first review completed

பாலகவி செண்பகமன்னார்

From Tamil Wiki
Revision as of 17:41, 23 April 2022 by Logamadevi (talk | contribs)

பாலகவி செண்பகமன்னார் (சீனிவாச அய்யங்கார்) (1780-1840) 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கர்னாடக இசைக் கலைஞர். நவராத்திரி நாடகக் கீர்த்தனை எழுதியவர். அத்வைத வேதாந்தத்தில் தேர்ச்சி கொண்டவர்.

இளமை, கல்வி

செண்பகமன்னார் செண்பகாராண்யம் என்ற ராஜமன்னார்(ராஜகோபாலப் பெருமாளின் பெயர்) கோவிலில் இருந்து அரியலூரில் குடியேறி அங்கு ஜமீந்தாரின் ஆஸ்தான் வித்வான்களாக இருந்த தென்கலை வைணவக் குடும்பத்தில் 1780-ல் பிறந்தார்.

அவர்களில் பலர் தமிழிலும் இசைத்துறையிலும் புலமை பெற்றிருந்தார்கள். பாலசரஸ்வதி, பாலகவி, முதலிய பட்டங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

இசைப்பணி

இவர் வைணவராக இருந்தாலும் அத்வைத சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவர். பலரும் இவரிடம் வேதாந்த பாடம் கற்றனர். செண்பகமன்னார் பல தெய்வங்கள் மீதும் அவ்வூர் ஜமீந்தார் மீதும் வடமொழி மற்றும் தமிழ் கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார். நவராத்திரி விழாவை சிறப்பித்து ’நவராத்திரி நாடகக் கீர்த்தனை’யும் குடந்தை சாரங்கபாணி மீது ’நொண்டி நாடகமும்’ எழுதினார்.

அவருடைய பரம்பரையில் அய்யாவய்யங்கார், சடகோபய்யங்கார் முதலானோர் கர்னாடக இசையில் புகழ் பெற்றிருக்கிறார்கள். இந்த சடகோபய்யங்காரிடம்தான் உ.வே.சாமிநாதையர் இளமையில் தமிழ் கற்றார்.

செண்பகமன்னார் கீர்த்தனைகளில் ஒரு பாடல்:

ராகம்: நாட்டை, தாளம்: ஆதி

பல்லவி

நாமகள் கொலுவிருக்கும் விந்தையை

நாவினால் தெரிந்துரைக்ககக் கூடுமோ?

பூமகளை மணிமார்பில் தரித்திடும்

புலவர் போற்றிமகிழும் மாயன்

அனுபல்லவி

மாமறை புகழும் உந்தித் கமலந்

தன்னில் உதித்திடும் போதுன்

மாமன் மகிழ விளங்கும்

என்றன் தகைமைக் குழலே

உ.வே.சா அச்சிட்ட இசைக்கொத்திலே செண்பகமன்னார் கீர்த்தனங்கள் 11 இடம் பெற்றிருக்கின்றன. அவை எல்லாவற்றிலும் ஈற்றடியில் பாலகவி சண்பகமன்னார் என்று அமைத்திருக்கிறது.

இணைப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.