சேரமான் இளங்குட்டுவன்

From Tamil Wiki
Revision as of 15:57, 17 April 2022 by Ramya (talk | contribs)

சேரமான் இளங்குட்டுவன் சங்க காலப் புலவர். அகநானூற்றில் பாலைத்திணையில் ஒரு பாடல் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சேர அரசர்கள் குட்ட நாட்டிற்கு உரிமை பெற்றதால் தம் பெயர்களில் குட்டுவன் என்பதையும் இணைத்திருந்தனர். பல்யானைச்செல்கெழு குட்டுவன், காடல்பிறகோட்டிய செங்குட்டுவன், குட்டுவஞ்சேரல் மரபில் வந்தவன் சேரமான் இளங்குட்டுவன்.

இலக்கிய வாழ்க்கை

இளமையிலேயே இலக்கண இலக்கியங்களில் கற்றார். செய்யுள்கள் பல இயற்றினார். நெடுந்தொகை என்றழைக்கப்படும் அகநானூற்றில் பாலைத்திணையில், தலைமகன் ஒருவனைக் காதலித்து தன் இல்லத்தில் இருந்தால் தன் அன்பு வாழ்க்கைக்கு இடையூறு வருமென அஞ்சி தலைவனின் ஊர் சென்றுவிட்ட தலைவியை நினைத்து செவிலித்தாயின் கூற்றாக அமைந்த பாடல் சேரமான் இளங்குட்டுவன் பாடியது.

பாடல் நடை

நோகோ யானே; நோதகும் உள்ளம்;
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ,
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி,
வெம்பும்மன், அளியள்தானே இனியே,
வன்கணாளன் மார்புஉற வளைஇ,
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண்
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு,
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின்,
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப்
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல்
வல்லுநள்கொல்லோ தானே எல்லி
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றி,
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின்
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர்
கை விடு சுடரின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?

உவமைச்சிறப்பு
  • கோங்கு மலர்ந்த காட்சி, மீன்பல விளங்கும் வான் போலும்
  • காற்றடிக்க அம்மலர் உதிர்தல் கானவர் பரண் மீதிருந்து யானையை விரட்ட வீசும் தீப்பந்தம் போலும்

உசாத்துணை