under review

காதல் ஆத்திச்சூடி

From Tamil Wiki
Revision as of 16:01, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
காதல் ஆத்திச்சூடி நூல்

காதல் ஆத்திச்சூடி (2020) ஆத்திச்சூடியின் அகரவரிசையில் காதலை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல். இதனை எழுதியவர் தபூ சங்கர்.

வெளியீடு

காதல் ஆத்திச்சூடி நூல், விஜயா பதிப்பகத்தால் அச்சு நூலாக வெளியிடப்பட்டது. பிப்ரவரி 20, 2020-ல் கிண்டிலில் வெளியானது. இந்நூலை எழுதியவர் கவிஞர் தபூ சங்கர்.

நூல் அமைப்பு

காதல் ஆத்திச்சூடி, ஆத்திச்சூடியின் அகரவரிசையில் ஒரு வரிப் பாவாகவும் அதனை விளக்கும் தனிக்கவிதையும் என்ற அமைப்பில் இயற்றப்பட்டது. 'அவளிடம் மதி மயங்கு, ஆயிரம் முறை அவள் கண்ணில் படு, இதயத்தை அலங்கரி, ஈர்க்கும் படி நட' எனத் தொடங்கி ஒவ்வொரு வரிக்கும் ஒரு பாடல் இடம்பெற்றது.

பாடல்

அவளிடம் மதி மயங்கு

உனக்காகப் பிறந்தவள்
உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்...
சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.
அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்!
உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்து
கிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம்
கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை.
உன் காதலின் கடமை என்ன தெரியுமா?
உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு
உடனே அவளிடம் ஓட வேண்டும்.
மீண்டும் தொலைப்பதற்காக!

ஆயிரம் முறை அவள் கண்ணில் படு!

அவள் திரும்பிப் பார்க்கும் இடத்தில் எல்லாம் நீ அவள்
கண்ணில் பட வேண்டும்.
அதிசயமாய் அதிகாலை வாசல் தெளிக்க அவள் வரும்
நாளில் பனித் துளி மாதிரி பார்வையில் படு.
குடும்பத்தோடு அவள் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டுத்
திரும்பும் நள்ளிரவிலும் அவள் கண்ணில் படு.
எங்கெங்கும் அவள் உன்னைப் பார்க்க வேண்டும்.
இவன் ஒருத்தனா... இல்லை ஏழு பேரா என அவள் குழம்ப
வேண்டும்.
குட்டையைக் குழப்பி மீன் பிடிப் பதைப் போல,
அவள் மனதைக் குழப்பி மனதைப் பிடிக்கும் வித்தை இது!

ஒளவியும் ஒளவாமலும் பழகு!

இது என்ன வார்த்தை என்று முழிக்காதே.
தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், அணைத்தும்
அணைக்காமலும் என்ற வார்த்தைகள் எல்லாம் கலந்தெடுத்த,
காதலுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட அழகான வார்த்தை
இது.
தொடுவானம் எப்போதும் பூமியைத் தொட்டுக்கொண்டு
இருப்பது மாதிரித்தான் தெரியும். ஆனால் தொடாது.
அதற்காக வானமும் பூமியும் தொட்டுக்கொள்வதே இல்லை
என்று அர்த்தம் அல்ல.
மாபெரும் வானத்துக்குள்தான் இருக்கிறது இந்த பூமி.
அப்படித்தான் நீயும் அவளும் பழக வேண்டும்.
அவள் வானமாய்... நீ பூமியாய்!
காதல் காலம் என்பது, பார்ப்பதற்கும் பேசுவதற்குமே போதாது.
ஆகையால் இப்போதைக்கு அவளைப் பார்த்துக்கொண்டும்
பேசிக்கொண்டும் இரு.
தொடுதலையும் படுதலையும் அவ்வப்போது அனிச்சையாய்
காதலே அரங்கேற்றிக்கொள்ளும்!

மதிப்பீடு

காதல் ஆத்திச்சூடி, ஆணியப் பார்வையில் எழுதப்பட்டுள்ளது. கவிதைகளை ரசிக்கும் சில காதலர்களுக்கான நூலாக மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2024, 15:45:47 IST