வரதர்

From Tamil Wiki
Revision as of 00:05, 25 February 2022 by Jeyamohan (talk | contribs)

வரதர் (தி.ச.வரதராசன்) ( ) இலங்கையின் தமிழ் நவீன எழுத்தாளர். சிறுகதையாசிரியர், புதுக்கவிதை ஆசிரியர், இதழாளர், அச்சுத்தொழில் நிபுணர். ஈழத்தில் நவீன இலக்கியத்தின் தொடக்கத்தை உருவாக்கிய மறுமலர்ச்சி என்னும் இதழின் நிறுவனர், ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

தி.ச.வரதராசன் என்ற இயற்பெயர் கொண்ட வரதர் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலை என்ற கிராமத்தில் 01-07-1924 ல் தியாகர் சண்முகம் - சின்னத்தங்கம் இணையருக்குப் பிறந்தார். பொன்னாலை அமெரிக்க மிஷன் தமிழ்ப்பாடசாலை, மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை, சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலை, காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியவற்றில் கல்விபயின்றார்

தனிவாழ்க்கை

வரதரின் மனைவிபெயர் மகாதேவியம்மா. இவர்களுக்கு செந்தாமரை, தேன்மொழி, மலர்விழி ஆகியோர் புதல்விகள். வரதர் அச்சுத்தொழிலும் நூல்வெளியீடும் செய்துவந்தார். ஓவியராகையால் அச்சுத்தொழிலை கலையுணர்வுடன் செய்துவந்தார்

பதிப்புப்பணி

வரதரின் வெளியீட்டகத்தின் மூலம் 33 நூல்கள் வெளிவந்தன. அவற்றுள் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் இலக்கியவழி, பேராசிரியர் கைலாசபதியின் இலக்கியமும் திறனாய்வும், செங்கை ஆழியானின் ஈழத்துச்சிறுகதை வரலாறு மற்றும் மஹாகவி, சாந்தன், முருகையன். சோமகாந்தன் ஆகியோரின் நூல்கள் முக்கியமானவை. பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு வரதர் கதைமலர் தொடரில் தொடர்ந்து ஐந்து நூல்களை வெளியிட்டார்.

இதழியல்

வரதர் இளமையில் பொன்னாலையில் இருந்த சமூகத்தொண்டு நிலையம் வெளியிட்ட சமூகத்தொண்டன் கையெழுத்து இதழின் ஆசிரியராக இருந்தார். பின்னர் அவர் மாணவராய் இருந்த மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையின் மாணவர் தேர்ச்சிச் சங்கம் வெளியிட்ட கையெழுத்து இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இந்தக் கையெழுத்து இதழ்களில் ஓவியங்களையும் வரைந்தார்

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஈழகேசரி புதிய இலக்கியத் துறையில் ஓரளவே அக்கறை காட்டியது. இதனால் நவீன இலக்கியத்துக்கான இதழ் ஒன்றை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் ஈழகேசரியில் இளம் எழுத்தாளர்களாக எழுதிக் கொண்டிருந்த வரதருக்கும் அவரது நண்பர்களான அ.செ. முருகானந்தன், நாவற்குழியூர் நடராசன், பண்டிதர் ச.பஞ்சாட்சர சர்மா போன்றோருக்கும தோன்றியது. அவர்கள் இணைந்து தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் என்ற அமைப்பை 13-06-1943 அன்று உருவாக்கினார்கள். இச்சங்கத்தின் நிறுவனர் வரதர். இதுவே ஈழத்தின் முதலாவது தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பு. இலங்கை நவீனத் தமிழிலக்கியத்தின் வரலாற்றில் இலக்கியம்பற்றிய ஒரு குறிப்பிட்ட கருத்துநிலையோடு செயல்பட்ட அமைப்பு மறுமலர்ச்சி இயக்கம்

இச்சங்கத்தினர் மறுமலர்ச்சி என்ற இதழை வரதரை ஆசிரியராகக் கொண்டு நடத்தினர். ஆரம்பத்தில் மறுமலர்ச்சி கையெழுத்துப் பத்திரிகையாக வெளிவந்தது. 1946 மார்ச் மாதத்திலிருந்து 1948 ஒக்டோபர் மாதம் வரை 23 இதழ்கள் அச்சு இதழ்களாக வெளிவந்த மறுமலர்ச்சி இதழ் ஈழத்தின் முதலாவது நவீன இலக்கியச் சிற்றிதழ் என்று கருதப்படுகிறது.

வரதர் மேலும் பல இதழ்களை நடத்தியிருக்கிறார்

  • புத்தாண்டு மலர்(1949
  • ஆனந்தன்(1952)
  • தேன்மொழி(1955),
  • வெள்ளி (1957
  • புதினம்(1961
  • அறிவுக்களஞ்சியம்(1992)

தேன்மொழி 1955 இலிருந்து மாதம் ஒருமுறை வந்த இந்த இதழ் ஈழத்தின் முதலாவது தமிழ்க்கவிதை இதழ் எனப்படுகிறது. இந்த இதழின் நிர்வாக ஆசிரியராக வரதரும் இணை ஆசிரியராக மஹாகவியும் விளங்கினர்.

இலக்கிய வாழ்க்கை

அச்சில் வரதரது முதலாவது கட்டுரை ஈழகேசரி பத்திரிகையின் கல்வி அனுபந்தம் என்ற பகுதியில் 1939ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது அவருக்கு வயது 15 மட்டுமே. தொடர்ந்து 1940இல் ஈழகேசரி ஆண்டு மலரில் இவரது முதலாவது சிறுகதை 'கல்யாணியின் காதல்" வெளிவந்தது. 13-06-1943இல் வரதர் எழுதிய முதலாவது கவிதை 'ஓர் இரவினிலே" ஈழகேசரியில் வெளியாகியது. இக்கவிதையே ஈழத்தில் வெளிவந்த முதலாவது புதுக்கவிதை

1996இல் வரதர் எழுதி வீரகேசரியில் வெளிவந்த 'யாழ்ப்பாணத்தார் கண்ணீர்" (குறுங்காவியம்) பின்னர் நூலாகவும் வெளிவந்தது. 1995 அக்டோபர் 30ஆம் தேதி வலிகாமம் மக்கள் இடம்பெயர்ந்ததே அக்கவிதையின் பேசுபொருள். வரதர் மொத்தம் 29 சிறுகதைகளை எழுதினார். வரதரின் தேர்ந்தெடுக்கப பட்ட சிறுகதைகள் அடங்கிய கயமைமயக்கம் தொகுதி 1960இல் வெளிவந்தது.

நூல்கள்

குறுநாவல்கள்
  • வென்றுவிட்டாயடி இரத்தினா
  • உணர்ச்சி ஓட்டம்
  • தையலம்மா
கவிதை
  • யாழ்பாணத்தார் கண்ணீர்
சிறுகதைகள்
  • கயமை மயக்கம்
நாவல்
  • காவோலையின் பசுமை

பிறநூல்கள்

  • நாவலர்
  • வாழ்கநீ
  • சங்கிலி மன்னா
  • மலரும் நினைவுகள்
  • பாரதக்கதை
  • சிறுகதைப் பட்டறிவுக்குறிப்புகள்

உசாத்துணை