நறுந்தொகை

From Tamil Wiki

நறுந்தொகை தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்று. இது வெற்றிவேற்கை எனவும் அறியப்படுகிறது.

நூல் பற்றி

இந்த நூலின் ஆசிரியர் அதிவீரராம பாண்டியர். நறுமை + தொகை' என்பது நறுந்தொகை. நறுந்தொகை என்பது நல்ல நீதிகளின் தொகை. பழைய நீதிநூல்களின் சாரமாக அமைந்தது. இந்நூலின் சில சொற்றொடர்கள் புறநானூறு, நாலடியார் போன்ற நூல்களின் பாக்களோடும், சொல்லோடும், பொருளோடும் ஒத்து இருக்கின்றன. இந்நூல் எண்பத்தியிரண்டு எளிமையான சொற்றொடர்களால் ஆனது. இது இதற்கு அழகு, இதற்கு அல்ல, இது ஆகாது, இதற்கு இது இல்லை போன்று ஒரே தன்மையதான நீதிகளை வரிசைபட சொல்லுதல் இந்நூலை மனப்பாடம் செய்யும் வகையில் உள்ளது.

பாடல் நடை

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்
துணையோடு அல்லது நெடுவழி போகேல்
போன்ற எளிமையான ஆயின் பொருள் செறிந்த தொடர்களை உடையது.

அழகுப் பண்புகள்

கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
மன்னர்க்கு அழகு செங்கால் முறைமை
வணிகர்க்கு அழகு வரும்பொருள் ஈட்டல்
உழவர்க்கு அழகு உழுதூண் விரும்பல்
மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்
தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்
குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்
விலைமகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்
அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்
வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை

உசாத்துணை

  • “நறுந்தொகை”, ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக வெளியீடு, சனவரி 1997