first review completed

மாயாவி

From Tamil Wiki
Revision as of 14:56, 19 April 2022 by Logamadevi (talk | contribs)
மாயாவி

மாயாவி (அக்டோபர் 2, 1912 - 1988). தமிழில் பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதியவர். கலைமகள், கல்கி ஆகிய இதழ்களில் தொடர்கதைகளாக அவை வெளிவந்தன. பெரும்பாலும் குடும்பப்பின்னணி கொண்ட உணர்ச்சிகரமான கதைகளை எழுதினார்

நாறும்பூநாத தேசிகர்

பிறப்பு, கல்வி

மாயாவியின் இயற்பெயர் எஸ். கே. ராமன். செங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த சாம்பூர் வடகரை எனும் ஊரில் அக்டோபர் 2, 1912 அன்று பிறந்தார். (தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் பிறந்த ஊர் இது) தென்காசி போர்டு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வரை பயின்றார். அங்கே நாறும்பூநாத தேசிகர் என்னும் ஆசிரியர் அவருக்கு தமிழிலக்கியத்தையும் கலைமகள் இதழையும் அறிமுகம் செய்தார். நாறும்பூநாத தேசிகர் பலருக்கு ஊக்கமூட்டும் ஆசிரியராக நினைவுகளில் பதிவாகியிருக்கிறார்.

தனிவாழ்க்கை

மாயாவி பல தொழில்களைச் செய்தவர். தென்காசியில் ஒரு புகைப்பட நிறுவனம் நடத்தினார். சுருக்கெழுத்து தட்டச்சு பயின்று சென்னையில் ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் சிலகாலம் உதவியாளராகப் பணிபுரிந்தார். பேனா மை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றினார். பின்னர் 1942-ல் மும்பை சென்று அங்கே ஓர் இங்கிலாந்து நிறுவனத்தில் தட்டச்சாளராகப் பணியாற்றினார். பின்னர் அமெரிக்க வர்த்தக நிறுவனம் ஒன்றில் சுருக்கெழுத்தாளராக பணியாற்றினார்

இந்திய விடுதலைக்குப்பின் மத்திய அரசின் செய்தி தொடர்பு துறையில் மும்பையை மையமாக்கி தயாரான செய்திப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களுக்கு தமிழ் வசன மொழியாக்கத்தை எழுதுவது, குரல்கொடுப்பது ஆகிய வேலைகளைச் செய்தார். பின்னர் அகில இந்திய வானொலியில் பணி கிடைத்து டில்லியில் இயங்கிய தென்கிழக்கு ஆசிய தமிழ் ஒலிபரப்புத் துறையில் செய்தி எழுத்தாளராகப் பணியாற்றினார். 1961ல் சென்னை வானொலி நிலையத்திற்கு மாற்றலாகி வந்து நிலைய எழுத்தாளராக பொறுப்பில் இருந்தார்.

கண்கள் உறங்காவோ-கல்கி

இலக்கியவாழ்க்கை

1937-ல் கலைமகள் இதழில் முதல்சிறுகதை ஜாதிவழக்கம் வெளியாகியது. கலைமகள், கல்கி போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதினார். அகில இந்திய வானொலிக்காக வானொலி நாடகங்களும் எழுதியிருக்கிறார். ஸ்டேஜ் மாயா என்ற பேரில் ஒரு நாடகக்குழுவும் வைத்திருந்தார். அதில் பெரும்பாலும் வானொலி நாடகங்களை நடத்தினார். மாயாவி எழுதிய நாவல்களில் கண்கள் உறங்காவோ சிறந்தது. கல்கி இதழில் வெளிவந்தது

இலக்கிய இடம்

மாயாவி பொதுவாசகர்களுக்குரிய குடும்பப்பின்னணியும் நாடகீய நிகழ்வுகளும் கொண்ட நாவல்களை எழுதியவர். இந்திய சுதந்திரத்தை ஒட்டிய காலகட்டத்தின் சமூகப்பின்னணியைச் சித்தரிக்கும் கதைகள் அவை.

விருதுகள்

தமிழ்வளர்ச்சிக்கழக விருது (வாடாமலர்)

நூல்கள்

மாயாவி 150 சிறுகதைகளும் 9 நாவல்களும் எழுதியுள்ளார்

நாவல்
  • கண்கள் உறங்காவோ
  • கதி
  • மக்கள் செல்வம்
  • சலனம்
  • ஒன்றே வாழ்வு
  • வாடாமலர்
  • மதுராந்தகியின் காதல்
சிறுகதை
  • சாமுண்டியின் சாபம்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.