சிவா கிருஷ்ணமூர்த்தி
எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி (சிவகுமார்) (நவம்பர் 1970) ஒரு தமிழ் சிறுகதை எழுத்தாளர் ஆவார். மரபிலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவர் என்பதால் அவை சார்ந்த ரசனைக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் ஐரோப்பிய நிலப்பரப்பில் நிகழ்பவை. அயல் பண்பாடுகளுடனான உராய்வை எள்ளலான தோனியில் பேசுபவை. அயல் நாட்டு வாழ்வில் நாம் கொள்ளும் பாவனைகளையும் போலித்தனங்களையும் பேசுபொருளாக கொண்டவை.
பிறப்பு, இளமை
கிருஷ்ணமூர்த்தி - தாணம்மாள் இணையருக்கு நாகர்கோவிலில் நவம்பர் 1970-ல் மகனாக பிறந்தார். சேலம் நகராய்சி பள்ளி, பாரதி வித்தியாலயம், தாராபுரம் அரசுப்பள்ளி, திண்டுக்கல் புனித மேரி உயர்நிலைப்பள்ளி ஆகிய கல்விநிலையங்களில் பள்ளிக் கல்வி கற்றார். இளங்கலை கணினி அறிவியல் படிப்பை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட வாசவி கல்லூரியிலும் முதுகலை படிப்பை பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட உருமு தனலட்சுமி கல்லூரியிலும் கற்றார்.
தனி வாழ்க்கை
மே 14, 2000 அன்று கவிதாவை மணந்தார். ஸ்ரீ கிருஷ்ணா, ஆதித்த கல்யாண் என இரு மகன்கள். தற்போது தகவல் தொழில்நுட்ப துறையில் திட்ட மேலாளராக பணியாற்றுகிறார். குடும்பத்துடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
பங்களிப்பு
இலக்கியம்
சிவா கிருஷ்ணமூர்த்தியின் முதல் சிறுகதை 'ஸ்குரில்' 2011-ஆம் ஆண்டு 'சொல்வனம்' இதழில் வெளியானது. அவரது முதல் சிறுகதை தொகுப்பு 'வெளிச்சமும் வெயிலும்' 2018-ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் 'சொல்வனம்', 'பதாகை' இணைய இதழ்களின் ஆசிரியக்குழுவில் உள்ளார். 'லண்டன் இலக்கிய வட்டத்திலும்' முக்கிய உறுப்பினராக உள்ளார்.
இலக்கிய முக்கியத்துவம்
புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், வண்ணதாசன், சுஜாதா மற்றும் ஜெயமோகன் ஆகியோரை தனது இலக்கிய முன்னோடிகளாக குறிப்பிடுகிறார் சிவா கிருஷ்ணமூர்த்தி. அ. முத்துலிங்கத்தின் வழியில் அயல் நிலத்து வாழ்க்கையின் வண்ணங்களையும், பண்பாட்டு உராய்வுகளையும், அடையாள நெருக்கடிகளையும் கதைகளாக ஆக்குகிறார். பகடியை இச்சிக்கலை பேசுவதற்கு உகந்த மொழியாகவும் கையாள்கிறார். அவர் எழுதிய 'மறவோம்' சிறுகதை மிக முக்கியமான சிறுகதையாக விமர்சகர்களால் சுட்டப்படுகிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் சிவா கிருஷ்ணமூர்த்தியின் சிறுகதைக்கு எழுதிய முன்னுரையில்[1] இவ்வாறு குறிப்பிடுகிறார். 'இத்தொகுதியில் உள்ள ‘மறவோம்’ சிவா கிருஷ்ணமூர்த்தியின் மிகச்சிறந்த சிறுகதை மட்டுமல்ல, புலம்பெயர்வகை இலக்கியத்தில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளில் ஒன்றும்கூட. இது மிக ஆழமாக ஒரு பண்பாட்டு உரையாடலை கதைநிகழும் தளத்தில் நிகழ்த்தி, கதை முடிந்தபின்னர் வாசகனின் எண்ணங்களிலும் நீட்டிக்கச் செய்கிறது.'
படைப்புகள்
- வெளிச்சமும் வெயிலும் - 2018, சிறுகதைத் தொகுதி, பதாகை - யாவரும் பதிப்பகம் வெளியீடு
உசாத்துணை
இணைப்புகள்
{{first review completed}