first review completed

வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்

From Tamil Wiki
Revision as of 15:59, 7 March 2022 by Jeyamohan (talk | contribs)
வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார்

வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் (ஆகஸ்ட் 14, 1857 - அக்டோபர் 12, 1946) தமிழறிஞர், முன்னோடி கம்பராமாயண ஆய்வாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், கால்நடை மருத்துவராக பல முக்கிய நூல்களை இயற்றியவர், கால்நடைகளுக்கான அலோபதி மருத்துவ முறையை இந்திய மொழிகளில் முதலில் அறிமுகப்படுத்தியவர் என்றும் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

வெ.ப.சுப்ரமணிய முதலியார்

வே.ப.சுப்ரமணிட்ய முதலியார் மதுரை நாயக்கர் அரசை உருவாக்கிய விஸ்வநாத நாயக்கரின் படைத்தளபதியாக இருந்த புகழ்பெற்ற அரியநாத முதலியாரின் வழிவந்தவர். அரியநாத முதலியார் தொண்டைமண்டல வேளாளர் குடியைச் சேர்ந்தவர். அவருடைய குடியினர் மதுரை சோழவந்தானில் குடியிருந்தனர், பின்னாளில் நெல்லைக்குச் சென்றனர். அவர்கள் நெல்லை தளவாய் முதலியார் குடும்பத்துக்கு அணுக்கமானவர்கள். திருநெல்வேலி அருகே வெள்ளக்கால் என்னும் ஊரில் குடியிருந்தனர். அக்குடியைச் சேர்ந்த பழனியப்ப முதலியாரின் மகன் சுப்ரமணிய முதலியார். வெள்ளக்கால் பழனியப்ப முதலியார் சுப்ரமணிய முதலியார் என்பது அவர் பெயர்.

14 ஆகஸ்ட் 1854ல் வே.ப.சுப்ரமணிய முதலியார் பிறந்தார். பத்துவயது வரை வெள்ளக்காலில் கல்வி பயின்ற சுப்ரமணிய முதலியார் அதன்பின் திருநெல்வேலிக்கு வந்து தளவாய் முதலியாரின் அரண்மனையிலேயே அமைந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பலபட்டடை சொக்கநாதப் புலவரின் சிறியதந்தையாரிடம் தமிழ் பயின்றார்.நெல்லை அரசரடி கிறித்துவ மிஷன் பள்ளியில் இ1876ல் பயின்று மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் மாணவராக வெற்றிபெற்றார். நெல்லையில் உள்ள ம. தி. தா. இந்து கல்லூரியில் பயின்று மெட்ரிக்குலேஷன் தேறினார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கையில் உடல்நலம் குறையவே படிப்பை நிறுத்திக்கொண்டார். 1880ல் சென்னை சைதாப்பேட்டையில் இருந்த அரசு வேளாண்மைக் கல்லூரியில் பயின்று 1884 ஆம் ஆண்டில் ஜி. எம். ஏ. சி. என்னும் வேளாண்மையில் பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

திருநெல்வேலி வருவாய்த்துறை அலுவலகத்தில் வேலை பார்த்தார். சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்ட விவசாயப் பள்ளியில் டிப்ளமோ படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் விவசாயத்தில் டிப்ளமோ முடித்தபின் கால்நடை ஆய்வாளர், கால்நடைக் கணக்கெடுப்பாளர் ஆகிய பணிகளில் இருந்தார் (1884-1887). சென்னை ராஜதானி அரசு இவரது திறமையைக் கவனித்து கால்நடை மருத்துவம் பயில மும்பைக்கு அனுப்பியது. அங்கு இவர் GBUC படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றார். கால்நடை மருத்துவராக, இணைக் கண்காணிப்பாளராக 1914-ல் ஓய்வு பெறுவது வரை பணியாற்றினார்.

வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் தன் முதல் மனைவி இறந்தபின்னர் இரண்டாம் மணம் செய்துகொண்டார். இவருக்கு 6 மக்கள் இருந்தனர்.

இலக்கிய வாழ்க்கை

திருநெல்வேலி தெற்குப் புதுத்தெருவில் கவிராஜ நெல்லையப்ப பிள்ளையின் தோட்டத்தில் கூடிய இலக்கிய கூடுகைகளில் வேம்பத்தூர் பிச்சுவையர், முகவூர் கந்தசாமிக் கவிராயர், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் போன்றவர்களுடன் பழகியதில் தமிழிலக்கிய அறிமுகம், இலக்கணப் பாடம் ஆகியவை கிடைத்தன. பின்னர் உ.வே. சாமிநாத அய்யர், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர், மனோன்மணியம் சுந்தரனார், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை போன்றோருடன் நெருங்கிப் பழகினார். இவரது நண்பரான அ. மாதவையா தனது விஜயமார்த்தாண்டம் நாவலை இவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

சுப்பிரமணிய முதலியார் ஆங்கிலத்தில் Beauties of Shakespeare, The Golden Treasury போன்ற நூல்களை படித்தபோது அதே போல கம்பனின் பாடல்களைத் தெரிவு செய்து கொடுக்கவேண்டும் என்று உந்துதல் வந்ததாக தன் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

கம்பனின் தேர்ந்த பாடல்களைத் தொகுத்து இவர் 'கம்பராமாயண இன்கவித் திரட்டு' என்ற பெயரில் செந்தமிழ் இதழில் தொடராக எழுதினார். இக்கட்டுரைகள் ஒழுங்கு செய்யப்பட்டு 'கம்பராமாயணச் சாரம்' என்ற பெயரில் நூல்வடிவில் வெளிவந்தன. கம்பனின் ஆறு காண்டங்களின் பாடல்களிலும் தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் தொகுக்கப்பட்டு நேரடிப் பொருளும் அருஞ்சொற்பொருளும் அடிக்குறிப்புகளும் அளிக்கப்பட்டு வெளியாகின. இந்நூலுக்கு உ.வே.சாமிநாதய்யரின் முகவுரையும் விபுலானந்தரின் அறிமுகவுரையும் உள்ளது. இந்நூல் தனிக்கவனம் பெற்று நான்கு பதிப்புகள் கண்டது.

கம்பராமாயணம் தவிர, இவர் அகலிகை வெண்பா என்ற திரட்டையும் தான் கேட்ட வாய்மொழிக்கதைகளின் அடிப்படையில் எழுதியிருக்கிறார். (இதன் மூன்றாம் பதிப்பை 1938-ல் புதுமைப்பித்தனுக்கு அளித்ததாகவும், புதுமைப்பித்தன் சாபவிமோசனம் கதையை எழுதுவதற்கு இது காரணமாக இருந்திருக்கிறது என்றும் பேராசிரியர் வீரபத்திரச் செட்டியார் சொல்வதாக ஆய்வாளர் அ.கா. பெருமாள் தன் தமிழறிஞர்களில் நூலில் குறிப்பிடுகிறார்)

கவிதை

T Merric எழுதிய The Chameleon என்ற நூலை அடிப்படையாக வைத்து கோம்பி விருத்தம் என்று கவிதை வடிவில் எழுதினார். இது சமகாலக் கவிஞர்களால் பாராட்டப்பெற்று இண்டர்மீடியட் படிப்பில் பாடமாக இடம்பெற்றது (1934).

மொழியாக்கம்

மில்டனின் Paradise Lost காவியத்தை மொழியாக்கம் செய்து சுவர்க்க நீக்கம் என்ற பேரில் வெளியிட்ட நூல் இலக்கியத் தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரிட்டிஷ் அரசில் செல்வாக்கு பெற்றுத்தந்தது.

கால்நடைத்துறை எழுத்து

வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் கால்நடை பராமரிப்பு, வியாதிகள் மருந்துகள் பற்றிய தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவ முறையான வாகட முறைகள் பற்றி அறிந்திருந்தார். அதோடு ஆங்கிலேயர் எழுதிய கால்நடை மருத்துவ நூல்களை பாமரர்களுக்கும் புரியும்படியாக எளிய தமிழில் எழுதவேண்டும் என்ற தூண்டுதலில் நான்கு முக்கியமான நூல்களை மொழியாக்கம் செய்தார். இவற்றில் ஒன்றை சென்னை ராஜதானி அரசே அதன் முக்கியத்துவம் கருதி வெளியிட்டது (1886).

அறிவியல் நூல்களை கிறித்தவ மிஷனரிகள் மட்டுமே செய்துவந்த காலத்தில் சுப்பிரமணிய முதலியார் தொடங்கிய இந்த அறிவுப்பணி அரியதாக கருதப்படுகிறது. 19ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட இப்பணி 'அலோபதி மருத்துவமுறைகளை இந்திய மொழிகளில் முதலில் அறிமுகப்படுத்தியவர்' என்ற பெருமையை இவருக்கு பெற்றுத்தந்தது.

இலக்கிய இடம்

இவரது எண்பதாம் அகவை விழாவில் உ.வே.சாமிநாதய்யர் தலைமை வகித்தார் என்ற செய்தி இவரது சமகாலத்து அறிஞர்களிடையே நன்மதிப்பை பெற்றிருந்தார் எனக் காட்டுகிறது.

இறுதிக்காலம்

திருநெல்வேலியில் அக்டோபர் 12, 1946 அன்று தன் 90-ஆம் வயதில் காலமானார்.

நூல்பட்டியல்

தொகுப்புகள்
  • கம்பராமாயணச் சாரம்
  • Kambaramayanam, ஆங்கில நூல்
கவிதை நூல்கள்
  • நெல்லைச் சிலேடை வெண்பா
  • அகலிகை வெண்பா
  • தனிக்கவித் திரட்டு
  • சர்வ சன செபம்
  • கோம்பி விருத்தம் (T. Merric எழுதிய The Chameleon நூலின் தமிழ் மொழியாக்கம்)
  • சுவர்க்க நீக்கம் (மில்டனின் Paradise Lost காவியத்தின் தமிழ் மொழியாக்கம்)
கால்நடை மருத்துவ நூல்கள்
  • இந்து தேசத்து கால்நடைக்காரர்களின் புத்தகம் (Indian Stock Owners Manual, Lt. Col. James Miller) -1885
  • இந்தியாவில் கால்நடைகளுக்கு காணுகிற அதிக பிராணாபாயமான வியாதிகளைப் பற்றிய புத்தகம் (The More Deadly Forms of Cattle Diseases in India நூலின் தமிழ் மொழியாக்கம்), 1869. சென்னை ராஜதானி அரசு வெளியீடு
  • கால்நடைகளுக்கு வியாதி வராமல் அம்மை குத்தும் முறையும் அதன் உபயோகங்களும் (Preventive Inoculation and its uses நூலின் தமிழ் மொழியாக்கம்)
  • உள்நாட்டுக் கால்நடைகளின் மேம்பாடு (Improvement of the Local cattle நூலின் தமிழ் மொழியாக்கம்)
  • கால்நடைகளுக்கு வியாதி வராமல் அம்மை குத்தலும் அதன் உபயோகமும்.

இவை தவிர செந்தமிழ், ஆனந்த விகடன், பஞ்சாமிர்தம், செந்தமிழ்ச் செல்வி, கரந்தைக் கட்டுரை ஆகிய இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்

உசாத்துணைகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.