செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர்

From Tamil Wiki
Revision as of 22:43, 2 September 2023 by ASN (talk | contribs) (Para Added and Edited;)

செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர், ஓர் இஸ்லாமியக் கவிஞர். புலவர். புராணம், அந்தாதி, கலம்பகம், மாலை போன்ற பல நூல்களை இயற்றினார். உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தை, 1842-ல், முதன் முதலில் அச்சிட்டுப் பதிப்பித்தார். இவரது காலம் 19 ஆம் நூற்றாண்டு.

வாழ்க்கைக் குறிப்பு

செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர், காயல்பட்டினத்தில் வாழ்ந்த மாணிக்க வணிகர் ஹபீபு முஹம்மது மரைக்காயருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ், அரபி, உருது, பாரசீகம், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளை முழுமையாகக் கற்றார். இஸ்லாம் தொடர்பான பல்வேறு துறைகளில் ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்ததால் ‘ஆலிம்’ என்று போற்றப்பட்டார். திருக்குர்ஆனை முழுமையாகக் கற்ற அறிஞர் என்பதால், ’ஹாபிஸ்’ என்று அழைக்கப்பட்டார். ‘மஷாயிகு’  என்றும் போற்றப்பட்டார். ‘ஷேக்னா லெப்பை ஆலிம் புலவர்’ என்றும், ‘சேகனாப் புலவர்’ என்றும் அழைக்கப்பட்டார். குணங்குடி மஸ்தான் சாகிப்பின் பள்ளித் தோழர். காலம் 19 ஆம் நூற்றாண்டு.

இலக்கிய வாழ்க்கை

செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர், கீழக்கரை தைக்கா சாஹிப் வலி நாயகம் அவர்களிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். புராணம், அந்தாதி, கலம்பகம், மாலை போன்ற பல நூல்களை இயற்றினார். சீட்டுக்கவிகள், சித்திரக்கவிகள், முனாஜாத்துக்கள், கீர்த்தனைகள் போன்றவற்றைப் படைத்தார். உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தை, 1842-ல், முதன் முதலில் அச்சிட்டுப் பதிப்பித்தார். அரபு மொழியில் எழுதப்பட்ட ‘புதூஹ்ஷாம்’ என்ற நூலைத் தழுவி தமிழில், ‘புதூஹ்ஷாம் புராணம்’ என்ற காப்பிய நூலை இயற்றினார். மக்கா கலம்பகத்தை மக்கா சென்றபோது அங்கு பாடி அரங்கேற்றினார். இப்ராகிம் நபி அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ’திருமணி மாலை’ என்ற நூலை இயற்றினார். நாகூர் ஆண்டவரின் வாழ்க்கை வரலாற்றை, ’திருக்காரணப் புராணம்’ என்ற தலைப்பில் இயற்றினார்.

விருதுகள்

  • நவீன அகஸ்தியர்
  • புலவர் நாயகம்
  • ஆலிம்
  • ஹாபிஸ்
  • மஷாயிகு

பாடல்கள்

குத்பு நாயகம்:

தாயுரை இகழ்ந்தனன் தந்தை மெய்க்குரு

வாயுரை இகழ்ந்தனன் வல்ல நாயகன்

தூயுரை இகழ்ந்தனன் தூதர் நந்நபி

ஆயுரை இகழ்ந்தனன் பாவியாயினேன்.

நாகையந்தாதி:

காத்திகை தே தத்த தத்தை

கொக் கொக்கக் கத்துக் கொத்தி

காத்திகை தே தத்த கத்தி

குக்கீ தத்த கத்துக் கொத்துக்

காத்திகைத் தே தொத்தித் தாதுகத்

தித்தித்த காதத்தைத் தெக்

காத்திகைத் தே தத்தித் தூதத்த

நாகைக் கத்தா துதியே

சொர்க்க நீதி:

தாய்தகப்பன் சொல்லதனைப் பேணவேண்டும்

தாழ்ச்சியோடு முபகாரஞ் செய்யவேண்டும்

நோய்பிடித்தோ ரிடஞ்சென்று நடக்கவேண்டும்

நொய்யசொல்லை நினைக்காமல் மறக்கவேண்டும்

காய்சினத்தை வாராமற் காக்கவேண்டும்

கண்கொண்டு வேகாமல் நோக்கவேண்டும்

வாய்திவளை மதுரமொழி கதிஜாபாங்கர்

மணிமுத்தின் மஹ்மூதை வாழ்த்தாய்நெஞ்சே!  

மறைவு

செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர், ஆகஸ்ட் 27, 1852-ல், சென்னையில் காலமானார். அவரது நினைவிடம், சென்னை ராயபுரத்தில், குணங்குடி மஸ்தான் சாஹிப் சமாதிக்கு அருகில் அமைந்துள்ளது.

நூல்கள்

  • முஹயித்தின் ஆண்டவர் புராணம்
  • மக்காக் கலம்பகம்
  • குத்பு நாயகம்
  • திருக்காரண புராணம்
  • நாகையந்தாதி
  • திருமணி மாலை
  • தோத்திர மாலை
  • சொர்க்க நீதி
  • புதூஹ்ஷாம் புராணம்
  • சத்துரு சங்காரம்
  • தரும ஷபா அத்து மாலை
  • முனாஜாத்துக்கள்
  • சீட்டுக்கவி
  • சித்திரக்கவிகள்
  • நாகபந்தங்கள்
  • கீர்த்தனைகள்

உசாத்துணை

  • தமிழ் வளர்த்த முஸ்லிம்கள், ஹாபிஸ் எம்.கே. செய்யிது அகமது (ஆலிம்), இலங்கை.
  • முஸ்லிம் தமிழ்ப் பாரம்பரியம், ஹாபிஸ் எம்.கே. செய்யிது அகமது (ஆலிம்), அரசு வெளியீடு, இலங்கை.
  • இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு, பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர், ஸ்ரீ கோமதி அச்சகம்,சென்னை.
  • சொர்க்க நீதி, தமிழ் இணைய மின்னூலகம்
  • நாகையந்தாதி, தமிழ் இணைய மின்னூலகம்