first review completed

காந்திஜி தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
காந்திஜி தமிழ்ப்பள்ளி.jpg

காந்திஜி தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூரில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளி. இப்பள்ளி சுங்கை பூரோங், செகிஞ்சான்  எனும் பகுதியில் அமைந்துள்ளது. பாதி அரசு உதவி பெறும் பள்ளி.

வரலாறு

1948-ஆம் ஆண்டு, பாரிட் 4, சுங்கை பூரோங்கில் காந்திஜி தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டது. சுங்கை பூரோங்கில் வசித்து வந்த நெற்குடியானவர்களின் பிள்ளைகளின் கல்வி நலனுக்காகக் காந்திஜி தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டது. சிறிய கொட்டகை வடிவில் தோற்றுவிக்கப்பட்ட காந்திஜி தமிழ்ப்பள்ளியில் சுமார் 30 முதல் 40 மாணவர்கள் கல்வி பயின்றனர். இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியராக திரு. எஸ். செல்லையா பணியாற்றினார்.

புதிய கட்டடம்

பழையக் கட்டடம்

1955-ல், கம்போங் சுங்கை பூரோங் செயலவை உறுப்பினரான திரு. கே. வி. முனுசாமி பள்ளிக்கென நிலத்தைப் பெற்று, ஒரு கட்டடத்தைக் கட்டும் முயற்சியை மேற்கொண்டார். திரு. கே. வி. முனுசாமியின் முயற்சியில் புதிய கட்டடம் எழுப்பப்பட்டு, காந்திஜி தமிழ்ப்பள்ளி என்ற பெயர் சூட்டப்பட்டது. திரு. கே. வி. முனுசாமி அவர்கள் இப்பள்ளியின் வாரியத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

1958-ல் காந்திஜி தமிழ்ப்பள்ளிக்கு மலாய், ஆங்கில மொழி ஆசிரியர்கள் தருவிக்கப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து 1962-ல், 4 போதனை ஆசிரியர்களும் தருவிக்கப்பட்டார்கள். 1961-ஆம் ஆண்டு இப்பள்ளிக் கட்டடம் சீரமைக்கப்பட்டு, ஆசிரியர்கள் தங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

காலப்போக்கில், மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. 1986-ஆம் ஆண்டு காந்திஜி தமிழ்ப்பள்ளியில், சுமார் 172 மாணவர்கள் கல்வி கற்றனர். 11 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். மாணவர் எண்ணிக்கை உயர்வினால் காந்திஜி தமிழ்ப்பள்ளியில் வகுப்பறைப் பற்றாக்குறை ஏற்பட்டது. 1986-ஆம் ஆண்டு காந்திஜி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவோடு பள்ளியில் இணைக்கட்டடம் எழுப்பப்பட்டது. இக்கட்டடத்தில் தலைமையாசிரியர் அறை, ஆசிரியர் அறை, 3 வகுப்பறைகள் போன்ற வசதிகள் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தன.

இரண்டாவது புதிய கட்டடம்

காந்திஜி தமிழ்ப்பள்ளி 3.jpg

ஜூலை 10, 1994-ல் காந்திஜி தமிழ்ப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தால் அப்பள்ளியின் கட்டடம் தீயில் முற்றாக அழிந்தது. இதனால் 1994-ஆம் ஆண்டு டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு அவர்களின் உதவியில் காந்திஜி தமிழ்ப்பள்ளிக்கு ஒரு புதிய 2 மாடிக் கட்டடம் கிடைக்கப் பெற்றது.

தஞ்சோங் காராங் மலேசிய இந்திய காங்கிரஸ், காந்திஜி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், தஞ்சோங் காராங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹஜி சாய்டின், கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 2 மாடிக் கட்டடம் கட்டப்பட்டது. காந்திஜி தமிழ்ப்பள்ளியின் புதிய இரண்டு மாடிக் கட்டடத்தில் தலைமையாசிரியர் அறை, ஆசிரியர் அறை, பள்ளி அலுவலக அறை, நூல்நிலையம், 5 வகுப்பறைகள் இருந்தன. அக்டோபர் 10, 1997-ல் காந்திஜி தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடங்களுக்கான திறப்பு விழா கொண்டாடப்பட்டது.

இன்றைய நிலை

காந்திஜி தமிழ்ப்பள்ளி 5.jpg

செகிஞ்சான் பகுதியில் நெல் வயல் தொடர்புடைய தொழிலைச் செய்பவர்கள் நகரத்தை நோக்கி செல்லத் தொடங்கியதால், பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. இருப்பினும், இவ்வட்டாரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பாலர் வகுப்பு வசதியினை அரசு ஏற்படுத்தித் தந்தது. நேர்த்தியான பாலர் பள்ளிக் கட்டடம் பள்ளியில் கட்டப்பட்டுள்ளது. குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளி என்ற பிரிவில் காந்திஜி தமிழ்ப்பள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.