மன்னன் மகள்

From Tamil Wiki
Revision as of 00:00, 22 March 2022 by Jeyamohan (talk | contribs)
மன்னன் மகள்

மன்னன் மகள் (1958) சாண்டில்யன் எழுதிய வரலாற்றுச் சாகச நாவல். ராஜேந்திர சோழனின் கங்கைச்சமவெளிப் படையெடுப்பின் பின்னணியில் அமைந்தது

எழுத்து,வெளியீடு

மன்னன் மகள் சாண்டில்யன் எழுத குமுதம் வார இதழில் 1958 ஜனவரி மாதம் முதல் 1959 நவம்பர் வரை தொடர்கதையாக வெளியானது.குமுதம் இதழில் வெளிவந்த சாண்டியல்யனின் இரண்டாவது நாவல் இது. முதல் நாவல் கன்னிமாடம். இந்நாவலே சாண்டில்யனின் முதல் வெற்றிப்படைப்பு. இதன் கட்டமைப்பு, மொழிநடை ஆகியவற்றை அவர் இறுதிவரை கொண்டுசென்றார். வானதி பதிப்பகம் 1960ல் நூலாக கொண்டுவந்தது

வரலாற்றுப்பின்புலம்

இந்நாவல் ராஜேந்திரசோழனின் ஆட்சிக்காலத்தில் பொயு 1021 முதல் இந்த நாவலின் களம் அமைந்துள்ளது. மேலைச்சாளுக்கிய மன்னனான இரண்டாம் ஜெயசிம்மன் சோழர்களின் வடமேற்கு எல்லைப்பகுதிகளை கைப்பற்றிக்கொண்டு வெங்கியையும் தன் ஆட்சிக்கு கீழே கொண்டுவர முயன்றான். வெங்கி அரசனும், ராஜராஜ சோழனின் மகள் குந்தவையை மணந்தவனுமாகிய விமலாதித்தன் இறந்தபின் விமலாதித்தனின் மகனும் சாளுக்கிய இளவரசிக்கு பிறந்தவனுமாகிய விஜயாதித்தனை முடிசூடவைக்க முயன்றான். இராஜேந்திர சோழன் தலையிட்டு குந்தவையின் மகனார்கிய ராஜராஜ நரேந்திரனை அரசனாக்கினான். ராஜேந்திர சோழன் தன் மகள் அம்மங்கை தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு பொயு 1022இல் மணம்முடித்து கொடுத்தான். இரண்டாம் ஜெயசிம்மன் பொயு 1031ல் மீண்டும் வெங்கியை கைப்பற்றி விஜயாதித்தனை வெங்கியின் அரசனாக்கினான். ராஜேந்திரன் மீண்டும் வெங்கிமேல் படையெடுத்து பொயு 1ஒ35ல் அதை வென்று ராஜராஜநரேந்திரனை வெங்கியின் அரசனாக்கினான்

திருவாலங்காடு செப்பேடுகள் ராஜராஜன் இரண்டு ஆண்டுக்காலம் நீண்ட படையெடுப்பில் கங்கைநீரை சோழநாட்டுக்குக் கொண்டுவந்தான். அப்பயணத்தில் அவன் கலிங்கர்களையும் வட இந்திய அரசர் ரணசூரன், தர்மபாலன், மகிபாலன் ஆகியோரை வென்றதாக மெய்கீர்த்திகள் கூறுகின்றன.

கதைச்சுருக்கம்

ஒரு பௌத்த விகாரையில் வளர்ந்த கரிகாலன் எனும் புனைவுக்கதாபாத்திரம் தன் பெற்றோர் யார் என தேடிச்செல்கிறான். அவன் வெங்கிநாட்டுக்குச் சென்று அங்கே நிரஞ்சனாதேவியைச் சந்திக்கிறான். வெங்கிநாட்டு அரசன் விமலாதித்யன்வெங்கி அரசன் விமலாதியனுக்கு மூன்று மனைவிகளில் மூன்று வாரிசுகள். நிரஞ்சனா தேவி, அவள் தம்பி ராஜராஜ நரேந்திரன், விஷ்ணுவர்ஷன். இவர்களில் ராஜராஜ நரேந்திரன் ராஜராஜ சோழனின் மகளும் ராஜேந்திர சோழனின் சகோதரியுமாகிய குந்தவையின் மகன். விஷ்ணுவர்ஷன் இரண்டாம் ஜெயசிம்மனின் சகோதரியின் மகன். நிரஞ்சனாதேவி தன் தம்பி ராஜராஜ நரேந்திரனுக்காக இரண்டாம் ஜெயசிம்மனுக்கு எதிராகச் சதி செய்கிறாள். அதில் கரிகாலனை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறாள். கரிகாலன அவளுக்கு உதவி செய்ய ஒத்துக்கொள்கிறான்.

நிரஞ்சனாதேவிக்கு உதவும்பொருட்டு சோழநாட்டுக்கு வரும் கரிகாலன் சோழர் படைத்தளபதியான அரையன் ராஜராஜனைச் சந்திக்கிறான். அவருடைய விருப்பத்திற்குரிய தளபதியாகிறான். அரையன் ராஜராஜனுக்கு கரிகாலன் யார் என தெரியும், ஆனால் சொல்லமுடியாமல் ஒரு சத்தியம் தடுக்கிறது. அரையன் ராஜராஜனின் மகள் செல்வியையும் காதலிக்கிறான். வெங்கிநாட்டு அரியணைச் சிக்கலை தீர்த்து அதன் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டால்தான் ராஜேந்திர சோழன் கங்கை வரை படைகொண்டுசென்று கங்கைநீரை கொண்டுவந்து அபிஷேகம் செய்துகொள்ள முடியும். சோழர் படைத்தலைவன் வல்லவரையன் வந்தியத்தேவனைச் சந்திக்கும் கரிகாலன் அவருடன் சென்று ராஜேந்திரசோழனின் கங்கை நதிக்கரை படையெடுப்பில் கலந்துகொள்கிறான். இறுதியில் கரிகாலனுக்கு அவன் பிறப்பின் உண்மை தெரிகிறது.  

தொடர்ச்சி

இந்நாவலில் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் வந்தியத்தேவன் குந்தவை போன்ற கதாபாத்திரங்கள் முதியவர்களாக வருகிறார்கள்.

உசாத்துணை