மேல் கூடலூர் சமணப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 19:55, 12 February 2022 by Jeyamohan (talk | contribs)

மேல் கூடலூர் மூலத்தானத்து தேவர் பள்ளி

செஞ்சியிலிருந்து 30 கிலோ மீட்டர் தென் கிழக்கிலுள்ளது மேல் கூடலூர் என்னும் சிற்றூராகும். செஞ்சியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மட்டப்பாறை என்னும் ஊரிலிருந்து பிரிந்து செல்லும் மண்சாலை வழியாக எட்டு கிலோ மீட்டர் சென்றால் இந்த ஊரை அடைய முடியும் இவ்வூரை ஒட்டியுள்ள மலை பஞ்ச பாண்டவர் மலை எனவும், ஐவர் மலை எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த மலையில் தான் சமண சமயத் துறவியர் வாழ்ந்த பள்ளியும், இச்சமயத் தொடர்புடைய கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. இவற்றை புதுவை வரலாற்றுச் சங்கத்தினர் 1982-ஆம் ஆண்டு கண்டு பிடித்து அறிஞருலகிற்குத் தெரிவித்தனர்.

கற்படுக்கைகள்


மேல் கூடலூரிலுள்ள மலையில் ஏறத்தாழ நூறு அடி உயரம் ஏறிச் சென்றால் இயற்கையாக அமைந்துள்ள பெரிய குகை ஒன்றினைக் காணலாம். இந்த குகையில் தான் சமண முனிவர்கள் உறைந்ததற்குரிய சான்றுகளாகிய படுக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. குகையின் மேற்பகுதியிலுள்ள பாறை பரந்து முன்னோக்கி நீண்டிருப்பதால் குகைத் தளத்திலுள்ள படுக்கைகள் மீது மழை நீர் படாமல் பாதுகாப்பாக அமைந்திருக்கிறது குகையினுள் ஆறு இடங்களில் மொத்தம் முப்பத்தைந்து படுக்கைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவை ஏறத்தாழ ஏழு அடி நீளமும் மூன்றடி அகலமும் உடையவையாகும். இங்கு பெரும்பாலும் ஐந்து, ஐந்து படுக்கைகள் சேர்ந்தாற் போன்று அடுத்தடுத்து வெட்டியிருப்பதைக் காணலாம். இந்த படுக்கைகளின் தலையணைப் பகுதி சற்று உயரமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. ஓரிரு படுக்கைகளுக்கு அருகில் துறவியர் அமர்ந்திருக்கும் வகையில் கல்லிலேயே சிறிய மேடை போன்ற இருக்கைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது போன்ற ஆசனங்கள் மலையின் மேற் பகுதியில் இரு இடங்களிலும், கீழ்ப்பகுதியில் ஓரிடத்திலும் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.[1]

மேலும் படுக்கைகளுக்கு முன்பு வெளியிடமாக உள்ள பாறைப் பகுதியில் ஓரிரு இடங்களில் பள்ளமான உரல் போன்ற அமைப்பு குடையப்பட்டிருக்கிறது. இவை மருந்து மூலிகைகளை அரைப்பதற்குப் பயன் படுத்தப்பட்ட உரல்களாக இருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது. படுக்கைகளுக்கு சற்று தொலைவில் ஐந்து மீட்டர் நீளமுள்ள இயற்கையான சுனை ஒன்றும் காணப்படுகிறது. இங்கு வாழ்ந்த சமணத் துறவியர் இந்த சுனை நீரைப் பயன்படுத்தியிருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. தமிழகத்திலுள்ள பெரும்பாலான குகைப் பாழிகளை ஒட்டி இயற்கையான சுனைகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். [2]

பார்சுவநாதர் சிற்பம்

படுக்கைகளைக் கொண்ட குகைக்கு வடக்கில் தனியாக உள்ள பாறையின் முகப்பில் அழகிய பார்சுவநாதர் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது. இத் தீர்த்தங்கரர் தாமரை மலராலான பீடத்தில் நின்ற வண்ணம் காட்சியளிக்கிறார். அமைதியான முகச்சாயலும், தவநெறி பூண்டொழுகி நிற்பதால் சற்று மெலிந்த உடலமைப்பும், தொங்க விடப்பட்ட கைகளும், தசை மடிப்பற்ற வயிற்றுப் பகுதியும் இயற்கை எழிலினை வெளிப்படுத்துவதாக உள்ளன. பார்சுவதேவரின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையிலிருக்கிறது. இத்தேவரின் வலது புறம் சிறிய அளவில் ஆண் உருவம், ஒன்று வடிக்கப்பட்டிருக்கிறது. மிக்கவாறும் இது இவரது இயக்கனாகிய தரணேந்திரனைக் குறிப்பதாக இருக்க வேண்டும். இங்குள்ள பார்சுவநாதர் சிற்பம் குகைப்பாழியில் வாழ்ந்த சமணத் துறவியர் வழிபட்டு வந்த தரிசன பிம்பம் என்பதில் ஐயமில்லை. இச்சிற்பம் பொயு. 9 ஆம் நூற்றாண்டுக் கலைப்பாணியைக் கொண்டு மிளிர்கிறது. மிக்கவாறும் இதே நூற்றாண்டில் தான் இங்கு கற்படுக்கைகளும் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தலத்திலுள்ள கல்வெட்டுக்களுள் பழமையானது கி பி. 9-ஆம் நூற்றாண்டைச் சார்ந்திருப்பதும் இக்கருத்திற்கு வலியூட்டுவதாகும்.

கல்வெட்டுக்கள்

குகையிலுள்ள படுக்கைகளுக்குச் சற்று தொலைவில் பகுதிகளில் பண்டைய கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தமுள்ள ஐந்து சாசனங்களுள் மூன்று கல்வெட்டுகள் படுக்கைகளுக்கு வடக்கிலும். மீதமுள்ள இரண்டு சாசனங்கள் மலையில் ஏறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டு அருகிலும் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் காலம் முந்தியது பல்லவ மன்னனாகிய நிருபத்துங்கவர்மனது ஆட்சியில் எழுதப்பட்டதாகும். எஞ்சியவை சோழ மன்னனாகிய முதலாம் பராந்தகன் காலத்தைச் சார்ந்தவையாகும். (இந்த கல்வெட்டுகளின் வாசகங்களை காலம் சென்ற பாகூர் புலவர் குப்பம் அவர்கள் புத்தக ஆசிரியருக்கு எழுதி வழங்கியுள்ளார்.)

முதலாவது கல்வெட்டு நிருபத்துங்கவர்மனது இரண்டாவது ஆட்சியாண்டில் (கி பி. 871) பொறிக்கப்பட்டதாகும். அதன் வாசகம் பின் வருமாறு:

ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய நிருபதொங்கர்கு

யாண்டு இரண்டாவது பனைஊர் நாட்டுச் சேந்த

மங்கலத்து ஸ்ரீமூலஸ்தானத்து தேவற்குத்

திருவிளக்குக்கு அதிகாரிகளோணங்காரிகுடையார்

வைத்த ஆடு எழுநூற்றைம்பது.

அதாவது பனையூர் நாட்டைச் சேர்ந்த சேந்தமங்கலத்திலுள்ள மூலஸ்தானத்து தேவர் திருவுருவத்தின் முன்னர் விளக்கு எரிப்பதற்காக வேண்டி ஓணங்காரி குடையார் என்னும் அதிகாரி எழு நூற்று ஐம்பது ஆடுகளை நிருபத்துங்க மன்னனது இரண்டால் ஆட்சியாண்டில் வழங்கியுள்ளார் என்பதாகும், இதிலிருந்து மேல்கூடலூரின் பண்டைய பெயர் சேந்தமங்கலம் என்பது தெளிவாகிறது இந்த சாசனத்தில் திருமூலஸ்தானத்து தேவர் எனக் குறிப்பிட்டிருப்பது படுக்கைகளுக்கு அருகிலுள்ள பாறையில் செதுக்கப்பட்டிருக்கும் பார்சுவ நாதரையே ஆகும்.

முதலாம் பராந்தக சோழன் காலத்துச் சாசனங்கள் நான்கு உள்ளன. இவற்றுள் முதலாவது கல்வெட்டு இம் மன்னனது நான்காவது ஆட்சியாண்டைச் (கி. பி. 911) சார்ந்ததாகும்

ஸ்வஸ் திஸ்ரீ கோப்பர கேசரிபன்மர்கு யாண்டு

நாலாவது பனைஊர் நாட்டுச் சேந்த

மங்கலத்து அவனி திலதத்து தேவற்குத்

திருவிளக்குக்கு மழநாட்டுக் களத்தூருடையான்

றாழிவைகுந்தனாகிய செம்பியன் காவிதி

யரையன் வைத்த ஆடைஞ்நூறு.

கோப்பரகேசரி என்னும் பட்டப்பெயர் கொண்ட பராந்தக சோழனாட்சியில் பனையூர் நாட்டைச் சார்ந்த சேந்தமங்கலத்திலுள்ள அவனிதிலத்துதேவர் சிற்பத்தின் முன்பு விளக்கேற்றுவதற்காக மழ நாட்டினைச் சார்ந்த களத்தூர் வாசியான ஆழிவை குந்தன் என்பவர் ஐநூறு ஆடுகளைத் தானமாகக் கொடுத்துள்ளார் எனப் பொருள்படும். இவருக்குச் செம்பியன் காவிதி அரையன் என்னும் பட்டப்பெயரும் உண்டு. இச்சாசனம் பார்சுவ நாதரை அவனிதில தத்துதேவர் எனக்குறிப்பிடுகிறது.

அடுத்துள்ள சாசனம் பராந்தகனது 28 ஆம் ஆட்சியாண்டில் (கி பி. 935) பொறிக்கப்பட்டதாகும்.

ஸ்வஸ்திஸ்ரீ மதிரைகொண்ட கோப்பரகேசரி பந்மர்க்கு

யாண்டு 28 ஆவது பனைஊர் நாட்டுச் சேந்தமங்கலத்துப்

பிடாரியார்க்குத் திருவிளக்குக்கு வில்வலத்துப்

பூசலன் பகையடக்கிவைத்த ஆடெழுநூறு.

வில்வலம் என்ற ஊரினராகிய பூசலன்பகையடக்கி என்பவர் பனையூர் நாட்டுச்சேந்தமங்கலத்திலுள்ள பிடாரியாருக்குத் திருவிளக்கு ஏற்றுவதற்காக எழுநூறு ஆடுகளைக்கொடுத்திருக்கிறார். இந்த சாசனத்தில் பட்டாரகர் என்று பொறிப்பதற்குப் பதிலாக பிடாரியார் என்று எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. பார்சுவதேவரைப் பட்டாரர் என்று குறிப்பிடுவது தான் முறையே ஒழிய, பட்டாரி, பிடாரி என்று குறிப்பிடுவது கிடையாது. இங்கு பார்சுவநாதர் சிற்பத்தைத்தவிர வேறு திருவுருவங்கள் இல்லையாதலால் இக்கருத்து ஏற்புடைத்தாக இருக்கிறது. அதுவன்றி இங்கு முன்பு யக்ஷி சிற்பம் இருந்திருக்குமானால் கல்வெட்டில் வரும் ‘பிடாரியார்’ என்ற சொல் சரியாகவே இருக்கவேண்டும். யக்ஷிகளைப் பட்டாரி, பிடாரி என்னும் சொற்களால் அழைப்பது மரபு ஆகும். அவ்வாறாயின் இங்கு யக்ஷியின் சிற்பமும் (தனிச் சிற்பமாகவோ அல்லது பாறைச்சிற்பமாகவோ) இருந்திருக்க வேண்டுமெனக் கருதுவதில் தவறில்லை. ஆனால் தற்போது பார்சுவதேவரின் திருவுருவத்தைத் தவிர வேறு சிற்பம் இங்கு இல்லை என்பதனையும் மனதிற்கொள்ள வேண்டியிருக்கிறது.

மூன்றாவது சாசனமும் மதுரையை வெற்றிகண்ட பராந்தக சோழனது 28 ஆவது ஆட்சியாண்டைச் (கி. பி. 935) சார்ந்ததாகும்.

ஸ்வஸ்திஸ்ரீ மதிரைகொண்ட கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு 28 ஆவது

பனைஊர் நாட்டுச் சேந்தமங்கலத்துத் திருமணிக்கோயிற்றேவற்குத்

திருவிளக்குக்கு அருமொழியாகிய வீரநாரணப்பல்லவரையன் வைச்ச ஆடறு நாறு

அதாவது அருண்மொழி எனப்பெயர் கொண்டவீர நாராயணர் பல்லவரையன் என்பவர் சேந்தமங்கலத்திலுள்ள திருமணிக்கோயிலிலுறைந்துள்ள தேவருக்கு விளக்கு ஏற்றுவதற்காக அறுநூறு ஆடுகளைத் தானமாக அளித்துள்ளார் என்பதாகும். பார்சுவப்பெருமான் சிற்பம் அடங்கிய பாறையினையே இங்கு திருமணிக்கோயில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்காவது சாசனம் பராந்தக சோழனது 33 ஆவது ஆட்சியாண்டில் (பொயு. 940) பொறிக்கப்பட்டதாகும்.

ஸ்வஸ்திஸ்ரீ மதிரையு மீழமுங்

கொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 33 ஆவது

பனையூர் நாட்டுச் சேந்தமங்கலத்துப்றேவற்குக்

திருவிளக்குக்கு கிளிநல்லூர் கிழவனாகிய ஸ்வதேவனாகிய

கிழான் ... கோன் வைச்ச ஆடைஞ்ஞூறு

இந்த கல்வெட்டில் பரகேசரிவர்மனாகிய பராந்தகன் மதுரையையும், ஈழத்தையும் வென்ற செய்தி இடம் பெற்றிருக்கிறது. இவனது ஆட்சிக்காலத்தில் (கி பி. 940) பனையூர் நாட்டைச் சார்ந்த சேந்தமங்கலத்திலுள்ள பார்சுவதேவர் முன்பு விளக்கெரிய விடவேண்டும் பொருட்டு கிளி நல்லூரைச் சார்ந்தவராக ஸ்வதேவன் என்பார் ஐநூறு ஆடுகள் கொடுத்திருக்கிறார். இது சாசனம் சில இடங்களில் சிதைந்திருந்த போதிலும் முழுமை செய்தியினை அளிக்க வல்லதாக இருப்பதைக்காணலாம்.

மேல் கூடலூரிலுள்ள கல்வெட்டுக்களை ஒரு சேரநோக்கும் போது பல வரலாற்றுண்மைகள் வெளிப்படுகின்றன இங்கு கற்படுக்கைகளும், தீர்த்தங்கரர் சிற்பமும் கி. பி. 9 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. மிக்கவாறும் இவை நிருபத்துங்கபல்லவனது ஆட்சிக்காலத்திலேயே (பொயு. 871) ஏற்படுத்தப் பட்டிருக்கலாம். இந்த தலம் சிறப்பு பெற்று விளங்கியதால் 10 ஆம் நூற்றாண்டில் இங்குள்ள பார்சுவப்பெருமான் சிற்பத்திற்கு முன்னர் விளக்கெரிப்பதற்காகப் பல்வேறு ஊர்களைச்சார்ந்தவர்கள் ஆடுகளைத் தானமாக அளித்திருக்கின்றனர். இவ்வாறு தானமாகக் கொடுக்கப்பட்ட ஆடுகளின் மொத்த எண்ணிக்கை 3050 ஆகும். தமிழகத்திலுள்ள கோயில்கள் வேறெவற்றிற்கும் இவ்வளவு அதிக அளவில் ஆடுகள் தானம் வழங்கப்பட்டதில்லை என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

மேல் கூடலூரின் பண்டைய பெயர் சேந்தமங்கலம் என்பது தெளிவாகிறது. இவ்வூர் பனையூர் நாடு என்னும் நாட்டுப்பிரிவிற்குட்பட்டது என்பதனையும் அறிய வருகிறோம்.

இங்குள்ள பார்சுவநாதர் திருவுருவம் கல்வெட்டுக்களில் மூலஸ்தானத்து தேவர், அவனிதிலதத்துத்தேவர், திருமணிக் கோயில் தேவர் என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பொதுவாக இந்துசமயக் கோயில்களிலுள்ள மூலமூர்த்திகளை இப்பெயர்களிட்டு அழைப்பது வழக்கமாகும். அவ்வகையில் இந்து சமயத்தொடர்பினால் பார்சுவப்பெருமானுக்கும் இப்பெயர்கள் வழங்கப்பட்டிருக்கலாம். இங்கு திருவிளக்கேற்ற ஆடுகள் தானம் செய்தவர்களுள் வீரநாராயணப் பல்லவரையன், ஸ்வதேவன், ஆழி வைகுந்தன் எனபவர்களுடைய பெயர்கள் இந்து சமயத் தொடர்புடையவையாகும். எனவே மேல்கூடலூரில் இந்து சமயத் தாக்கம் நன்கிருந்திருப்பது அறியற்பாலதாகும்.


[1] கோ. கிருட்டினமூர்த்தி, “மேல் கூடலூர் சமணக்கல் வெட்டுக்களும் படுக்கைகளும்,” ‘முக்குடை,’ செப்டம்பர், 1982, பக்-14-15.

[2] Ibid. pp. 13-14 https://youtu.be/pUUzgg9VAPA

https://youtu.be/HmpjjAUG7Kk

தினமணி செய்தி