பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி

From Tamil Wiki
Revision as of 17:27, 11 March 2022 by Jeyamohan (talk | contribs)
பி.எஸ்.எஸ்.சாஸ்திரி

பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி ( ) பின்னங்குடி சா. சுப்ரமணிய சாஸ்திரி. பி.எஸ்.எஸ்.சாஸ்திரி. தமிழறிஞர், சம்ஸ்கிருத அறிஞர். பேராசிரியர். தொல்காப்பியத்தை முதல்முறையாக ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்.

பிறப்பு, கல்வி

பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதியை முடித்தார். செயிண்ட் ஜோசப் கல்லூரியில் எஃப்.ஏ முடித்தபின் பி.ஏ படிப்பை எஸ்.பி.ஜி கல்லூரி (பின்னர் பிஷப் ஹீபர் கல்லூரி)யில் முடித்தார். கணிதத்தில் பட்டம் பெற்றார். நீலகண்ட சாஸ்திரியிடம் சம்ஸ்கிருதம் கற்றார். சென்னை மாநிலக்கல்லூரி பேராசிரியர் எஸ்.குப்புசாமி சாஸ்திரியிடம் நியாயசாஸ்திரமும் அலங்கார சாஸ்திரமும் பயின்றார். பனாரஸ் பல்கலைகழக பேராசிரியர் சின்னஸ்வாமி சாஸ்திரியிடம் மீமாம்சை கற்றார். சம்ஸ்கிருதத்தில் எம்.ஏ பட்டம்பெற்றபின் சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் எல்.டி பட்டம் பெற்றார். குப்புசாமி சாஸ்திரியிடம் சம்ஸ்கிருதம் படிக்கும்போதே தமிழும் கற்றார். குப்புசாமி சாஸ்திரி அவருக்கு ஒப்பிலக்கணம் கற்பித்தார்.

சுப்ரமணிய சாஸ்திரி தமிழ் சம்ஸ்கிருத இலக்கண முறைகளை ஒப்பிட்டு தன் முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்தார். (History of Grammatical Theories in Tamil and their relation to grammatical literature in Sanskrit) 1930 ல் சென்னை பல்கலை கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை பல்கலை தமிழில் செய்யப்பட்ட ஆய்வுக்கு அளித்த முதல் முனைவர் பட்டம் இது. குப்புசாமி சாஸ்திரி ஆய்வு நிலையம் (Kuppuswami Sastri Research Institute, Chennai ) இதை பின்னர் நூலாக வெளியிட்டது

தனிவாழ்க்கை

கணித ஆசியராக திருவையாறு செண்டிரல் உயர்நிலைப் பள்ளி (தற்போது ஸ்ரீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளி) யிலும் திருச்சி நேஷனல் உயர்நிலைப்பள்ளியிலும் பணியாற்றினார். சுப்ரமணிய சாஸ்திரி திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரியில் கீழ்த்திசை ஆய்வு இருக்கையின் பேராசிரியராக 1917ல் அருட்தந்தை கார்டினர் ( Fr. Gardiner ) அவர்களால் நியமிக்கப்பட்டார். 1926 வரை அங்கே பணியாற்றினார். சென்னை பல்கலையின் தமிழ்ப்பேரகராதி ஆசிரியர்க்குழுவில் 1932 வரை பணியாற்றினார். 1932 முதல் 1942 வரை திருவையாறு மன்னர் கல்லூரியில் முதல்வராக இருந்தார். 1942 முதல் 1947 வரை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதத்துறை தலைவராக பணியாற்றினார்.

அண்ணாமலை பல்கலையில் சுப்ரமணிய சாஸ்திரி செயலற்றுவிட்டிருந்த சம்ஸ்கிருதம் ஹானர்ஸ் பட்டப்படிப்பை மீண்டும் உயிர்கொள்ளச் செய்தார். தமிழ், சம்ஸ்கிருத ஒப்பீட்டுக் கல்வியை ஊக்குவித்தார். தாமஸ் டி பரோ (Thomas T. Burrow) என்னும் இங்கிலாந்து நாட்டுச் சம்ஸ்கிருத அறிஞர் ( பின்னர் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் சம்ஸ்கிருத பேராசிரியரா இருந்தார். திராவிட வேர்ச்சொல் அகராதியை (Dravidian Etymological Dictionary) உருவாக்கினார்) சுப்ரமணிய சாஸ்திரியின் மாணவராக தமிழும் சம்ஸ்கிருதமும் கற்றார்.

இலக்கியப்பணிகள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது பதஞ்சலியின் மகாபாஷ்யம் பற்றி அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டன. த்வன்யாலோகத்தின் மொழியாக்கமான தொனிவிளக்கு, சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு, சம்ஸ்கிருத மொழி வரலாறு ஆகிய நூல்களை வெளியிட்டார். அவருடைய ஆக்கங்களாகவும் மொழியாக்கங்களாகவும் 40 நூல்கள் வெளியாயின.

தொல்காப்பிய மொழிபெயர்ப்பு

சுப்ரமணிய சாஸ்திரி தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். எழுத்ததிகாரம், பொருளதிகாரம் இரண்டும் குப்புசாமி சாஸ்திரி ஆய்வு நிறுவனம் அதை வெளியிட்டது. சொல்லதிகாரத்தை அண்ணாமலை பல்கலைகழகம் வெளியிட்டது. தொல்காப்பிய மூலத்தை ஆங்கில எழுத்துக்களில் அளித்து மொழிபெயர்ப்பை அளித்திருந்தார்

மகாபாஷ்ய மொழியாக்கம்

ஓய்வுக்குப்பின் திருவையாறுக்கு சென்று தங்கிய சுப்ரமணிய சாஸ்திரி1953ல் மகாபாஷ்யத்தை முழுமையாக மொழியாக்கம் செய்து முடித்தார். நான்காயிரம் பக்கங்களில் பதினான்கு பகுதிகளாக அமைந்த நூல் அது. குப்புசாமி சாஸ்திரி ஆய்வு நிறுவனம் சென்னை அதை வெளியிட்டது.

மகாபாஷ்யத்திற்கு சுப்ரமணிய சாஸ்திரி உரை ஒரு அருஞ்சாதனையாக கருதப்படுகிறது. மூலம் சம்ஸ்கிருத தேவநாகரி லிபியிலும் ஆங்கிலத்திலும் அளிக்கப்பட்டு அதன் கீழே அந்த விளக்கவுரையில் பேசப்படும் தலைப்புகள் பற்றிய குறிப்புகள் அளிக்கப்பட்டிருந்தது. விரிவான விளக்கமும் உசாத்துணையும் எல்லா பாடல்களுக்கும் அளிக்கப்பட்டது. கையாத (Kaiyata) வின் பிரதிபா மற்றும் நாகேசபட்டரின் உத்யோத ஆகிய நூல்களை அடிப்படையாகக்கொண்டு அளிக்கப்பட்ட உரை அது.

பட்டங்கள் விருதுகள்

  • வித்யாரத்னா (பனாரஸ் பல்கலை)
  • வித்யாநிதி (கேரளம்)
  • வித்யாவிபூரணா( கர்நாடகம்
  • மகாமகோபாத்யாய (அலகாபாத்)

மறைவு

சுப்ரமணிய சாஸ்திரி 20 மே 1978ல் திருவையாறில் மறைந்தார்