வஞ்சிப்பா

From Tamil Wiki
Revision as of 21:36, 29 July 2023 by ASN (talk | contribs)

வஞ்சிப்பா என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் நால்வகைப் பாக்களுள் ஒன்று. வஞ்சிப்பாவின் சிற்றெல்லை இரண்டடிகளாகவும் பேரெல்லை பல அடிகளாகவும் அமையும். வஞ்சிப்பா தூங்கலோசை உடையது. வஞ்சிப்பா குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா என இரண்டு வகைப்படும்.

வஞ்சிப்பா இலக்கணம்

“தூங்கல் இசையன வஞ்சி; மற்றவை

ஆய்ந்த தனிச்சொலோடு அகவலின் இறுமே”

- என்று இலக்கண விளக்கம் நூல் கூறுகிறது.

சீர்: வஞ்சிப்பாவில் தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என்று கனிச்சீர்கள் அமைந்திருக்கும். இது வஞ்சிப்பாவுக்கே உரிய சீர் ஆதலால் வஞ்சியுரிச்சீர் எனப்படும். சிறுபான்மை காய்ச்சீர்களும் கலந்து வரும்.

தளை: வஞ்சிப்பாவிற்கு உரிய தளைகள் இரண்டு அவை, ஒன்றிய வஞ்சித்தளை (கனிமுன் நிரையசை வருவது); ஒன்றாத வஞ்சித்தளை (கனிமுன் நேரசை வருவது). சிறுபான்மை பிற தளைகளும் வரும்.

அடி: குறளடிகளால் அல்லது சிந்தடிகளால் மட்டுமே அமைந்து வருவது வஞ்சிப்பா. வேறு எவ்வகை அடியும் வஞ்சிப்பாவில் வராது. அதாவது ஒரு வஞ்சிப்பா முழுமையும் குறளடிகளாய் வரும்; அல்லது சிந்தடிகளாய் வரும். வஞ்சிப்பா மூன்றடிகளில் தொடங்கி பல அடிகளில் அமையும்.

முடிப்பு: வஞ்சிப்பா இறுதியில் ஒரு தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு முடியும்.

ஓசை: வஞ்சிப்பாவின் ஓசை, தூங்கல் ஓசை எனப்படும்.

தூங்கலோசை வகைகள்

வஞ்சிப்பாவின் தூங்கலோசை மூன்று வவகைப்படும். அவை, ஏந்திசைத் தூங்கல் ஓசை, அகவல் தூங்கல் ஓசை, பிரிந்திசைத் தூங்கல் ஓசை.

ஏந்திசைத் தூங்கல் ஓசை

பா முழுவதும் ஒன்றிய வஞ்சித்தளையால் அமைந்திருந்தால் அது ஏந்திசைத் துள்ளல் ஓசை.

உதாரணப் பாடல்:

வினைத்திண்பகை விழச்செற்றவன்

வனப்பங்கய மலர்த்தாளிணை

நினைத்தன்பொடு தொழுதேத்துநர்

நாளும்

மயலாம் நாற்கதி மருவார் ;

பெயரா மேற்கதி பெறுகுவர் விரைந்தே

அகவல் தூங்கல் ஓசை

பாடல் முழுவதும் ஒன்றாத வஞ்சித் தளையால் வருவது அகவல் தூங்கல் ஓசை.

உதாரணப் பாடல்:

வானோர்தொழ வண்டாமரைத்

தேனார்மலர் மேல்வந்தருள்

ஆனாஅருள் கூர் அறிவனைக்

கானார்

மலர்கொண் டேத்தி வணங்குநர் ,

பலர்புகழ் முத்தி பெறுகுவர் ; விரைந்தே!

பிரிந்திசைத் தூங்கல் ஓசை

வஞ்சித் தளைகளுடன் பிற தளைகளும் விரவி வருவது பிரிந்திசைத் தூங்கல் ஓசை.

உதாரணப் பாடல்:

மந்தாநிலம் வந்தசைப்ப

வெண்சாமரை புடைபெயர்தரச்

செந்தாமரை நாண்மலர்மிசை

யெனவாங்கு,

இனிதி னொதுங்கிய விறைவனை

மனம்மொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே

வஞ்சிப்பா வகைகள்

வஞ்சிப்பா இரண்டு வகைப்படும். அவை குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா.

குறளடி வஞ்சிப்பா

குறளடிகளால் அமைந்து, தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு முடிவது குறளடி வஞ்சிப்பா.

உதாரணப் பாடல்:

சுறமறிவன துறையெல்லாம்

இறவீன்பன இல்லெல்லாம்

மீன்திரிவன கிடங்கெல்லாம்

தேன்தாழ்வன பொழிலெல்லாம்

மெனவாங்கு,

தண்பணை தழீஇய இருக்கை

மண்கெழு நெடுமதில் மன்ன னூரே”

மேற்கண்ட பாடலில் முதல் நான்கு அடிகள் வஞ்சித்தளை அமைந்த  குறளடிகள். அடுத்து வருவது தனிச் சொல். அதன்பின் வரும் இரண்டடிகளும் ஆசிரிய ஓசை அமைந்த ஆசிரியச் சுரிதகம். இவ்வாறு அமைந்தமையால் இது குறளடி வஞ்சிப்பா.

சிந்தடி வஞ்சிப்பா

சிந்தடிகளால் அமைந்து, தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு முடிவது சிந்தடி வஞ்சிப்பா.

உதாரணப் பாடல்:

தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோள்மேல்

பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி

என்னலத்தகை இதுவென்னென எழில்காட்டிச்

சொன்னலத்தகைப் பொருள்கருத்தி னிற்சிறந்தாங்கு

எனப்பெரிதுங் ,

கலங்கஞ ரெய்தி விடுப்பவுஞ்

சிலம்பிடைச் செலவுஞ் சேணிவந் தற்றே

உசாத்துணை

யாப்பருங்கலக்காரிகை: சென்னை நூலகம்

யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்: பதிப்பாசிரியர்: முனைவர் சோ. கண்ணதாசன் தமிழ் இணைய மின்னூலகம்

இலக்கண விளக்கம்: வைத்தியநாத தேசிகர்: பதிப்பாசிரியர்: தி.வே. கோபாலையர்: தமிழ் இணைய மின்னூலகம்

யாப்பிலக்கணம்: விசாகப்பெருமாளையர்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம் தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்