64 சிவவடிவங்கள்: 18-கங்காதர மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கங்காதர மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் பதினெட்டாவது மூர்த்தம் கங்காதர மூர்த்தி. சிவபெருமான் பொங்கி வந்த கங்கை வெள்ளத்தை அடக்கித் தன் திருமுடியில் தாங்கிய திருக்கோலமே கங்காதர மூர்த்தி என அழைக்கப்படுகிறது. கங்கையை ஏந்தியவன் என்று பொருள்படும்.
தொன்மம்
திருக்கயிலையில் பார்வதி தேவி சிவபெருமானின் இரு கண்களையும் தன் கையால் விளையாட்டாய் மூடினார். உடனே உலகம் இருண்டது. உயிர்கள் வாடின. இதனையறிந்த சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அனைவரையும் காத்தார். ஒளி வந்ததால் அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கின. அனைவரும் சிவபெருமானைப் போற்றித் துதித்தனர். இதனைக் கண்ட பார்வதி தேவி அவசரமாகத் தன் கைகளைக் கண்களிலிருந்து எடுத்தார். இதனால் அவரது பத்து கைவிரல்களில் இருந்த வியர்வைத் துளிகள் பத்தும் கங்கையாக மாறி மூவுலகம் முழுவதும் பரவின. பெருத்த சேதத்தையும் அழிவையும் உண்டாக்க அவை முயன்றன. இதனைக் கண்ட மூவுலகத்தினரும் அஞ்சி சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமான், அவ்வெள்ளத்தை அடக்கி அதனைத் தனது திருமுடியில் தரித்தார். அச்சம் நீங்கிய அனைவரும் சிவபெருமானைப் போற்றித் துதித்தனர். நான்முகன், திருமால், இந்திரன் மூவரும் சிவபெருமானிடம், “இறைவா! பார்வதி தேவியின் கைவிரல் வியர்வையால் உண்டான கங்கை பெரும் புனிதமானது. அதை உங்கள் திருமுடியில் தரித்ததால் அது மேலும் புனிதமடைகிறது. அத்தகைய புனிதப் பொருளை எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தருள வேண்டும்” என வேண்டினர். அதன்படியே இந்திரன் தனது அமராவதி நகருக்கும், நான்முகன் தனது மனோவதி நகருக்கும், திருமால் தனது வைகுண்டத்திற்கும் கங்கையைக் கொண்டு வந்தனர். பிற்காலத்தில் பகீரதன் தனது தவத்தினால் கங்கையை பூலோகத்திற்குக் கொண்டு வந்தான்.
கங்கை வெள்ளத்தின் வேகத்தை குறைத்துத் தனது சடைமுடியின் ஒர் திருமுடியில் தாங்கியிருப்பதால் சிவபெருமானுக்கு கங்காதர மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.
வழிபாடும் பலன்களும்
இமயமலையே கங்காதர மூர்த்தியின் இருப்பிடம் எனப்படுகிறது. இமயமலையில் கங்காதர மூர்த்தியை மானசீகமாய் வணங்கி அங்குள்ள கங்கை நீரைக் கொண்டு தெளிக்கும் இடம் புனிதமாகும் என்றும், கங்காதர மூர்த்திக்கு மல்லிகைப்பூவால் அர்ச்சனையும், பாலில் செய்த இனிப்பு பண்ட நைவேத்தியமும் திங்கள் கிழமை மாலையில் செய்தால் செல்வச் செழிப்பும், மறுபிறவி இன்மையும் கிடைக்கும் என்றும், கங்கை நீரை வீட்டில் கலசத்தில் வைத்து வழிபட திருமகள் அருள் (லக்ஷ்மி கடாக்ஷம்) உண்டாகும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 19:02:51 IST