திருநாதர் குன்று

From Tamil Wiki
Revision as of 16:47, 15 February 2022 by Ramya (talk | contribs)

திருநாதர் குன்று (சிறுகடம்பூர்மலை)(பொ.யு. 4-5-ஆம் நூற்றாண்டு) விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டைக்கு வடக்கே உள்ள சமணர் குன்று. திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன. சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களின் அமர்ந்த நிலை இரண்டடுக்குச் சிற்பங்களும், முதிர்ந்தநிலை பிராமி எழுத்துமுறையிலிருந்து, வட்டெழுத்தாக தமிழ் எழுத்துகள் வளர்ந்து மாறுதல் அடைகிற காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இங்குதான் முதன்முதலில் காணப்படுகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கிறது

இடம்

திருநாதர் குன்று விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து மேல் மலையனூர் செல்லும் சாலையில் சிறுகடம்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது. பெரிய பாறைகளைக் கொண்டு மலைபோல் காணப்படும் இந்தக் குன்று சிறுகடம்பூர் மலை என்றும், இப்பகுதி சிம்மபுரி என்றும் அழைக்கப்படுகிறது. சாலை ஓரமாகச் செல்லும் ஒரு சிறிய மண்பாதை வழியே அக்குன்றின் அடிவாரம் சென்றதும், குன்றின்மீது செல்லப் படிகள் காணப்படுகின்றன. அதன் வழியாக மேலே சென்றால், தொக்கி நிற்பதைப் போலக் காணப்படும் பெரிய அளவிலான பாறைகளைக் காணலாம். அதையும் கடந்து மேலே சென்றால் பரந்துவிரிந்த விளைநிலங்களும் சமவெளிகளும் காணப்படுகின்றன.

அமைப்பு

மலையின் உச்சியில் உள்ள சமதளத்தில் கருங்கல் கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று புறமும் பாறைகள் சூழ்ந்துள்ளன. இங்கு திறந்தவெளிப் பாறைச் சிற்பங்கள் உள்ளன. இங்கு மிகப்பெரிய பாறையும் அதில் 24 தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள், இரண்டு வரிசைகளில், வரிசைக்குப் பன்னிரெண்டு வீதம் செதுக்கப்பட்டுள்ளன. சமண மரபில் இந்தச் சிற்ப அமைப்பு சதுர்விம்சதி எனப்படுகிறது. தீர்த்தங்கரர்கள் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்து காணப்படுகின்றனர். தீர்த்தங்கரர்களுக்கு மேலே திங்கள் மூன்றடுக்கிய திருமுக்குடை காட்டப்பட்டுள்ளது. சந்திராதித்தம், நித்தியவினோதம், சகலபாசனம் என்னும் முக்குடைகளின் கீழே தீர்த்தங்கரர்கள் வீற்றிருக்கின்றனர். இந்தப் புடைப்புச் சிற்பங்கள் பொ.யு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இது சமண வழிபாட்டுத்தலமாகத் திகழ்ந்துள்ளது. ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் இடையில், ஒன்றின் குறுக்காக ஒன்றாக, இரண்டு சாமரங்கள் காட்டப்பட்டுள்ளன. இந்தப் புடைப்புச் சிற்பங்கள் ஒரே அளவில் காணப்படுகின்றன. இந்தப் பாறையின் இடது புறம் மேலே பார்சுவநாதரின் சிறு புடைப்புச் சிற்பம் ஒன்று நின்ற நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.

வீழ்ந்து கிடக்கும் சிலை

மலையின் நடுப்பகுதியில் ஒரு பெரிய பாறையில் பத்மாசனத்தில் ஒரு தீர்த்தங்கரரின் சிலையும், சிலையின் மேற்பகுதியில் கல்வெட்டுச் சான்றும் இருந்துள்ளன.ஆனால் அது இரண்டாக உடைக்கப்பட்டு தற்போது வீழ்ந்து கிடக்கிறது. மதுரையில் மதம் மாறிய கூன்பாண்டியன் எண்ணாயிரம் சமணரைக் கழுவற்றியதாகப் பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், தக்கயாகப்பரணி முதலானவை கூறுகின்றன.ஆனால் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறிய மகேந்திரப்பல்லவனோ இம்மலை அருகிலேயே மற்றொரு மலையில் அரங்கநாதர் கோயில் ஒன்றை சமண சான்றுகளை அழிக்காமலேயே கட்டியுள்ளான்.

வழிபாடு

செஞ்சிப்பகுதியில் வாழும் சமணர்கள் சித்திரை மாதத்தில் ஒரு நாளில் இங்கு வந்து 24 தீர்த்தங்கரர்களின் சிற்பத் தொகுதிக்கு நீராட்டிப் பூசைகள் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கல்வெட்டு

திருநாதர் குன்றில் மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டு கல்வெட்டுகள், வீடுபேறு அடைவதற்காக சல்லேகனை என்னும் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த இரண்டு சமணத் துறவிகளின் நிசீதிகைகளை (உயிர்துறந்த இடம்) சுட்டும் கல்வெட்டுகளாகும். மூன்றாவது கல்வெட்டு இங்கிருந்த கோவிலில் விளக்கெரிக்க நானூறு ஆடுகள் தானமளித்த செய்தியினைப் பதிவு செய்துள்ள கல்வெட்டாகும்.

‘ஐ’ எனும் தமிழ் எழுத்து

‘ஐ’ எனும் தமிழ் எழுத்து, திருநாதர்குன்று கல்வெட்டில்தான் முதலில் காணப்பட்டது என்பதால் இம்மலை தமிழுக்கு எழுத்து தந்த மலை எனும் பெயர் பெற்றது. இங்குள்ள ஒரு கல்வெட்டு,சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்கிறது. மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் என்கிறது. சமீபத்தில் காணப்பட்ட கல்வெட்டு கோயிலில் விளக்கேற்ற நானூறு ஆடுகள் தானம் தரப்பட்டதாகத் தெரிவிக்கிறது.

உசாத்துணை