under review

குத்பு நாயகம்

From Tamil Wiki
Revision as of 23:52, 28 September 2023 by ASN (talk | contribs) (Para Added and Edited; Image Added: Link Created: Proof Checked)
குத்பு நாயகம் - நூல் ஆய்வுரை

குத்பு நாயகம் (1814) வண்ணக்களஞ்சியப் புலவரால் இயற்றப்பட்ட காப்பியம். பொயு. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைநேசர் குத்பு நாயகம் எனப்படும் முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் வாழ்க்கை வரலாறே இந்நூல். இதே தலைப்பில் ஒரு காப்பிய நூலை, சேகனாப் புலவரும் 1812-ல் இயற்றியுள்ளார். குத்பு நாயகம் நூல், 39 படலங்கள், 1707 செய்யுட்களைக் கொண்டது.

நூல் தோற்றம்

முகம்மது இபுராஹீம் புலவர் என அழைக்கப்பட்ட வண்ணக்களஞ்சியப் புலவரால் இயற்றப்பட்ட காப்பியம், குத்பு நாயகம். இந்நூல் 1814-ல், அரங்கேற்றம் செய்யப்பட்டது. குத்பு என்னும் அரபுச் சொல்லுக்கு, புனிதத் தன்மையிலே மிக உச்ச நிலை அடைந்தவர் என்பது பொருள். நபிகள் நாயகத்தின் பேரரும், ஈரான் நாட்டில் கஸ்பியன் கடலுக்குத் தெற்கிலுள்ள தபரிஸ்தான் மாநிலத்தில் ஜீலான் என்னும் செயிலான் நகரில் பிறந்தவருமான முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, அத்தகைய உயரிய நிலையை அடைந்தவர். அவரது வாழ்க்கையைக் கூறும் காப்பிய நூலே குத்பு நாயகம்.

இந்நூல், 1814-ல், நாகூர் தர்காவில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே சேகனாப் புலவர், முகியித்தீன் அப்துல் காதிர் வாழ்க்கை வரலாற்றை, பொயு. 1812-ல் பாடியிருந்தார். இந்நூல் அதற்குப் போட்டியாகப் இயற்றப்பட்டதாகும்.

பிரசுரம் வெளியீடு

குத்பு நாயகம் நூல், 1876-ல், கிதுரு முகம்மது மரைக்காயரால் பதிப்பிக்கப்பட்டு, காரைக்கால் முகம்மது சமதானி அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்டது. பிற்காலத்தில் வேறு ஒரு பதிப்பு ஒன்றும் வெளியானது.  

நூல் அமைப்பு

குத்பு நாயகம் நூல், 39 படலங்களையும், 1707 செய்யுட்களையும் கொண்டுள்ளது. பெரும்பான்மை விருத்தப்பாக்களால் பாடப்பட்டுள்ளது. நூலின் முதன்மையாக இரண்டு காப்புச் செய்யுள்கள் இடம் பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்தும் அமைந்துள்ளது. பல காப்பியங்களில் இடம் பெறாத மரபியற் படலம் இக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, திருமணம், ஆன்மிக வாழ்க்கை, இறையருளால் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் குத்பு நாயகம் காப்பிய விரிவாக விளக்கப்பட்டுள்ளன. 

பல்வேறு இலக்கியச் சிறப்புக்களைக் கொண்டுள்ள இந்நூலின் களம் அரபு  நாடு என்றாலும், தமிழ்நாட்டுக் களத்தைப் பின்னணியாகக் கொண்டே இக்காப்பிய நூல் இயற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியக் கொள்கைகள் மிக விரிவாக இக்காப்பிய நூலில் விளக்கப்பட்டுள்ளன.

நூல் மூலம் அறிய வரும் செய்திகள்

வண்ணக்களஞ்சியப் புலவர், கணவன் என்னும் சொல்லின் பெண்பாலாகக் கணவி (மனைவி) என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

‘ஹஜ்' என்பதைக் குறிக்க ‘கச்சு’ என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

இஸ்லாமியத் திருமண மரபைத் தமிழ்த் திருமண மரபாகப் பாடியுள்ளார்.

முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் புகழை  நபிகள் நாயகத்தின் புகழோடு புலவர் இணைத்துத் தொடர்பு படுத்திப் பாடியுள்ளார்.

முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஆண்டகையின் பேரர் நாகூர் நாதர் ஷாஹுல் ஹமீது ஒலியின் புகழைக் காப்பியத்தின் ஒவ்வொரு படலத்திலும் வண்ணக் களஞ்சியப் புலவர் பாடியுள்ளார்.

நபிகள் நாயகம், அவரது பேரர் முகியித்தீன் ஆண்டகை, அவரது பேரர் நாகூர் நாதர் ஆகிய மூவர் புகழையும் இணைத்துப் பாடியுள்ளார், வண்ணக் களஞ்சியப் புலவர்.

பாடல்கள்

முகியித்தீன் ஆண்டகையின் சிறப்பு

முஹ்யித்தீன் என்று கூற முன்னவன் கருணையுண்டாம்

முஹ்யித்தீன் என்று கூற முஸிபத்தும் பலாயும் நீங்கும்

முஹ்யித்தீன் என்று கூற முத்தொகை உலகும் வாழ்த்தும்

முஹ்யித்தீன் என்று கூற முடிவிலாப் பதவியுண்டே

நிலக்காட்சி

தேன்இனிது அருந்திக் களித்திரு விழியுஞ்

     சிவப்புற நாற்றினை நடுவார்

கூனிய பிறைஒண் மதிநுதன் முகத்துங்

     குயத்தினுஞ் சேதகந் தெறித்த

லான்இங்கு இவர்கள் குரவையின் ஒலியால்

     அடைய அற்புதத்தொடு நோக்கும்

வானவர் மகளிர் விழியினே றணுகா

     வகைமதன் இடுவது ஒத்திடுமே

முகியித்தீன் ஆண்டகையின் பெருமை

நன்கருள் கருணை யெல்லா

ஞானநுண் பொருள்க ளெல்லாம்

பொங்குயர் தவங்க ளெல்லாம்

புனிதமென் றிடுவ தெல்லாந்

தங்குமோ ரருவ தா முகியித்தீ னெனும்பேர்

தாங்கி யிங்குவந் துதித்த

வள்ளலிவர்க்கிணை யெவரு மின்றே

நபிகள் நாயகம், முகியித்தீன் ஆண்டகை, நாகூர் நாதர் பற்றிய பாடல்

கல்லொடு பகர்ந்த முகம்மது பெயரர்

காதிறு முகியித்தீன் பெயரர்

செல்லொடு பொருவுங் கரதலர் சாகுல்

கமீதொலி செழும் புகழ் விளங்க

மதிப்பீடு

கனகாபிஷேக மாலைக்கு அடுத்த நிலையில் சிறந்த காப்பியமாகக் கருதப்படுவது குத்பு நாயகம். வண்ணக் களஞ்சியப் புலவர் இயற்றிய மூன்று காப்பியங்களில் இது இரண்டாவது. (பிற இராஜநாயகம், தீன்விளக்கம்). இஸ்லாமியக் காப்பிய நூல்களுள் தனித்தன்மையுடன், தமிழ் மரபை ஒத்துப் புனையப்பட்ட காப்பியமாகக் குத்பு நாயகம் நூல் கருதப்படுகிறது.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.