சிரித்திரன்

From Tamil Wiki
சிரித்திரன்

சிரித்திரன் (1963-1995 ) இலங்கையில் வெளிவந்த நகைச்சுவை இதழ். அரசியல் கேலிச்சித்திரங்களுக்காகவும் சமூகவிமர்சனத்துக்காகவும் புகழ்பெற்றது

வரலாறு

சி.சிவஞானசுந்தரம் (சிரித்திரன் சுந்தர்) கொழும்பில் இருந்து வெளிவந்த தினகரனில் கேலிச்சித்திரக்காரராக பணிபுரிந்தார். அதில் வெளிவந்துகொண்டிருந்த சவாரித்தம்பர் கேலிச்சித்திரம் மிகவும் புகழ் பெற்றதால் சிரித்திரனை 1963ல் ஆரம்பித்தார். கொழும்பில் கொட்டாஞ்சேனையில் இருந்து வெளிவந்த சிரித்திரன் பின்னர் யாழ்ப்பாணம் பிரவுன் வீதியில் இருந்து வெளிவரத் தொடங்கியது. சிரித்திரன் சிவஞானசுந்தரம் மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்தது.

சிரித்திரன் இதழ் Centre for Creativity and Innovation நிறுவனத்தால் மீள்பதிப்பிக்கப்பட்டு 2021 ஜனவரி முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து உலகெங்கும் கிடைக்க கூடிய வகையில் அச்சுப்பிரதியாக  வெளியிடப்பட்டு வருகின்றது.https://siriththiran.com எனும் இணைய விலாசத்திலிருந்து வெளிவருகிறது.

சிரித்திரன் எரிப்பு

சிரித்திரன்

சிரித்திரன் இதழ் அச்சகமும் அலுவலகமும் நூலகச்சேமிப்பும் 1987 ல் இந்திய அமைதிப்படையால் தீவைத்து எரிக்கப்பட்டன. சிரித்திரன் அலுவலகம் அமைதிப்படையினர் தங்குமிடமாக ஆக்ரமிக்கப்பட்டது. இச்செய்திகளை சிரித்திரன் இதழாசிரியரின் மகள் வாணி சுந்தர் பதிவுசெய்திருக்கிறார்.

உள்ளடக்கம்

கேலிச்சித்திரங்கள், பகடிக்கட்டுரைகள் மற்றும் நடைச்சித்திரங்கள் இதில் இடம்பெற்றன. சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திர நாயகர்களான சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மெயில் வாகனத்தா போன்றவர்கள் புகழ்பெற்றவர்கள். 'மகுடி பதில்கள்' என்னும் தலைப்பில் சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் புகழ்பெற்றது .

பல எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்தது. திக்குவல்லை கமால், திக்கவயல் தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ் நங்கை ஆகியோர் சிரித்திரனில் எழுதிய ஆரம்பகால எழுத்தாளர்கள். எஸ். அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் என பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மலையகப் படைப்பாளி ராகுலனின் "ஒய்யப்பங் கங்காணி" . செங்கை ஆழியானின் "ஆச்சி பயணம் போகிறாள்", "கொத்தியின் காதல்" ஆகிய புகழ்பெற்ற படைப்புகள் வெளியிடப்பட்டன.

சிரித்திரன் இதழ்கள் அனைத்தும் இணையநூலகச் சேகரிப்பாக உள்ளன ( சிரித்திரன் இதழ்த்தொகுப்பு)

உசாத்துணை