under review

அபிதா

From Tamil Wiki
Revision as of 21:35, 8 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Jeyamohan)
அபிதா

அபிதா (1970) லா.ச. ராமாமிர்தம் எழுதிய குறுநாவல். நனவோடை உத்தியில் அமைந்த நாவல். நினைவுகள், சொல்விளையாட்டுக்கள், அடுக்குச்சொற்றொடர்கள் வழியாகச் செல்லும் இந்நாவல் பெண்ணில் தெய்வக்கூறை கண்டுகொள்ளும் லா.ச. ராமாமிர்தத்தின் பார்வையை முன்வைக்கிறது.

எழுத்து, பிரசுரம்

1968-ல் லா.ச. ராமாமிர்தம் தென்காசியில் பணியாற்றிய நாட்களில் நாகர்கோயிலில் தங்கியிருந்து இந்நாவலை எழுதினார். 1970-ல் வெளிவந்தது.

கதைச்சுருக்கம்

அம்பி என்னும் மையக் கதாபாத்திரம் தன் மனைவி சாவித்ரியுடன் கரடிமலை என்னும் ஊருக்கு வருகிறான். தன் இளமைப்பருவத்தையும் கரடிமலையில் வாழ்ந்த நாட்களில் தன் உளம்கவர்ந்த சகுந்தலாவையும் நினைத்துக்கொள்கிறான். இளமையில் ஊரைவிட்டுக் கிளம்பிய அம்பி சாவித்ரியின் அப்பாவை சந்திக்கிறான். அவர் அவனுக்கு பெண்ணையும் அளித்து தொழிலையும் கொடுக்கிறார். ஆனால் தம்பதிகளுக்கு குழந்தையில்லை. அது ஒரு கசப்பாக அவர்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது. சகுந்தலாவை தேடிவரும் அம்பி அவள் மறைந்துவிட்டதையும் அவளுடைய அதே உருவில், அவன் விட்டுச்சென்ற அதே வயதில் அபிதகுசலாம்பாள் என்னும் மகள் இருப்பதையும் காண்கிறான். அவளை அவளுடைய சித்தியின் தம்பி விரும்புவதைக் கண்டு கொந்தளிப்படைகிறான். அவள் அவனுடன் வண்டியில் செல்கையில் விபத்துக்குள்ளாகி இறக்கிறாள். தொடப்படாதவளாக அவள் இறந்தாள் என்பது அவனுக்கு ஒரு நிறைவை அளிக்கிறது. ‘‘அம்பாளின் பல நாமங்களில் அபிதகுசலாம்பாளுக்கு நேர் தமிழ் “உண்ணாமுலையம்மன்.” இட்டு அழைக்கும் வழக்கில் பெயர் "அபிதா.’’ வாய்குறுகியபின் ‘அபிதா’- ‘உண்ணா’. இந்தப் பதம் தரும் பொருளின் விஸ்தரிப்பில் கற்பனையின் உரிமையில் அபிதா - ‘ஸ்பரிசிக்காத’, ‘ஸ்பரிசிக்க இயலாத’ என்கிற அர்த்தத்தை நானே வரவழைத்துக் கொண்டேன்” என்று லா.ச. ராமாமிர்தம் முன்னுரையில் சொல்கிறார்.

இலக்கிய இடம்

லா.ச. ராமாமிர்தத்தின் சுழலும் சொற்றொடர்களும் நினைவோட்டப் பாணியும் கொண்ட நடையால் பெரிதும் விரும்பப்பட்ட நாவல் இது. இந்திய மரபார்ந்த அம்பாள், சிவலிங்கம் போன்ற படிமங்களை பயன்படுத்தியிருப்பதும் பாராட்டப்பட்டது. ஓர் ஆணின் உள்ளத்திற்குள் பெண் போகப்பொருளாக, உடைமையாக இருக்கும் அதேபொழுதில் அன்னையாகவும் தெய்வமாகவும் இருப்பதும் இந்நாவலில் உணர்த்தப்படுகிறது. அந்த அடுக்குகள் இந்நாவலை இலக்கியப்படைப்பாக நிலைநிறுத்துகின்றன.

உசாத்துணை


✅Finalised Page