ஏ.எஸ்.ராகவன்

From Tamil Wiki
ஏ.எஸ்.ராகவன்

ஏ.எஸ்.ராகவன் (1928) தமிழ் எழுத்தாளர். தமிழ் பொதுவாசிப்புக்குரிய இதழ்களில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதினார்

பிறப்பு கல்வி

ஏ.எஸ்.ராகவன் 1928ல் கரூரில் பிறந்தார். பள்ளியிறுதிவரை கரூரில் கல்விகற்றார்

ஏ.எஸ்.ராகவன்

தனிவாழ்க்கை

ஏ.எஸ்.ராகவன் தென்னக ரயில்வேயில் பணியாற்றினார். எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ஏ.எஸ்.ராகவனின் தம்பியின் மகன். இவருக்கு மூன்று மகன்கள் மூன்று மகள்கள். அவர்களில் ராஜரிஷி (வெங்கடேசன்) , ஷைலஜா (மைதிலி நாராயணன்) இருவரும் எழுத்தாளர்கள்.

இலக்கிய வாழ்க்கை

மனிதன், விகடன்

ஏ.எஸ்.ராகவன் தன் 22 வயதில் சலீமா பேகம் என்னும் கதையை எழுதி அது ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து தமிழ் வார இதழ்களில் கதைகளை எழுதினார். ஆனந்தவிகடன் வெள்ளிவிழா போட்டியில் மனிதன் என்னும் நாவல் பரிசு பெற்றது. அதே ஆண்டில் சிறுகதை, நாடகம் இரண்டுக்கும் ஆனந்த விகடன் அளித்த பரிசைப் பெற்றார்.

அமைப்புச்செயல்பாடு

திரிலோக சீதாராம்மின் நெருக்கமான மாணவர். திரிலோகசீதாராம், மீ.ப.சோமு, சுகி சிவம், கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆகியோருடன் இணைந்து திருச்சி எழுத்தாளர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். அதன் செயலாளராக இருந்து எழுத்தாளர் மாநாடுகளை நடத்தினார்

மறைவு

8 ஜூலை-2012 ல் மறைந்தார்

விருதுகள்,பரிசுகள்

  • இலக்கியசிந்தனை பரிசு - பின்னணி சிறுகதைக்காக (தேர்வு அ.சீனிவாசராகவன்)
  • ஆனந்த விகடன் நாவல்போட்டி விருது -மனிதன்
  • கலைமகள் நாவல் போட்டி பரிசு

இலக்கியஇடம்

தமிழ்ப் பொதுவாசிப்புச் சூழலில் மரபான விழுமியங்களை குடும்பவாழ்க்கைப் பின்னணியில் சித்தரித்த எழுத்தாளர்கள் இரண்டு மரபைச் சேர்ந்தவர்கள். தமிழ்த்தொன்மை, தமிழர் விழுமியங்கள் என உருவகித்துக்கொண்டு எழுதியவர்கள் கு.ராஜவேலு, மு.வரதராசனார் என ஒரு வரிசை. இந்துமதம் சார்ந்த விழுமியங்களை உள்ளடக்கமாக கொண்டு எழுதியவர்கள் சி.ராஜகோபாலாச்சாரியார்ரை முதன்மை ஆளுமையாகக் கொண்டவர்கள். மீப.சோமு போன்றவர்கள் அவ்வரிசை. ஏ.எஸ்.ராகவன் அந்த வரிசையில் வரும் படைப்பாளி. எளிமையான நேரடியான வாழ்க்கை விவரிப்பின் வழியாக பொதுவாசகர்களிடம் மரபான அற, ஒழுக்க நெறிகளை முன்வைக்கும் படைப்புகளை எழுதினார்.

நூல்கள்

ஏ.எஸ்.ராகவன் 15 நாவல்களும் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.

நாவல்கள்
  • மனிதன்
  • மலர்ந்த மனம்
  • உயிர்நோன்பு
  • தீர்த்தக்கடையினிலே
  • சுயம்வரம்
சிறுகதைகள்
  • அன்பின் வழி
  • உணர்வின் விழிப்பு

உசாத்துணை