சி.மௌனகுரு
சி.மௌனகுரு (9 ஜூன் 1943 ) சின்னையா மௌனகுரு. நாடகப்பேராசிரியர், நிகழ்கலை ஆய்வாளர், தெருக்கூத்து ஆசிரியர், தெருக்கூத்து நடிகர், ஈழ இலக்கிய வரலாற்றசிரியர், எழுத்தாளர்.
பிறப்பு, கல்வி
மட்டக்களப்பு மாநிலத்தில் அமிர்தகழி அருகே சீலாமுனை என்னும் கூத்துக்கலைகளுக்குப் பெயர் பெற்ற ஊரில் சின்னையா- முத்தம்மா இணையருக்கு 9 ஜூன் 1943 ல் இரண்டாவது மகனாக பிறந்தவர் மௌனகுரு. அவருக்கு சகோதரிகள் மூவர். மௌனகுருவின் ஆரம்பக்கல்வி அமிர்தகழி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் தொடங்கியது ( இன்று அமிர்தகழி மகாவித்திலாயம்) ஆரம்ப வகுப்பிலிருந்து ஐந்தாது வகுப்புவரை(1948 - 1953) அங்கே பயின்றபின் புலமைப்பரிசில் பெற்று வந்தாறுமூலை மத்திய கல்லூரிக்குச் சென்றார்.
வந்தாறுமூலை வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இடைநிலைக் கல்வி கற்றார். அப்போது வகுப்புத் தலைவராக, விடுதித் தலைவராக, விபுலாநந்த இல்ல விளையாட்டுத் தலைவராக , பாடசாலைத் தலைவராக, தமிழ் மன்றத் தலைவராக இந்துமன்றத்தலைவராக, விடுதி உணவுப் பகுதிப் பொறுப்பாளராக, சாரணர் இயக்கத் தலைவராக- முன்னணி மாணவராக திகழ்ந்தார். கைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் முதலிய குழுக்களிலும் பங்கேற்றார் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத்தில் க.கணபதிப்பிள்ளை, எஸ். செல்வநாயகம், சு. வித்தியானந்தன், க.கைலாசபதி, எஸ். சதாசிவம், சி. தில்லைநாதன், ச. தனஞ்செயராஜசிங்கம், க. இந்திரபாலா, வி. சிவசாமி, சி.பத்மநாதன்,பஸ்தியாம்பிள்ளை ,பாலகிருஷ்ணன் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்கள் அமைந்தனர்.
கல்விப்பணிகள்
முதுகலைப் பட்டம் பெற்ற பின் மௌனகுரு 1967 லிருந்து 1968 வரை செயின்ட் மகளிர் உயர்தரக் கல்லூரியிலும் செயின்ட். மைக்கேல் கல்லூரியிலும் அரசினர் கல்லூரி (இன்று இந்துக்கல்லூரி)யிலும் ஆசிரியராக உயர்வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மொழி பயிற்றுவித்தார். அரச ஆசிரியர் நியமனம் பெற்றபின் 1968ல் கல்முனை சாஹிராக் கல்லூரியிலும், 1969ல் கல்முனை வெஸ்லிக் கல்லூரியிலும் 1970ல் வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.1972 தொடக்கம் 1976 வரையும் கொழும்பில் கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தில் பாட நூல் எழுத்தாளராக பணியாற்றினார்.
1977ல் யாழ் கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக இருந்தார்.யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரியிலும் மூன்று ஆண்டுகள் சிறந்த சேவையை முஸ்லிம் மாணவர்களுக்குச் செய்தார். 1981 ல் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரை யாளராகி இரண்டு ஆண்டுகள் ஆசிரிய மாணவர்களுக்குத் தமிழ் போதித்தார். 1984 முதல் 1988 வரையும் யாழ்.பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1989லிருந்து 1991 வரை சிரேஷ்ட விரிவுரை. யாளராகவும் பணியாற்றினார். 1992ல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை ஆரம்பிக்கப்பட்ட போது மௌனகுரு அதில் பங்கேற்று விரிவுபடுத்தி நடத்தி வருகிறார். நுண்கலைத் துறைத்தலைவராக கலை, பண்பாட்டுத்துறை பீடாதிபதியாக, பதில் துணைவேந்தராக, சுவாமி விபுலானந்தர் இசை நடன வளாகத்தின் இணைப்பாளராக நூலகக் குழுத்தலைவராக, தமிழ்ச் சங்கப் போஷகராக பல தளங்களில் பணியாற்றிவருகிறார்.
தனிவாழ்க்கை
மௌனகுருவின் மாணவியாக பயின்றவர் சித்ரலேகா. கொழும்பில் வாழ்ந்த காலத்தில் சித்ரலேகாவை மௌனகுரு மணம்புரிந்துகொண்டார். சித்திரலேகா மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழறிஞரும், சமூகத் தொண்டருமான திரு. பி. வி. கணபதிப்பிள்ளையின் மூத்தமகள். இலங்கைப் பல்கலைக்கழகம் - கொழும்பு வளாகத்தின் தமிழ்த்துறைச் சிறப்புப் பட்டதாரி. அக்காலத்தில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர்