அனிதா இளம் மனைவி

From Tamil Wiki
அனிதா இளம் மனைவி

அனிதா இளம் மனைவி ( 1971) சுஜாதா எழுதிய மர்ம நாவல். குமுதத்தில் சுஜாதா எழுதிய இந்தக் குறுநாவல் அவருடைய இரண்டாவது நாவல். இதன் வெற்றி அவரையும் அவருடைய எழுத்துமுறையையும் நிலைநிறுத்தியது.

எழுத்து,வெளியீடு

நைலான் கயிறு நாவலுக்கு பின் சுஜாதா எழுதிய நாவல் இது. 1971ல் சுஜாதா இந்நாவலை குமுதம் இதழில் தொடராக எழுதினார். பின்னர் வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது “குமுதம் இதழில் நான் எழுதிய இரண்டாவது தொடர்கதை அனிதா- இளம் மனைவி. 1971ல் எழுதியது என்று ஞாபகம். நான் இதற்கு வைத்த தலைப்பு;அனிதா; மட்டுமே. குமுதம் எடிட்டோரியல் .அதை ‘அனிதா – இளம் மனைவி’ என்று மாற்றினார்கள். இதனால் இக்கதையின் மேல் ஆர்வம் கூடுகிறது என்று எண்ணியிருக்கலாம்” என்று சுஜாதா ஒரு கட்டுரையில் சொல்கிறார்.

கதைச்சுருக்கம்

சுஜாதா டெல்லியில் இருந்தபோது எழுதப்பட்ட இந்நாவல் டெல்லியில் நிகழ்கிறது. ஷர்மா என்னும் பெரும்பணக்காரர் கொல்லப்படுகிறார். பேரழகியான இளம் மனைவி அனிதா விதவையாக இருக்கிறாள். ஷர்மாவின் செயலாளர் பாஸ்கர் அவளுடன் இருக்கிறான். ஷர்மாவின் மகள் மோனிக்கா அனிதா ஏதோ ஒருவகையில் ஷர்மாவின் சாவுக்குக் காரணம் என நினைத்து அதை கண்டுபிடிக்கும்படி வழக்கறிஞர் கணேஷை அணுகுகிறாள். கணேஷ் துப்பறிந்து என்ன நிகழ்ந்தது என்று கண்டுபிடிக்கிறான்

திரைவடிவம்

இந்நாவல் இது எப்படி இருக்கு என்ற பெயரில் 1978ல் பட்டாபிராமன் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது

இலக்கிய இடம்

தமிழில் அச்சு ஊடகம் வெளிவந்ததுமே துப்பறியும் நாவல்கள் வெளிவரத் தொடங்கின என்றாலும் அறிவியல்சார்ந்த நுட்பமான துப்பறிதலும், மிகையற்ற சாகசங்களும், விரைவான நடையும் கொண்ட அனிதா இளம் மனைவி அந்த வகைமையில் அடையப்பட்ட உச்சம். மர்மநாவல்களுக்கு உரியவை என பிரிட்டிஷ் -அமெரிக்க எழுத்து உருவாக்கிய உயர்குடிக் கலாச்சாரம், புதிய மோஸ்தர்கள், விந்தையான கதைமாந்தர், வேறுபட்ட கதைச்சூழல் ஆகியவை கொண்டது. அதன் பின் இதையொட்டியே பின்னர் வந்த அத்தனை மர்மநாவலாசிரியர்களும் எழுதினார்கள்.

உசாத்துணை