இயம்
இயம்: (ism) தமிழில் சொல்லொட்டாக அமைவது. கலைச் சொல்லாக்கத்தில் பயன்படுத்தப்படும் சொல்லொட்டு. ஆங்கிலத்தில் ism என்ற ஒலியிணைவின் நேரடியான தமிழ்வடிவம்.
பயன்பாடு
இயம் என்னும் சொல்லொட்டு ஒரு குறிப்பிட்ட பார்வைக் கோணத்தையோ, கொள்கையையோ, சிந்தனை முறையையோ, ஒரு வாதத்தையோ குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு சிந்தனையாளரின் சிந்தனைமுறையை குறிக்க அவர் பெயருடன் இயம் இணைக்கப்படலாம். உதாரணம் மார்க்ஸியம், ஃப்ராய்டியம், பெரியாரியம், அம்பேத்கரியம். இவை முறையே Marxism, Freudism, Periyarism, Ambedkarism சொற்களின் தமிழ் வடிவங்கள். ஒரு குறிப்பிட்ட கொள்கையைக் குறிக்க அது சார்ந்த பெயருடன் இயம் இணைந்து கலைச்சொல் உருவாகலாம். உதாரணம் பரப்பியம் (Populism) முதலியம் (Capitalism) இருத்தலியம் (Existentialism). தமிழை அடையாளமாக கொண்டு முன் வைக்கப்படும் பண்பாட்டுப் பார்வையை குறிக்கும் தமிழியம் போன்ற சொற்களும் புழக்கத்தில் உள்ளன.
நீட்சி
இயம் என்னும் சொல்லொட்டு நீட்சி பெற்று இயர் என்றும் பயன்படுத்தப்படுகிறது. இது ist என்னும் சொல்லொட்டின் தமிழ் வடிவம். உதாரணம் மார்க்ஸியர், பெரியாரியர், அம்பேத்கரியர், தமிழியர்(Marxist , Periyarist, Ambedkarist). தமிழியர் போன்ற சொற்களும் புழக்கத்தில் உள்ளன.
இயம், வாதம்
இயம் என்று பிற்பாடு மொழியாக்கம் செய்யப்பட்ட பல சொற்கள் தொடக்கத்தில் வாதம் என்னும் சொல்லொட்டு அளித்து மொழிப் பெயர்க்கப்பட்டன. உதாரணம் பொருள்முதல்வாதம் (Materialism), அமைப்புவாதம் (Structuralism)
(பார்க்க வாதம்)
இயம்,இயல்
இயல், இயம் என்னும் இரு சொல்லொட்டுகளும் பிழையாக மாற்றிப் பயன்படுத்தப்படுவதுண்டு. இயல் என்னும் சொல்லொட்டு ஒரு குறிப்பிட்ட அறிவுத்துறையை குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு கொள்கையையோ பார்வையையோ குறிக்க இயல் என்னும் சொல்லொட்டை பயன்படுத்தலாகாது. இயம், வாதம் என்னும் சொல்லொட்டுகளே அதற்குரியவை.
(பார்க்க இயல்)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:44 IST