being created

வ. நஞ்சுண்டன்

From Tamil Wiki
Revision as of 23:55, 8 June 2023 by ASN (talk | contribs) (Para Added and Edited;)
கவிஞர் வ. நஞ்சுண்டன்

வ. நஞ்சுண்டன் (ஜூன் 15, 1948 - ஏப்ரல் 13, 2014) கவிஞர், எழுத்தாளர். பொம்மலாட்டக் கலைஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்கான பல படைப்புகளைத் தந்தார். இந்திய அரசின் நல்லாசிரியர் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

வ. நஞ்சுண்டன், ஜூன் 15, 1948 அன்று, நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி வேலூரை அடுத்த அனிச்சம்பாளையம் என்ற கிராமத்தில், வருணதேவன் - பழனியம்மாள் இணையருக்குப் பிறந்தார். நன்செய் இடையாறு தொடக்கப்பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். உயர்நிலைக் கல்வியை வேலூர் கந்தசாமி கண்டர் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

வ. நஞ்சுண்டன், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார். மனைவி: கலாவதி. மகன்கள்: விஜய், செந்தில்குமார், சுரேஷ்குமார்.

இலக்கிய வாழ்க்கை

வ. நஞ்சுண்டன், சிறார் இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், பாடல்களை எழுதினார். அவற்றைத் தொகுத்து நூல்களாக வெளியிட்டார். தமிழ்நாடு அரசின் இரண்டாம் வகுப்பிற்குரிய தமிழ்ப் பாட நூலில், ‘சிட்டே சிட்டே பறந்து வா’ என்ற நஞ்சுண்டனின் பாடல் இடம் பெற்றது. வ. நஞ்சுண்டன், பல்வேறு கவியரங்குகள், பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

வ. நஞ்சுண்டன், பொம்மலாட்டக் கலையில் டெல்லியில் பயிற்சி பெற்று டெல்லி கலாச்சார மையம் மூலம் பொம்மலாட்டக் கலைஞராக அங்கீகாரம் பெற்றார். தமிழ்நாடெங்கும் பயணப்பட்டு பல்வேறு பள்ளிகளில் பொம்மலாட்டக் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். உலக நாணயங்கள், பழமையான இந்திய நாணயங்களின் சேகரிப்பாளராகச் செயல்பட்டார். அவற்றைக் கொண்டு, பள்ளிகளில் பல நாணயக் கண்காட்சிகளை நடத்தினார்.

பொறுப்புகள்

பரமத்தி வேலூர் தமிழ்ச் சங்க அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர்

விருதுகள்

  • குழலை விஞ்சும் மழலை நூலுக்கு அழ. வள்ளியப்பா விருது
  • முத்துக் குவியல் நூலுக்கு திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசு
  • கோகுலம் வார இதழ் நடத்திய குழந்தைப் பாடல் போட்டியில் பரிசு
  • நாணய நஞ்சுண்டன் பட்டம்
  • அமெரிக்கக் கலாச்சார மையம் வழங்கிய டாக்டர் பட்டம்.
  • ராஜ் தொலைக்காட்சி அளித்த சிறந்த மனிதர் விருது
  • தமிழக அரசு வழங்கிய டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது
  • இந்திய அரசின் சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது
  • கவியரசர் கலைத் தமிழ்ச் சங்கம் அளித்த கவிச்சிற்பி விருது

இலக்கிய இடம்

வ. நஞ்சுண்டன், சிறார்களுக்காகவே எழுதினார். எளிய தமிழில், இசைப் பாடல்களாக அவற்றை எழுதினார். பொது அறிவுச் செய்திகள் கொண்ட பல கட்டுரைகளை எழுதினார். வ. நஞ்சுண்டன், அழ. வள்ளியப்பா பரம்பரையைச் சேர்ந்த சிறார் இலக்கியப் படைப்பாளியாக அறியப்படுகிறார்.

நூல்கள்

குழந்தைப் பாடல்கள்
  • குழலை விஞ்சும் மழலை –  பெற்றது.
  • நெஞ்சில் நிறைந்த பிஞ்சுகள்
  • உலா வரும் நிலா
  • உலகை மாற்றுவோம்
  • மழலைப் பூங்கா
  • பொய்யா விளக்கு
  • உதிரம் சிந்தும் ஊதாப் பூக்கள்
  • அம்மன் அடி பணிவோம்
கட்டுரைத் தொகுப்புகள்
  • இலக்கியப் பெட்டகம்
  • பெண்ணே உனக்குச் சீதனம்
  • விடுகதைகள்
  • சிந்தை மகிழும் விந்தைகள்
  • அறிவுப் பேழை
  • உலகிலேயே...
  • அறிவியல் பூங்கா
  • அறிவியல் விருந்து
  • முத்துக்குவியல்
  • அறிவுச்சோலை
  • ஒளி விளக்கு
  • இரத்தின மாலை
  • ஆன்மிக வாயில்

உசாத்துணை





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.