under review

ம. தவசி

From Tamil Wiki
ம. தவசி

ம. தவசி (ஏப்ரல் 19, 1976 - மார்ச் 9, 2013) தமிழ் எழுத்தாளர். கவிதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார் மதுரை வட்டாரத்தின் கிராமத்துப் பின்புலத்தில் யதார்த்தச் சித்தரிப்புள்ள கதைகளை எழுதியவர்.

பிறப்பு, கல்வி

ம. தவசி முதுகுளத்தூரில் உள்ள இளம்செம்பூர் கிராமத்தில் மயில்சாமி - இருளாயி தம்பதியருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் ம. தவசியாண்டி. தமிழ் இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ம.தவசி மதுரை 'தினபூமி’ நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.இவருடைய மனைவி பெயர் அங்காளேஸ்வரி. இவருக்கு சங்கமித்ரா, வினோத் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மறைவு

ம.தவசி புற்றுநோயின் காரணமாக உடல்நலிவுற்றார். அப்போது 'அப்பாவின் தண்டனைகள்’ என்ற புதிய நாவலை எழுதத் தொடங்கி, நிறைவு செய்தார். மார்ச் 9, 2013-ல் தன் 37-வது வயதில் காலமானார். இவர் இறந்து ஓர் ஆண்டுக்குப் பின்னர், 'அப்பாவின் தண்டனைகள்’ என்ற தன்வரலாற்று நாவல் வெளிவந்தது.

இலக்கிய வாழ்க்கை

ம. தவசி

கல்லூரி மாணவராக இருக்கும்போது 'குருத்து’ என்ற கையெழுத்து மும்மாத இதழை நடத்தினார். வெவ்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வந்தார். சேவல் சண்டையை மையப்படுத்திக் கள ஆய்வின் வழியாகச் 'சேவல்கட்டு’ என்ற குறுநாவலை எழுதினார். சேவல் சண்டைக்காகப் பழக்கப்படுத்தப்பட்டு 'சேவல்கட்டில்’ இறக்கிவிடப்படும் இரண்டு சேவல்களுக்கு இடையில் மனிதர்களின் பகட்டு, பெருமிதம், அவமானம், மரியாதை ஆகியனவும் அகப்பட்டுக் கொள்கின்றன என்பதை வெளிப்படுத்திய நாவல் இது. இவர் 'அப்பாவின் தண்டனைகள்’ என்ற தலைப்பில் தன்வரலாற்று நாவலையும் எழுதியுள்ளார்.

இலக்கிய இடம்

ம. தவசி மதுரை வட்டாரத்து கிராமியச் சூழலை எழுதிய படைப்பாளி. தமிழில் சேவல் சண்டையைப் பற்றிச் எழுதப்பட்ட முதல் நாவல் அவருடைய சேவல்கட்டு. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலுடன் அந்நாவல் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.

விருதுகள்

2011-ல் இளைஞர்களுக்கு சாகித்திய அகாதமி வழங்கும் 'யுவ புரஸ்கார்’ விருதை முதன்முதலில் பெற்றவர் ம.தவசி.

இலக்கிய இடம்

ம.தவசி மதுரை வட்டார கிராமிய வாழ்க்கையைச் சித்தரித்த படைப்பாளிகளில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

நூல்கள்

சிறுகதை
  1. பனைவிருட்சி -
  2. ஊர்களில் அரவாணி - 2012
  3. பெருந்தாழி -
  4. நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம் - 2011
கவிதை
  1. உள்ளொளி - 2012
குறுநாவல்
  1. சேவல்கட்டு - 2009
நாவல்
  1. அப்பாவின் தண்டனைகள் - 2014

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:35 IST