வீரட்டானேஸ்வரர் கோயில்

From Tamil Wiki

வீரட்டானேஸ்வரர் கோயில் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

இடம்

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் கோயில், திருவதிகை-607 106, பண்ருட்டி அஞ்சல், கடலூர். சென்னை-நெய்வேலி மார்க்கத்திலுள்ள பண்ருட்டி நகரை ஒட்டியவாறு அமைந்துள்ள திருவதிகைக்கு பண்ருட்டி வழியாக செல்லும் பேருந்துகளில் செல்லலாம். கடலூரிலிருந்தும் செல்லலாம்.

வரலாறு

கி.பி.6-ஆம் நூற்றாண்டு / பல்லவர்களுக்கும் முற்பட்டது

மருள்நீக்கியார் என்னும் இயற்பெயர் கொண்ட திருநாவுக்கரசர் சமணசமயத்தை தழுவியிருந்த போது சூலை நோயால் பாதிக்கப்பட்டார். அவருடைய நோய் தீர சமண முனிவர்கள் முயன்றும் தோற்றனர். இதனால் சிவபக்தையாயிருந்த தம் தமக்கை திலகவதியாரிடம் சென்று தன் நோய் தீர வேண்டினார். தமக்கையாரும் வீரட்டானத்துறை சிவன்கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அவ்விடத்தில் மருள்நீக்கியார் சிவனை நோக்கி கூற்றாயினவாறு விலக்ககலீர் என்னும் பதிகத்தைப் பாடினார். நோயும் தணிந்தது. இறைவன் அவருடைய பதிகப்பாடலின் நா வன்மை கேட்டு மகிழ்வுற்று நாவுக்கரசர் என்னும் பட்டம் சூட்டினார். இவ்வாறு மருள்நீக்கியார் தேவாரமூவருள் ஒருவரான திருநாவுக்கரசர் ஆனார். திருநாவுக்கரசர் தம் வாழ்நாளில் சிவத்தலங்கள் யாவும் சென்று உழவாரப் பணி செய்து முக்தியடைந்தார். அட்டவீரட்டானத் தலங்களில் இத்தலம் முதன்மையானது. திரிபுரத்தை எரித்த இறைவனது கோலம் இங்குள்ளது. அட்ட வீரட்டத் தலங்களில் அதிகப் பாடல் பெற்ற தலமும் இதுவே. தேவார மூவரோடு மாணிக்க வாசகரும், அருணகிரிநாதரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். திருநாவுக்கரசரால் உழவாரப்பணி இங்குதான் முதன் முதலில் செய்யப்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கும் இத்தலத்திலிருந்துதான் தொடங்கியது. இக்கோயிலில் அதிக திருமணங்கள் நடைபெறுகின்றன. பன்னிரு திருமுறைகளில் இறைவன் முப்புரத்தை எரித்த நிகழ்ச்சி அதிகமாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டு

தொன்மம்

தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களும் சிவனை நோக்கி தவம் செய்து எவராலும் வெல்லமுடியாத வரத்தினைப் பெற்றனர். மேலும் அவர்கள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் ஆன கோட்டைகளை கட்டி வாழ்ந்து மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் எண்ணிறந்த துன்பங்களை விளைவித்தனர். இதனால் தேவர்கள் சிவனிடம் முறையிடவே, சிவபெருமான் பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களை தேர்ச்சக்கரங்களாகவும், பிரம்மனை தேரோட்டியாகவும் கொண்டு கையில் மேருமலையை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், திருமாலினை அம்பாகவும் கொண்டு புறப்பட்டார். அவருடன் தேவர்படையும் புறப்பட்டது. தேவர்கள் தம்மால் அசுரர்கள் அழிவர் என்று ஆணவங் கொண்ட எண்ணத்தைக் கொண்டிருந்தனர். சிவபெருமான் அசுரர்கள் மீது எவ்வித கருவியையும் பயன்படுத்தாமல் தன் சிரிப்பாலே எழுந்த தீப்பிழம்பால் முப்புரத்தையும் அழித்தார். தேவர்கள் வெட்கி தலைக்குனிந்தனர். இவ்வாறு சிவபெருமான் அசுரர்களின் ஆணவத்தையும், தேவர்களின் ஆணவத்தையும் அழித்தார். மேலும் அந்த மூன்று அசுரர்களில் இருவரை தனது வாயிற் காப்பாளாராகவும், ஒருவனை குடமுழா இசைப்பவனாகவும் இருத்திக் கொண்டார்.

கோவில் பற்றி

மூலவர் பெயர்: வீரட்டானேஸ்வரர் அம்மன் பெயர்: பெரியநாயகி, திரிபுரசுந்தரி தலமரம்: சரங்கொன்றை தீர்த்தம்: சூலத்தீர்த்தம், கிணறு தீர்த்தம், சக்கர தீர்த்தம், கெடிலநதி

கோவில் அமைப்பு

இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் கற்றளியாக்கப்பட்ட இக்கோயில் அதற்கு முன்னரே மண்டளியாக இருந்திருக்க வேண்டும். இங்கு காணப்படும் சோழர்கால அண்ணாமலையார் சிற்பத்தை நோக்குகையில் சோழர்காலத் திருப்பணிகளையும் இக்கோயில் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கருவறை விமானம் சுவரிலிருந்து கலசம் வரை சுதையால் செய்யப்பட்டுள்ளது. விமானம் திராவிட பாணியில் எட்டுப்பட்டைகளைக் கொண்ட எண்கரமாக உள்ளது. ஐந்து தளங்களை உடையதாக உள்ளது. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், இராஜகோபுரம், 16 கால் மண்டபம், அம்மன் திருமுன் ஆகிய கட்டடப் பரிமாணங்களைப் பெற்றுள்ளது. மகாமண்டபம் கூட்டுத்தூண்களைப் பெற்றுள்ளது. இக்கோயிலில் பல்லவர் கால யாளித்தூண்கள் காணப்படுகின்றன. 16 கால் மண்டபத் தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

சிற்பங்கள்

இக்கோயில் பல்லவர்காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். காஞ்சி கைலாசநாதர் கோயிலைப் போன்று கருவறைத் திருச்சுற்றுக்களைப் பெற்றுள்ளது. பல்லவர் கால கற்றளி சிதிலமடைந்த பின்பு சோழர்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டது. பின் மீண்டும் பழுதடைந்த நிலையில் கருவறைச் சுற்றில் உள்ள கோட்டச் சிற்பங்கள் அனைத்தும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது. கங்காளர், பிச்சையேற்கும் பெருமான், காலனை வதைக்கும் காலாரி, சந்திரசேகரர், உமை, விநாயகர், இராமர் சீதை, ஆனையுரித்த பிரான், முப்புரம் எரித்த பெருமான், வீரபத்திரர், கங்கையை சடையில் கொண்ட பிரான், இராவணனுக்கு அருள்பாலித்த இறைவன் ஆகிய சுதைச் சிற்பங்களும், அண்ணாமலையார் சோழர்கால கற்சிற்பம் மேற்குக் கோட்டத்திலும் காணப்படுகின்றன. பத்தர் சிற்பம் ஒன்று இக்கோயிலில் உள்ளது. திருநாவுக்கரசரின் புடைப்புச்சிற்பமும் காணப்படுகின்றது. தூண்களில் அரசதிருவுருவங்கள் காணப்படுகின்றன. நந்தி கல் சிற்பம் உள்ளது. கோபுரத்தின் நுழைவுவாயிலின் உட்புறம் ஆடல் கரணங்கள் 108 வகையும் ஆடல் மகள் ஆடுவதான புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன.

ஓவியங்கள்

16 தூண்கள் உள்ள முகமண்டபத்தின் விதானத்தில் ஆடல்வல்லான், கங்கையை சடைமேல் தாங்கும் கங்காதரர், கலைமகள், கணபதி, முருகன்,ஆலமர்க்கடவுள் முதலிய ஓவியங்கள் காணப்படுகின்றன.

சிறப்புகள்

அன்றாடம்

காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை

வழிபாடு

  • பூசைக்காலம்: விச்வரூபம், திருவனந்தல், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

விழாக்கள்

  • சித்திரை 10 நாட்கள் திருவிழா
  • சித்திரை சதயம் அப்பர் முக்திப்பேறு
  • கைலாயக் காட்சி
  • வைகாசிப் பெருவிழா 10 நாட்கள் திருத்தேர் உலா
  • ஆடிப்பூரம் உற்சவம் 10 நாட்கள்
  • கார்த்திகை சோமவாரம்
  • மார்கழி மாதம் மாணிக்கவாசகர் விழா 10 நாட்கள்
  • மார்கழி திருவதிகை நடராசர் தீர்த்தவாரி
  • மாசி மகாசிவராத்திரி
  • பங்குனி திலகவதியார் குருபூஜை

வேறு பண்டிகைகள்

உசாத்துணை