under review

கழுகுமலை முருகன் கோயில்

From Tamil Wiki
Revision as of 13:31, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)
கழுகாச்சலமூர்த்தி கோயில்

கழுகுமலை முருகன் கோயில் (கழுகாசலமூர்த்தி கோயில்) தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்த, முருகக்கடவுளுக்கான குடைவரைக் கோயில்.

அமைவிடம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் கழுகுமலை பேரூராட்சியில் அமைந்துள்ள கோயில். ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ளது.

தல வரலாறு

ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். ராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார். இதை அனுமார் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி என்ற கழுகு ராமனிடம், தன்னால் தன் சகோதரனுக்கு ஈமக்கிரியை செய்ய முடியாமையால் ஏற்பட்ட பாவம் தீர்க்க வழி கேட்டார். கஜமுகபர்வதத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்தால் பாவம் தீரும் என்று ராமன் கூறினார்.

பல ஆயிரம் ஆண்டுகள் கழுகு முனிவரான சம்பாதி கஜமுக பர்வதத்தில் தங்கியிருந்தார். முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இங்கு வந்தபோது முனிவர்களையும், மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்ததைக் கண்டார். முருகன் தாரகாசூரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார். வதம் செய்த களைப்பு தீர, கஜமுக பர்வதத்தில் ஒய்வெடுத்தார். சம்பாதி அவருக்கு தங்கும் இடம் தந்து சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். முருகன் சம்பாதிக்கு முக்தி தந்தார். சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரியைகள் செய்ய முடியாத பாவம் நீங்கியது. கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதம் அவரது பெயரால் கழுகுமலை என பெயர் பெற்றது.

அமைப்பு

கோவிலின் கருவறையும், அர்த்த மண்டபமும் கழுகு மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகைவரைக்கோயில். மலையே கோபுரமாக உள்ளது. இக்கோயில் மூலவராக முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் உள்ளனர். கழுகாச்சலமூர்த்தி மேற்கு பார்த்தும், வள்ளி தெற்கு பார்த்தும் , தெய்வானை வடக்கு பார்த்தும் உள்ளனர். நான்கு அடி உயரத்தில் கழுகாச்சலமூர்த்தி திருமேனி உள்ளது. முருகனுக்கும் சிவனுக்கும் தனிப் பள்ளியறை உள்ளது.

சிற்பங்கள்

கழுகாச்சலமூர்த்தி முக ஒன்று, கரம் ஆறு, தன் இடக்காலை மயிலின் கழுத்திலும் வலது காலை தொங்கவிட்டும் கையில் கதிர்வேலுடன் காட்சி தருகிறார். பிற கோயில்களைப்போல் அசுரன் மயிலாக அல்லாமல் இந்திரன் மயிலாக உள்ளார். இத்தலத்தில் குருவும், செவ்வாயும் இருப்பதால் மங்கள ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

சிறப்புகள்

அருணகிரிநாதர் தமது திருப்புகழில் கழகுமலை முருகனைப் பாடியுள்ளார். கந்த புராணத்தின் ஆசிரியர் காச்சியப்பர், குமரன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும் அதில் ராஜபோகமாக வீற்றீருக்கும் தலம் கழுகுமலை என்கிறார்.

கழுகுமலை முருகன் கோயில் எதிரே எட்டயாபுரம் சமஸ்தான மன்னரின் சிறு அரண்மனை அமைந்துள்ளது. இக்கோவிலிலுள்ள முருகன் எட்டையபுர மன்னர்களின் குலதெய்வமாக வழிபடப்பட்டார். இம்மன்னர்களின் திருப்பணிகள் பல இக்கோவிலில் உள்ளன.

திருவிழா

வைகாசி விசாகத்தன்று வசந்தமணடபம் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியில் பதின்மூன்று நாட்ளும், தைப்பூசத்தில் பத்து நாட்களும், பங்குனி உத்திரம் பதின்மூன்று நாட்களும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றன.

உசாத்துணை



✅Finalised Page