under review

மாப்பிள்ளை மாடன்

From Tamil Wiki
Revision as of 21:53, 12 October 2023 by Navingssv (talk | contribs)

மாப்பிள்ளை மாடன் தென் மாவட்டங்களில் வழிப்பாட்டில் உள்ள நாட்டார் தெய்வம். மாப்பிள்ளை மாடன் கொலைசெய்யப்பட்டு பின் தெய்வமானவன்.

கதை

மாப்பிள்ளை மாடன் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மனின் படைவீரர்களுள் ஒருவன். அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவன். ஓட்டப்பிடாரத்தில் வாழ்ந்து வந்தான். ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள கீழமங்கலம் கிராமத்தில் இவனுக்கு பெண் நிச்சயம் செய்தனர். மணநாளுக்கு முன்னர் கிழக்கிந்தியக் கம்பெனி கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி படையெடுத்து வந்தது. இதனால் போரில் மாப்பிள்ளை மாடனும் கலந்துக் கொள்ள நேர்ந்தது.

மாப்பிள்ளை மாடன் தன் திருமண நாளன்று கீழமங்கலம் கிராமத்திற்குச் செல்ல அனுமதி பெற்று மாப்பிள்ளை கோலம் ஏற்று ஊருக்குப் புறப்பட்டான். அதே சமயம் கயத்தாறிலிருந்து கம்பெனி படைகள் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி வந்தது. மணமகளை அழைத்துக் கொண்டு உறவினர்களும் கீழமங்கலம் நோக்கி வந்தனர். கீழமங்கலம் கம்மாயில் புன்னைமரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்ததால் தூரத்தில் வருவோரை அடையாளம் காண வேண்டி ஒரு புன்னை மரத்தின் மேல் ஏறி மாப்பிள்ளை அமர்ந்துக் கொண்டான். கம்பெனி படையினர் பின்னாளிலிருந்து அவன் ஒழிந்திருப்பதைக் கண்டு கட்டபொம்மனின் ஒற்றன் ஒழிந்துள்ளான என எண்ணி அவன் வயிற்றில் ஈட்டியால் குத்தினர்.

குடல் வெளியே வந்து கீழே விழுந்த மாடன் குளத்தில் விழுந்து இறந்து போனான். அதே சமயம் அங்கே வந்த மணமகள் வீட்டார் அவனது பிணத்தைக் கண்டனர். மாடனின் உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர். அவனது உடலை எரிக்கும் போது அவனுக்கு உறுதி செய்திருந்த பெண்ணும் உடன்கட்டையேறி உயிர் துறந்தாள்.

மாப்பிள்ளை கோலத்தில் உயிர் துறந்ததால் இவன் மாப்பிள்ளை மாடன் என்ற பெயரிலேயே தெய்வமாக வழிபடப்படுகிறான்.

கோவில் அமைவிடம்

மாப்பிள்ளை மாடன் கோவில் ஓட்டப்பிடாரத்திற்கு வடக்கே உள்ள கம்மாய் கரையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.

உசாத்துணை

  • ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும், ஆ. சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம்

வெளி இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.