எஸ். ஜெயக்குமார்

From Tamil Wiki
Revision as of 17:47, 6 February 2024 by Navingssv (talk | contribs)

எஸ். ஜெயகுமார் (பிறப்பு: ஏப்ரல் 13, 1985) இசைக்கலைஞர், கோயிற்கலை ஆய்வாளர், வரலாறு, கோயில் கட்டிடகலை, சிற்பகலை ஆசிரியர், சினிமா துறையில் வரலாற்று ஆராய்ச்சி ஆலோசகராக உள்ளார். ப்ரஸ்தாரா அமைப்பின் நிறுவனர். பண்பாட்டு சுற்றுலா பயணங்களை இந்தியா முழுவதும் ஒருங்கிணைத்து வருகிறார்.

பார்க்க: ப்ரஸ்தாரா

பிறப்பு, கல்வி

எஸ். ஜெயக்குமார் (ஜெயக்குமார் சுந்தரராமன்) ஏப்ரல் 13, 1985 அன்று சீர்காழியில் பிறந்தார். பெற்றோர் கி. சுந்தரராமன் - சு. லஷ்மி தம்பதியர். உடன் பிறந்தவர் ஒரு அக்கா - தீபா. ஜெயக்குமார் ஆரம்பக்கல்வியை நாங்கூர் தொடக்கப்பள்ளியிலும், சீர்காழி தொடக்கப்பள்ளியிலும் பயின்றார். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோவில் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். உயர்நிலைக்கல்வியை மேலையூர் சீனிவாசா மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வழி பி.ஏ. இசை கற்றார். 2006 அக்டோபர் - 2007 ஆண்டுகளில் ஸ்கூல் ஆப் ஆடியோ இன்ஜினியரிங்ல் டிப்ளமோ பட்டம் பெற்றார். 2008-2009-ல் சைவ சித்தாந்த பட்டய படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றார். 2009-2011 ஆண்டுகளில் எம்.ஏ வரலாறு, 2011-2013 ஆண்டுகளில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கற்று தேர்ந்தார்.

தனி வாழ்க்கை

ஜெயக்குமார் டிசம்பர் 15, 2019 அன்று வர்ஷா குமாரை மணம் புரிந்து கொண்டார்.

கலை வாழ்க்கை

ஜெயக்குமார் 2001 முதல் 2006 வரை சென்னை கலாசேத்ராவில் கர்நாடக இசைப் பட்டய படிப்பு பயின்றார். 2006-ல் கலாசேத்ராவில் பகுதி நேர ஆவணப்பணியில் ஈடுபட்டார். 2007 முதல் 2014 வரை முழு நேர இசை ஆய்வாளர், ஆசிரியராகப் பணியாற்றினார்.