சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்)

From Tamil Wiki
சில நேரங்களில் சில மனிதர்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள் (1970) த.ஜெயகாந்தன் எழுதிய நாவல். ஜெயகாந்தனின் சிறந்த நாவல் இது என விமர்சகர்களால் கருதப்படுகிறது.1972ல் இந்நாவலுக்காக அவருக்கு கேந்திரிய சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டது. தமிழ்ப்பண்பாட்டின் ஒழுக்க நம்பிக்கைகளை விமர்சனம் செய்து ஒரு பெண்ணின் அகத்தேடலை முன்வைத்த ஆக்கம் இது.

எழுத்து,பிரசுரம்

சில நேரங்களில் சில மனிதர்கள் 20 நவம்பர் 1968 ஆனந்தவிகடன் இதழில் அக்கினிப்பிரவேசம் என்னும் சிறுகதையை எழுதினார். அந்நாவல் வாசகர்களிடையே சீற்றத்தை உருவாக்கியது. புறச்சூழலின் அழுத்தத்தால் ஓர் அயல் ஆணுடன் உறவுகொண்டுவிட்ட இளம்பெண்ணான கங்கா அதை தன் அன்னையிடம் வந்து சொல்ல அந்த அன்னை அவள் தலையில் நீரைக்கொட்டி அவள் தூய்மை அடைந்துவிட்டாள் என சொல்லும் கதை அது. கற்புநெறியை நிராகரித்து எழுதப்பட்ட நாவல் அது என விமர்சனம் எழுந்தது.

அந்த வினாக்களுக்கு விடையளிக்கும் முகமாக ஜெயகாந்தன் தினமணி கதிர் இதழில் காலங்கள் மாறும் என்னும் தலைப்பில் இந்நாவலை எழுதத் தொடங்கினார். அந்த அன்னை நேர்மாறாக தன் மகள் அயலவனுடன் பாலுறவு கொண்டதை அம்பலப்படுத்தியிருந்தால் என்னாகும் என கதையை விரித்துச் சென்று எழுதப்பட்டது இந்நாவல். அதை ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் தலைப்புடன் 1970 நூலாக வெளியிட்டார். மீனாட்சி புத்தக நிலையம், மதுரை இந்நாவலை அவர்களின் நூறாவது நூலாக வெளியிட்டது

கதைச்சுருக்கம்

கதைநாயகியான கங்காவின் நினைவுகளில் தொடங்குகிறது இந்நாவல். அன்னையால் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்ட கங்காவை அவள் தாய்மாமன் வெங்கு மாமா அழைத்துச் சென்று படிக்கவைக்கிறார். அவள் உயர்கல்வி கற்று அதிகாரியாகப் பணிபுரிகிறார். வெங்கு மாமா கங்காவின் மேல் பாலியல் உரிமையை எடுத்துக்கொள்ள முயல்கிறார். கங்கா எதிர்க்கும்போது அவள் அவளுடன் உறவுகொண்டவனை கணவனாக எண்ணவேண்டும் என்றும், இந்து முறைப்படி அது காந்தர்வ மணம் என்றும் சொல்கிறார்.

கங்கா அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அவனை தேடிக் கண்டடைகிறாள். அவன் பெயர் பிரபு. செல்வந்தக்குடும்பத்தைச் சேர்ந்தவன். இளமையில் பெண்களை நாடி அலைந்தவன் சொத்துக்களை இழந்து செல்வந்தக்குடும்பத்துப் பெண்ணின் கணவனாக வாழ்கிறான். அவன் மகள் மஞ்சு. பிரபுவுடன் நட்பு கொள்ளும் கங்கா கொஞ்சம் கொஞ்சமாக அவனை தன் கணவனாக எண்ணத் தொடங்குகிறாள். ஆனால் பிரபு அவ்வுணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை. அதனால் புண்பட்டு விலகும் கங்கா தன்னை நுண்ணுணர்வுகளற்றவளாக ஆக்கிக்கொள்கிறாள்.

கதைமாந்தர்

  • கங்கா- கதைநாயகி. பிரபுவுடன் இளமையில் பாலுறவு கொள்ள நேர்ந்தவள்
  • கனகம்- கங்காவின் அம்மா
  • வெங்கு மாமா- கங்காவின் தாய்மாமா. அவளை படிக்கவைத்தவர். அவள்மேல் காமம்கொண்டவர்.
  • பிரபு -கங்காவை வல்லுறவுக்கு ஆளாக்கியவன், அவளை புரிந்துகொள்ளாதவன்
  • மஞ்சு- பிரபுவின் மகள்
  • பத்மா- பிரபுவின் மனைவி
  • விஸ்வநாதன் – கங்கா வல்லுறவு கொள்ளப்பட்ட செய்தியை கதையாக எழுதிய எழுத்தாளர்

திரைப்பட வடிவம்

சில நேரங்களில் சில மனிதர்கள் ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1975ல் திரைப்படமாக வெளிவந்தது

இலக்கிய இடம்

அரைநூற்றாண்டுக்கும் மேலாக சில நேரங்களில் சில மனிதர்கள் தமிழில் எழுதப்பட்ட செவ்வியல் படைப்புக்களில் ஒன்றாகவே நிலைகொள்கிறது. கங்காவின் உணர்வுகளை அகஓட்டமாகச் சொல்லிச் செல்லும் ஜெயகாந்தனின் நடை நுட்பமான உளவியல் தருணங்களையும் கண்டடைதல்களையும் கொண்டது. இந்நாவலின் அடிப்படையான சிக்கலாகிய பாலுறவு சார்ந்த தூய்மைச் சிந்தனைகள் இன்று வலுவிழந்துவிட்டன. ஆனால் ஒரு பெண்ணின் அகத்தேடல், அவளுடைய நீங்காத தனிமை ஆகியவற்றின் கதையாக & இன்றும் ஆழ்ந்த பார்வைகளை அளிப்பதாகவே உள்ளது

ஐம்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்நாவல் ஜெயகாந்தனுக்கு அடுத்த தலைமுறை வாசகிகளும் அவர்களை அதில் அடையாளம் கண்டுகொள்ளும் கூர்மையுடன் உள்ளது. கங்காவின் இறுதி அழுகை, “நான் யார்” என்ற அழுகை. இருமடங்காக அவள் உணரும் நிராகரிப்பும், கலங்கமும் அவளை தன்னையே வெறுக்கச்செய்கிறது. “தன்னையே தொலைத்தவள்” என்ற சொற்க்கள் இவளுக்கு எவ்வளவு பொருத்தமாக அமைகின்றன! இவள் நிலையைக்கண்டு பரிதாபம், இரக்கம் தோன்றுகிறது. கூடவே, அவளது சுயவெறுப்பின் ஒரு பங்கை நாமும் உணர்கிறோம் என்று இளம் எழுத்தாளரான சுசித்ரா ராமச்சந்திரன் எழுதுகிறார்.*

“கங்காவை அவளது குடும்பம் ஏற்றுக் கொண்டிருந்தால், வெங்குமாமாவுக்குப் பணிந்திருந்தால், பிரபு ஏற்றுக் கொண்டிருந்தால், பத்மா அணைத்துக் கொண்டிருந்தால், திருமணம் நடந்திருந்தால் என அத்தனை சாத்தியங்களையும் இந்நாவல் வழி ஜெயகாந்தன் நம்மை யோசிக்க வைக்கிறார். ஆனால் இந்தச் சாத்தியங்கள் எதுவும் எட்டமுடியாத நிறைவு செய்ய முடியாத ஒரு நவீனப் பெண் கங்கா” என்இ இளம் விமர்சகரான கங்கா ஈஸ்வர் எழுதுகிறார்.*

’இன்றைய வாசிப்பில் இது பெண்சுதந்திரம் பற்றிய நாவல் அல்ல என்றே தோன்றுகிறது. இது பெண்ணின் தனித்தன்மை பற்றிய நாவல். பெண்ணின் பாலியல் உரிமை பற்றிய நாவல். பெண்ணில் பாலியல் தேடல் பற்றிய நாவலும் கூட. அவ்வகையில் தமிழில் எல்லாத் தளத்திலும் முதன்மையான் பெரும் படைப்புகளில் ஒன்று என்று இதை தயங்காமல் சொல்வேன்’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்*.

ஜெயகாந்தன் இந்நாவலின் நீட்சியாக கங்கை எங்கே போகிறாள் என்னும் நாவலையும் எழுதினார்.