under review

பெண்மதி போதினி

From Tamil Wiki
Revision as of 14:06, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பெண்மதி போதினி (1891) மகளிர் மாத இதழ். சென்னையிலிருந்து வெளிவந்தது. ஆசிரியர் பெயர் பற்றிய குறிப்பு இதழில் வெளியிடப்படவில்லை. இவ்விதழ் எவ்வளவு வருடங்கள் வெளிவந்தது என்ற விவரங்களை அறிய இயலவில்லை.

பிரசுரம், வெளியீடு

பெண்மதி போதினி மகளிர் நலனுக்காக வெளிவந்த மாத இதழ். டிசம்பர் 1891 முதல் வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் பெயர் பற்றிய குறிப்பு இதழில் இடம் பெறவில்லை.

இதழின் நோக்கம்

பெண்களுக்கு நல்லறிவு புகட்டுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு பெண்மதி போதினி இதழ் வெளிவந்தது.

பெயர்க் காரணம்

பெண்மதி போதினி இதழின் பெயர்க் காரணம் குறித்து ஆசிரியர், “இந்தப் பெயருள்ள தமிழ் மாதாந்திர பத்திரிகை ஒன்று இன்னும் பெண்களுக்கு உபயோகமாகப் பிரசுரித்து வந்தால், இதனால் சகல ஸ்த்ரீ ஜாதிகளும் சீர்திருத்தத்தையும், நாகரிகத்தையும், அமைதியையும், ஒழுக்கத்தையும் சாதுரியத்தையும் உடையவர்களாய், விதிவிலக்குகளை நன்றாக உணர்ந்து இல்வாழ்க்கை புரிவார்கள் என நம்பியே பெண்களுக்கு நல்ல புத்தியைப் போதிக்க வேண்டுமென்னும் கருத்தால், இதற்கு அக்கருத்து விளக்கத்திற்கு ஏற்ப ’பெண்மதி போதினி’ என்னும் பெயர் சூட்டப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளடக்கம்

பெண்மதி போதினி 64 பக்கங்களுடன் வெளிவந்தது. சந்தா, ஆசிரியர் குறிப்பு போன்ற விவரங்கள் காணப்படவில்லை. பெண்களின் கல்வி, சுகாதாரம் பற்றிய கட்டுரைகள் வெளியாகின. விடுகதைகள், பழமொழிகள் அதிக அளவில் இடம் பெற்றன. ஒரு இதழில் வெளியான விடுதைகளுக்கான விடைகள் மறு மாத இதழில் வெளியிடப்பட்டன. பெண்களின் முன்னேற்றம் கருதிப் பல தலையங்கங்கள் வெளியாகின. சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதைகள் போன்றவற்றிற்கும் இவ்விதழ் இடமளித்தது. படங்களுடன் பல கட்டுரைகள் வெளியாகின. பிற இதழ்களில் வெளியான முக்கியப் பகுதிகள் இவ்விதழில் மறுபதிப்பு செய்யப்பட்டன. பெண் கல்வியின் மேன்மையை விளக்கும் பல கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றன.

இதழ் நிறுத்தம்

பெண்மதி போதினி இதழ் எத்தனை ஆண்டு காலம் வெளிவந்தது, எப்போது நின்று போனது என்ற குறிப்புகள் கிடைகவில்லை.

மதிப்பீடு

பெண்கள் நலம், முன்னேற்றம் போன்ற செய்திகளைக் கொண்டு வெளிவந்த முன்னோடி மகளிர் இதழ்களுள் ஒன்றாக பெண்மதி போதினி இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

  • தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகம், எழும்பூர், சென்னை.



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Nov-2023, 01:53:39 IST