under review

நம்பி குட்டுவனார்

From Tamil Wiki
Revision as of 16:27, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)

நம்பி குட்டுவனார் சங்க காலப் புலவர். குறுந்தொகையில் உள்ள இரண்டு பாடல்களும் நற்றிணையில் உள்ள மூன்று பாடல்களும் இவர் எழுதியவை.

வாழ்க்கைக் குறிப்பு

சேரமரபினைச் சேர்ந்தவர். குட்டுவனார் என்பது சேர மரபைக் குறிப்பது. நம்பி என்பது ஆண்களில் சிறந்தவரைக் குறிப்பது.

இலக்கிய வாழ்க்கை

குறுந்தொகையில் உள்ள இரண்டு பாடல்களும் (109, 243), நற்றிணையில் உள்ள மூன்று பாடல்களும் (145, 236, 345) குட்டுவனார் எழுதியவை. தலைவியைக் காணவந்த தலைவன் காதில் கேட்குமாறு, அலர் பற்றிய செய்தியைத் தோழி கூறுவதாகக் குறுந்தொகைப் பாடல் உள்ளது.

பாடல் நடை

  • குறுந்தொகை 109

முடக்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
புணரி இகுதிரை தரூஉந் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்
இன்னது மன்னோ நன்னுதற் கவினே.

  • குறுந்தொகை 243

மானடி யன்ன கவட்டிலை அடும்பின்
தார்மணி யன்ன ஒண்பூக் கொழுதி
ஒண்தொடி மகளிர் வண்ட லயரும்
புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை
உள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே.

  • நற்றிணை 145

இருங் கழி பொருத ஈர வெண் மணல்
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன், நாம் வெங் கேண்மை
ஐது ஏய்ந்தில்லா ஊங்கும், நம்மொடு
புணர்ந்தனன் போல உணரக் கூறி,
'தான் யாங்கு?' என்னும் அறன் இல் அன்னை;
யான் எழில் அறிதலும் உரியள் நீயும்; நம்
பராரைப் புன்னைச் சேரி, மெல்ல,
நள்ளென் கங்குலும், வருமரோ-
அம்ம வாழி!- தோழி அவர் தேர் மணிக் குரலே!

  • நற்றிணை 236

நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே-
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், 'பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது' என,
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு
உரை, இனி- வாழி, தோழி!- புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே.

  • நற்றிணை 345

கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென
உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல்
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன
வெளிய விரியும் துறைவ! என்றும்
அளிய பெரிய கேண்மை நும் போல்
சால்பெதிர் கொண்ட செம்மை யோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட
நீடின்று விரும்பார் ஆயின்
வாழ்தல் மற்றெவனோ? தேய்கமா தெளிவே!

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Sep-2023, 19:32:09 IST