ஜெயலக்ஷ்மி உதயகுமார்
ஜெயலக்ஷ்மி உதயகுமார் (பிறப்பு: ஏப்ரல் 20, 1965) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கல்வியாளர், நாடக நடிகர், பேச்சாளர், செயல்பாட்டாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜெயலக்ஷ்மி உதயகுமார் இலங்கை நாட்டின் வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மாமுனை செம்பியன்பற்றில் கிருஷ்ணபிள்ளை, இரத்தினம் இணையருக்கு ஏப்ரல் 20, 1965-ல் பிறந்தார். மாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்றார். யாழ் உடுத்துறை மகாவித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வி கற்றார். யாழ் முத்துதம்பி மகாவித்தியாலயத்தில் உயர் கல்வி பயின்றார். போராதனைப் பல்கலைக்கழக கலைப்பட்டதாரி. கல்வி டிப்ளோமாவை தேசிய கல்வி நிறுவனத்தில் முடித்தார். யாழ் பல்கலைக்கழகத்தில் கலாசாரத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றார். முகாமைத்துவ டிப்ளமோ மீபே தேசிய கல்வி நிறுவனத்தில் முடித்தார். யாழ் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டம் பெற்றார்.
ஆசிரியப்பணி
ஜெயலக்ஷ்மி உதயகுமார் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். 1988-ல் ஆசிரியர் நியமனம் பெற்றார். 2000-2002 வரை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வருகைதரு விரிவுரையாளராக இருந்தார். 2002 முதல் யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரியின் விரிவுரையாளராகவும் நியமனம் பெற்றார்.
அமைப்புச் செயல்பாடுகள்
- நல்லூர் தெற்கு மாதர் சங்கத்தின் தலைவி. இம்மாதர் சங்கத்தின் வழியாக பெண்களுக்கு வட்டியில்லா கடன் வசதிகள் பெற வழிவகை செய்தார்.
- பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம், முதியோர் பராமரிப்பின் அவசியம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பெண்கள் உரிமைகள் தொடர்பாகவும் சட்ட ஆலோசனைகளை மேற்கொள்ளல், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உளவியல் ஆலோசனை வழங்கல், யாழ் தேச வழமை சட்டம் தொடர்பான விளக்கம் என சமூக ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு செயல்பாடுகளை மேற்கொண்டார்.
- வடமாகாண சபையின் பெண்கள் அமைப்பின் காப்பாளர்
- உயர்நீதிமன்றத்தின் ஜுரி சபையின் அங்கத்தவர்
- நல்லூர் லியோ கழகத்தின் லியோ ஆலோசகராகர், மனித உரிமை சமூக ஏற்பாட்டாளர், யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் உப செயலாளர்.
இலக்கிய வாழ்க்கை
ஜெயலக்ஷ்மி உதயகுமார் 1985 முதல் எழுதி வருகிறார். கவிதை, கட்டுரை, சிறுகதை, ஆய்வுக்கட்டுரைகள், சமய ரீதியிலான கட்டுரைகள், பாடல், நாடகப் பிரதி, நூல் விமர்சனம் ஆகியவை எழுதினார். இவரின் கட்டுரைகள் கல்வி, விழுமியங்கள், சமூக பிரச்சினைகள், இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தன. இவரின் ஆக்கங்கள் ஈழநாதம் பத்திரிகையிலும் இலங்கையில் வெளிவரும் சில சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. World Vision என்ற அமைப்புடன் இணைந்து 'அனர்த்த முகாமைத்துவம்' என்ற நூலை வெளியிட்டார்.
விருதுகள்
- 2004-ம் ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் இவரின் கவிதை முதலாமிடம் பெற்றமைக்காக நல்லூர் பிரதேச செயலகத்தின் கௌரவிப்பு.
நூல் பட்டியல்
- அனர்த்த முகாமைத்துவம்
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.