ஜி.அப்பாத்துரை

From Tamil Wiki
Revision as of 23:58, 15 March 2022 by Jeyamohan (talk | contribs)
ஜி.அப்பாத்துரை

ஜி.அப்பாத்துரை ( 1890-1962) தமிழ் பௌத்த அறிஞர். தலித் இயக்கச் செயல்பாட்டாளர். திராவிடர் கழக அரசியல் செயல்பாட்டாளர். இதழாளர்.

பிறப்பு, கல்வி

ஜி.அப்பாத்துரை

1890இல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார். இளமையிலேயே கலைக்கூத்து, மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்றவைகளில் ஆர்வம் கொண்டிருந்தார். 1926-லிருந்து பள்ளி ஆசிரியராகவும், கோலாரில் இருந்து வெளிவந்த தமிழன் பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார்.  இவருடைய மகள் அன்னபூரணியும் தலித் அரசியல் செயல்பாட்டாளர். அன்னபூரணிக்கும் ரத்தினசபாபதிக்கும் இடையேயான திருமண நிகழ்வு 10 ஏப்ரல் 1932 ல் பௌத்த சங்கத்தால் சுயமரியாதை இயக்கத்துடன் சேர்ந்து அமைக்கப்பட்டது. நிகழ்வில் பெங்களூர் பௌத்த சாக்கிய உபாசகர் பி,எம்.தருமலிங்கம் போதனாவுபசார வாழ்த்து அளித்தார். அவருடைய மகன் ஜெயராமனுக்கும் இந்திராணிக்கும் 14-அக்டோபர் 1934ல் ராகுகாலத்தில் சாதிமறுப்பு திருமணம் நடைபெற்றது.

பௌத்தப் பணி

ஜி.அப்பாத்துரை 1907-ல் க. அயோத்திதாச பண்டிதர் நடத்திவந்த தமிழன் இதழை வாசிக்கத் தொடங்கினார். தொடர்ந்து க.அயோத்திதாச பண்டிதர் நடத்திய கூட்டங்களில் கலந்துகொண்டார். கிறிஸ்தவராக இருந்த இவர் 1911ல் பௌத்தராக மாறினார். 1912 லிருந்து திராவிடன், நவசக்தி, விலாசினி, குடியரசு போன்ற பத்திரிகைகளிலும் தமிழன் பத்திரிகையிலும் பௌத்தம், தலித் விடுதலை பற்றிய கட்டுரைகளை எழுதினார். 1914 ல் மயிலை பி.எம்.சாமி என்பவர் புத்தரை ஏசுவுடனும் முகமதுவுடனும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரைக்கு ஜி.அப்பாத்துரை விரிவான மறுப்பு எழுதினார். கிறிஸ்துவும் முகமதுவும் கடவுளின் தூதர்கள் அல்லது மைந்தர்கள், புத்தர் அப்படி தன்னைப்பற்றிச் சொல்லிக்கொள்ளவில்லை என அதில் கூறியிருந்தார்.

ஜி.அப்பாத்துரை எம்.ஒய். முருகேசம் இ.நா.அய்யாக்கண்ணு ஆகியோருடன் இணைந்து ‘இளைஞர் பௌத்த சங்கத்தை’ கோலார், வேலூர், சென்னை, செங்கற்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார். பௌத்தம் சார்ந்து சிறு நூல்கள் பல எழுதினார். 1954ல் அம்பேத்கர் கோலாருக்கு வந்து பௌத்த சாக்கிய சங்கச் செயல்பாடுகளைக் கேட்டு அறிந்துகொண்டார். பின்னாளில் அம்பேத்கர் பௌத்தமதம் மேற்கொண்டதற்கு அது தூண்டுதலாக அமைந்தது.

இதழியல்

அயோத்திதாச பண்டிதர் 1914 ல் மறைந்தார். அயோத்திதாசருக்குப் பிறகு தமிழன் இதழை சிறிதுகாலம் அவரது மகன் பட்டாபிராமன் நடத்தி வந்தார். அதன் பிறகு தமிழனை எம்.ஒய். முருகேசம் பின்பலத்துடன் ஜி.அப்பாத்துரை கொண்டு வந்தார். அப்பாதுரையாரை ஆசிரியராகவும் வி.பி.எஸ். மணியரை பதிப்பாளராகவும் கொண்ட தமிழன் 1921 முதல் இரண்டு ஆண்டுகள் வெளிவந்தது. எம்.ஒய். முருகேசம் மறைந்தபோது தமிழன் வெளிவருவது தடைப்பட்டது. ஜி.அப்பாத்துரை முயற்சியால் தமிழன் மீண்டும் 1926 ம் ஆண்டு ஜூலை முதல் வாரத்திலிருந்து வெளிவரத் தொடங்கியது.

தமிழன் இதழில் தொடர்ந்து சாதிமறுப்பு குறித்து எழுதிவந்தமையால் மைசூர் அரசிடம் பலர் புகார் சொன்னதை ஒட்டி தமிழன் அரசு தடை செய்யப்பட்டது. ஈ.வெ.ராமசாமி பெரியார் தொடர்ச்சியாக தமிழன் தடைக்கு எதிராக எழுதினார். ஜி.அப்பாத்துரை தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். வேறொரு பேரில் இதழை நடத்திக்கொள்ள நீதிமன்றம் கூறியும் அவர் ஒப்பவில்லை.

அரசியல்

அயோத்திதாச பண்டிதர் முன்வைத்த தலித் அரசியலை முன்னெடுத்தார். 1917-இல் மாண்டேகு சேம்ஸ் போர்ட் குழுவினருக்கு சமுதாய நிலையை விளக்கி எழுதினார். 1924-இல் காந்தியுடன் சமுதாயச் சீர்த்திருத்தத்தைப் பற்றி நீண்ட விவாதம் ஒன்றை நடத்தினார். அயோத்திதாசருக்குப் பின் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் நடத்திய திராவிட இயக்கத்தின் ஆதரவாளர் ஆனார். தன் மகளுக்கும் மகனுக்கும் சாதிமறுப்பு மணங்கலை பௌத்த மரபின்படி சுயமரியாதை இயக்க ஆதரவுடன் நடத்தினார்.

1938ல் தமிழ்மாகாண முதல்வராக இருந்த சி.ராஜகோபாலாச்சாரியார் இந்தி படிப்பை கட்டாயமாக்கியபோது அதற்கு எதிராக உருவான போராட்டங்களில் ஜி.அப்பாத்துரை ஈ.வெ.ராமசாமி பெரியாருக்கு துணைநின்றார். கோலார் பௌத்த சாக்கிய சங்கம் போராட்டத்தில் கலந்துகொண்டது. 26-ஜூன்1938ல் சென்னை கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் ஜி.அப்பாத்துரை பேசினார்.

கலைத்துறை

நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த ஜி.அப்பாத்துரை தன் மருமகனும் நடிகருமாகிய பி.ஆர்.ரத்தினசபாபதியுடன் இணைந்து சமத்துவ நடிகர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். அவர்கள் நடத்திய கலப்பு மணம் என்னும் நாடகம் கோலார், வட ஆர்க்காடு மாவட்டங்களில் நடிக்கப்பட்டது. மரபுவாதிகளின் கடுமையான எதிர்ப்பையும் கலவரைத்தையும் மீறி அதை ஜி.அப்பாத்துரை நடத்தினார்.

பாராட்டுகள்

  • 1942ல் கோலார் சாக்கிய சங்கத்தில் ஜி.அப்பாத்துரையின் படத்திறப்பு விழா நடைபெற்றது. ஈவெரா கல்விக்கழகம், சமரச சன்மார்க்க நடிகர் சபா, சீர்திருத்த வாலிபர் கழகம் ஆகியவை கலந்துகொண்டன
  • 1950 திராவிடர் கழகம் ஜி.அப்பாத்துரைக்கு பாராட்டுவிழா எடுத்தது
  • 1954ல் ஈ.வெ.ராமசாமி பெரியார் புத்தர் கொள்கைப்பிரச்சார மாநாட்டை கோலாரில் கூட்டினார். அதில் உலக பௌத்த சங்கத்தலைவரும் இலங்கையின் ருஷ்யத்தூதருமான ஜி.டி.மல்லலசேகர கலந்துகொண்டார். அதில் ஜி.அப்பாத்துரை பௌத்தம் பற்றி பேருரையாற்றினார். மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டார்
  • 6- அக்டோபர் 1951ல் கோலார் கென்னடிஸ் கலையரங்கில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஜி.அப்பாத்துரைக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. அதில் நெடுஞ்செழியன் அவருக்கு பணமுடிப்பு அளித்தார்.
  • 1959ல் கோலாரில் நடந்த புத்தர்விழாவில் அப்பாத்துரையுடன் ஈ.வெ.ராமசாமி பெரியாரும் கலந்துகொண்டார்.

மறைவு

ஜி.அப்பாத்துரை 21.ஜனவரி 1961 அன்று வாலாஜா வன்னிமேடு கிராமத்தில் காலமானார். அவரின் உடல் தங்கவயலுக்கு கொண்டு வரப்பட்டு பவுத்த முறையில் அடக்கம் செய்யப்பட்டது.

நூல்கள்

  • புத்தர் அருளறம்
  • பரலோகத்தில் இருக்கும் பரமசிவனுக்கு
  • கலப்புமணம் (நாடகம்)

உசாத்துணை