உவமான சங்கிரகம்

From Tamil Wiki

உவமான சங்கிரகம் பெண்களை வர்ணிக்கப் பயன்படுத்தும் உவமைகள் மட்டும் தொகுக்கப்பட்ட நூல். உவமான சங்கிரக நூல்கள் நான்கு உள்ளன.

வரலாறு

தொல்காப்பியம் பொருளதிகாரத்திலுள்ள உவம-இயல் மொழியின் அணியைப் பற்றியது. தண்டியலங்காரம், மாறனலங்காரம் ஆகிய நூல்கள் பல்வேறு அணிகளைக் கூறுகின்றன. பக்தி இலக்கிய காலகட்டத்தில் சிற்றிலக்கிய வகைமை சார்ந்த பாடல்கள் அதிகம் பாடப்பட்டன. பிரபந்தங்கள் பலவும் பெண்ணை வருணித்தன. அந்த உவமைகளை மட்டும் தனியாகத் தொகுத்த நூல் உவமான சங்கிரகம். பெண்ணோடு தொடர்புடைய உவமைகளை மட்டும் விளக்கும் இலக்கண நூல்கள் 15-ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தன.

நூல் பற்றி

உவமான சங்கிரகம் என்ற பெயரில் மூன்று நூல்கள் உள்ளன. பொ.யு 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உவமான சங்கிரகம் நூற்பாவால் ஆனது. முப்பத்தியொரு பாடல்களும், நூற்றிப்பதினேழு அடிகளையும் கொண்டது. பொ.யு 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உவமான சங்கிரகம் வெண்பா அந்தாதியால் ஆனது. பதினாறு பாடல்களைக் கொண்டது. குருகை திருமேனி இரத்தின கவிராயர் இதன் ஆசிரியர். பொ.யு 18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உவமான சங்கிரகம் விருத்தால் ஆனது. முப்பத்தியேழு பாடல்களைக் கொண்டது. பொ.யு 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உவமான சங்கிரகம் புகழேந்திப்புலவர் பாடியது. கட்டளைக்கலித்துறை, வெண்பா, விருத்தம் ஆகியவற்றால் ஆன எழுபத்தியொரு பாடல்களைக் கொண்டது.

மாந்தரின் உறுப்புகள் ஒவ்வொன்றையும் குறிக்கும் உவமையின் மரபைப்பற்றி இந்த நூல்கள் சுட்டுகின்றன. சில உறுப்புகளைத் தலைமுடியில் தொடங்கி பாதத்தில் முடிக்கின்றன. இந்த முறைமையைக் ‘கேசாதிபாதம்’ என்பர். சில நூல்கள் பாதத்தில் தொடங்கித் தலைமுடியில் முடிக்கின்றன. இந்த முறைமையைப் ‘பாதாதிகேசம்’ என்பர்.

நூல்கள் பட்டியல்

  • உவமான சங்கிரகம்(15-ஆம் நூற்றாண்டு)
  • இரத்தினச் சுருக்கம்(16-ஆம் நூற்றாண்டு)
  • உவமான சங்கிரகம்(17-ஆம் நூற்றாண்டு)
  • உவமான சங்கிரகம்(18-ஆம் நூற்றாண்டு)

இணைப்புகள்