil Wiki
Revision as of 20:17, 23 July 2022 by Ramya (talk | contribs)
புலவர் கா. கோவிந்தன்

புலவர் கா. கோவிந்தன் (ஏப்ரல் 15, 1915 - ஜூலை 1, 1991) தமிழறிஞர். தகவல் தொகுப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி. சங்கப்புலவர்களை முழுமையாக ஆராய்ந்து தொகுத்தவர் என்ற முறையில் தமிழ் இலக்கியத்தில் நினைவுகூறப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

செய்யாற்றில் காங்க முதலியார், சுந்தரம் இணையருக்கு ஏப்ரல் 15, 1915-ல் கா. கோவிந்தன் பிறந்தார். விவசாயக் குடும்பம். கோவிந்தன் செய்யாறு திண்ணைப் பள்ளிக் கூடத்திலும், செய்யாறு அரசு பள்ளியிலும் பள்ளிக்கல்வி பயின்றார். அவ்வை சு.துரைசாமிப் பிள்ளையின் மாணவர். அறிஞர் அண்ணா உடன் பயின்ற நண்பர். மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வில் வெற்றி பெற்று புலவர் பட்டம் பெற்றார். பி.ஓ.எல்., எம்.ஓ.எல். என்னும் படிப்புகளை வீட்டிலிருந்து படித்தார்.

தனிவாழ்க்கை

1937-ல் மாமன்மகள் கண்ணம்மாவை மணம் செய்துகொண்டார். வேலூர் திருப்பதி தேவஸ்தானம் நடத்திய வெங்கடேஸ்வரா உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக 1941-ல் பணியில் சேர்ந்தார்.

அரசியல்

கா. கோவிந்தன்

கோவிந்தன் முழுநேர அரசியல்வாதி. 19 வயதில் (1934) சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். 1937-ல் நடந்த இந்தி எதிர்ப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆகஸ்ட் 27, 1944-ல் சேலம் திராவிடக்கட்சி மாநாட்டில் முக்கிய பங்கு வகித்தார். தி.க.விலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் தனியாகப் பிரிந்தபோது முப்பது பேர் கொண்ட உள்வட்டக்குழு அமைக்கப்பட்டது. அதில் கோவிந்தன் இருந்தார். 1958-ல் திருவத்திபுரம் பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார். 1962, 1967-ல் செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். தி.மு.க ஆட்சியில் பேரவைத் துணைத் தலைவராக இருந்தார். 1969-ல் அதன் தலைவரானார். மறுபடியும் செய்யாறு தொகுதியில் வெற்றி பெற்று 1977 வரை பேரவை உறுப்பினராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இவரது முதல் நூல் 'திருமாவளவன்' 1951-ல் வெளியானது. 1951-1991 வரை தொடர்ந்து எழுதினார். மொழிபெயர்ப்பு உட்பட இவர் எழுதியவை ஐம்பத்தியொரு புத்தகங்கள். இவர் எழுதிய நூல்களில் சங்ககாலப் புலவர்கள் பற்றியவை பதினாறு. சங்கப் பாடல்கள் தொடர்பாக இவர் தொகுத்தவை இருபத்தியொரு நூல்கள். சைவசித்தாந்த நூல் பதிப்புக்கழகம் இந்நூல்களை வெளியிட்டது. இவரது பிற நூல்களை வள்ளுவர் பண்ணை, மலர் நிலையம், அருணா பதிப்பகம் போன்றவை வெளியிட்டுள்ளன. புலவர் கா. கோவிந்தன் கழுமலப்போர் (1958), தமிழர் வணிகம் (1959) தமிழர் தளபதிகள் (1960), சாத்தான் கதைகள் (1960), தமிழர் வாழ்வு (1960) தமிழகத்தில் கோசர் (1960) போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

சங்கப்புலவர் வரிசை நூல்கள்
கலிங்கம் கண்ட காவலர்

சங்கப்புலவர்களை முழுமையாக ஆராய்ந்து முதலில் எழுதியவர் கோவிந்தன். சங்கப் புலவர்கள் பற்றிப் பல்வேறு தலைப்புகளில் 16 புத்தகங்களை எழுதியிருக்கிறார் கோவிந்தன். உவமையாகப் பெயர் பெற்றோர் (1953), பெண்பால் புலவர்கள் (1953), மாநகர் புலவர்கள் - மூன்று பகுதிகள் (1954), காவலர் பாவலர் (1953), கிழார் பெயர் பெற்றோர் (1954), வணிகப்புலவர்கள் (1954), உழைப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றோர் (1955), குட்டுவன் கண்ண னார் முதலிய 80 புலவர்கள் (1956) என்னும் தலைப்புகளில் சங்கப்புலவர் வரிசை நூல்கள் வந்துள்ளன.சங்ககால அரசர்களைச் சேரர், சோழர், பாண்டிய வள்ளலார், அகுதை முதலிய 44 பேர், திரையன் முதலிய 29 எனும் ஆறு தலைப்புகளில் தொகுத்திருக்கிறார். இவை அனைத்து புத்தகங்களும் 1960-க்கு முன் எழுதப்பட்டவை. அவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.[1]

மொழிபெயர்ப்பாளர்

கோவிந்தன் நல்ல மொழிபெயர்ப்பாளர். 1954-ல் டாக்டர் கால்டு வெல்லின் திராவிடமொழி ஒப்பியல் நூலைத் 'திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்' என்னும் தலைப்பில் எழுதினார். பி.டி. ஸ்ரீனிவாச அய்யங்காரின் History of Tamil நூலை தமிழர் வரலாறு என்ற தலைப்பிலும் (1990), Pre Aryam Tamil culture நூலை 'ஆரியருக்கு முந்திய தமிழ்ப் பண்பாடு' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார்(1991).

மொழி நடை

கோவிந்தனின் நடை எளிமையானது. மிகச்சிறிய தொடர்கள்; ஆரவாரமோ ஆவேசமோ இல்லாத மொழி; படிக்கும்போது போலித்தனமில்லாத சொற்சேர்க்கை; சொல்லும் முறையில் தெளிவு.

விருதுகள்

  • 1989-ல் அண்ணா விருது
  • 1980-ல் திரு.வி.க விருது
  • 1990-ல் பவளவிழா பாராட்டு

மறைவு

புலவர் கா. கோவிந்தன் ஜூலை 2, 1991-ல் தன் எழுபத்தி ஐந்தாவது வயதில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • திருமாவளவன்
  • நக்கீரர்
  • பரணர்
  • கபிலர்
  • ஔவையார்
  • உறுப்பாலுல் சிறப்பாலும் பெயர் பெற்றோர்
  • அதியன் விண்ணத்தனார் முதலிய 65 புலவர்கள்
  • குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்
  • பேயனார் முதலிய 39 புலவர்கள்
  • சேரர்
  • சோழர்
  • பாண்டியர்
  • வள்ளல்கள்
  • கால்டுவெல் - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
  • இலக்கிய வளர்ச்சி
  • அறம் வளர்த்த அரசர்
  • நற்றிணை விருந்து
  • குறிஞ்சிக் குமரி
  • முல்லைக் கொடி
  • கூத்தன் தமிழ்
  • கழுகுமலைப் போர்
  • மருதநில மங்கை
  • பாலைச்செல்வி
  • நெய்தற்கன்னி
  • கலிங்கம் கண்ட காவலர்
  • தமிழர் தளபதிகள்
  • சாத்தான் கதைகள்
  • மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்
  • தமிழர் வாழ்வு
  • பண்டைத் தமிழர் போர்நெறி
  • காவிரி
  • சிலம்பொலி
  • புண் உமிழ் குருதி
  • அடு நெய் ஆவுதி
  • கமழ் குரல் துழாய்
  • சுடர்வீ வேங்கை
  • நுண்ணயர்
  • தமிழர் வரலாறு
சங்கப்புலவர் வரிசை நூல்கள்
  • உவமையாகப் பெயர் பெற்றோர் (1953)
  • பெண்பால் புலவர்கள் (1953)
  • மாநகர் புலவர்கள் - மூன்று பகுதிகள் (1954)
  • காவலர் பாவலர் (1953)
  • கிழார் பெயர் பெற்றோர் (1954)
  • வணிகப்புலவர்கள் (1954)
  • உழைப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றோர் (1955)
  • குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள் (1956)
  • அகுதை முதலிய நாற்பத்து நால்வர்
  • திரையன் முதலிய இருபத்து ஒன்பதின்மர்
மொழிபெயர்ப்பு
  • திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்
  • History of Tamil (1990)
  • Pre Aryam Tamil culture (1991)

உசாத்துணை

  • அ.கா பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்

இணைப்பு


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.