ஆ. மாதவன்: Difference between revisions
No edit summary |
(category & stage updated) |
||
Line 105: | Line 105: | ||
* [https://sahitya-akademi.gov.in/awards/akademi%20samman_suchi.jsp#TAMIL Sahitya Academy awards list] | * [https://sahitya-akademi.gov.in/awards/akademi%20samman_suchi.jsp#TAMIL Sahitya Academy awards list] | ||
{{ | {{ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 13:38, 10 February 2022
ஆ. மாதவன் (பெப்ரவரி 7, 1934 – ஜனவரி 5, 2021) கேரளா திருவனந்தபுரத்தில் பிறந்து வாழ்ந்த தமிழ் எழுத்தாளர். தமிழ் நவீன இலக்கியத்தில் யதார்த்தவாத எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, இதழாசிரியர் என்று பல இலக்கியத்தளங்களில் இயங்கியவர். தான் வாழ்ந்த கடைத்தெருவின் அன்றாட நிகழ்வுகளை தன்னுடைய படைப்புகளில் கொண்டுவந்தமையால் கடைத்தெருவின் கதைசொல்லி என்று வாசகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டவர்.
இலக்கியச் சுவடுகள் என்கின்ற திறனாய்வு நூலுக்காக 2016 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
பிறப்பு, கல்வி
ஆ. மாதவன் பிப்ரவரி 1934ல் ஆவுடைநாயகம், செல்லம்மாள் தம்பதியின் நான்காவது மகனாக திருவனந்தபுரத்தில் பிறந்தார். உடன் பிறந்தோர் மூன்று அண்ணன்கள், ஒரு தம்பி, ஒரு தங்கை என ஐந்து பேர்.
தந்தையின் ஊர் தென்காசி மாவட்டம், செங்கோட்டை. தாயாரின் ஊர் நாகர்கோயில். இந்த இரு ஊர்களும் ஒன்றிணைந்த திருவிதாங்கூரில் இருந்த காலத்திலேயே, ஆ. மாதவனுடைய தாத்தாவின் காலத்தில் அவர்கள் திருவனந்தபுரத்துக்கு குடியேறி விட்டனர். அவரது தந்தை திருவனந்தபுரம் சாலை அங்காடியில் சிறுவணிகராக இருந்தார்.
சாலை மலையாளம், எம்.எம். பள்ளியில் ஆரம்பித்த அவருடைய கல்வி, பள்ளிப் படிப்போடு முடிவுக்கு வந்தது. பின்னர், முழு நேர தொழிலாக வியாபாரத்தை செய்யத் தொடங்கினார். தன்னுடைய 75 ஆவது வயது வரை திருவனந்தபுரம் சாலைக் கம்போளத்தில் செல்வி ஸ்டோர்ஸ் என்னும் பாத்திரக் கடையை நடத்தி வந்தார்.
தனிவாழ்க்கை
ஆ. மாதவனின் மனைவி சாந்தா என்கின்ற சூர்ய குமாரி. இவர்களுக்கு 1966ல் திருமணமானது. கலைச்செல்வி, மலர்ச்செல்வி என்ற இரு மகள்களும் கோவிந்தராஜன் என்ற மகனும் இருந்தனர். 2002ல் மனைவியும் 2004ல் மகனும் மறைந்துவிட்டனர். மாதவன் மகளுடன் வசித்து வந்தார்.
இலக்கியப்பங்களிப்பு
பள்ளிக் கல்வி வரை மலையாளத்தில் கற்றவர், தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தினால் தமிழைக் கற்றுக் கொண்டார். பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோவின் குறுநாவல் ஒன்று ‘கழுமரம்’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்திருந்தது. அதனை தமிழில் மொழிபெயர்த்திருந்தார் ஆ மாதவன். 1955 ல் அந்த கதை, ‘சிறுகதை’ என்ற இதழில் வெளிவந்தது. இதுவே அச்சில் வெளிவந்த அவருடைய முதல் படைப்பு. தொடர்ந்து அவருடைய பல்வேறு மொழிபெயர்ப்புகளை ‘சிறுகதை’ இதழ் வெளியிட்டது.
1974 இல் ஆ. மாதவனின் முதல் சிறுகதைத் தொகுதியான ‘மோக பல்லவி’ வெளியாகியது. அதனை சென்னை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து முதல் நாவலான ‘புனலும் மணலும்’ அதே ஆண்டு வெளியாகியது. கரமனையாற்றில் மணல் அள்ளும் ஒரு குடும்பத்தின் கதை அது. புனலும் மணலும் நாவலை 1974-இல் முதலில் வெளியிட்டது லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர் வட்டம்.
இவற்றைத்தவிர, 'கடைத்தெருக்கதைகள்', 'காமினிமூலம்', 'மாதவன் கதைகள்', 'ஆனைச்சந்தம்', 'அரேபியக்குதிரை' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன. அவருடைய ‘நாயனம்’, ‘பூனை’, ‘பதினாலுமுறி’, ‘புறா முட்டை’, ‘தண்ணீர்’, ‘அன்னக்கிளி’ஆகிய கதைகள் குறிப்பிடத்தக்கவை.
வாழ்நாளெல்லாம் குற்றவாளியாக மட்டுமே இருந்த சாளைப்பட்டாணி தன்னுடைய இறுதி நாட்களில் நோய்வாய்ப் பட்டு அவதிப்படுகின்ற நிலையை விளக்கிய 'எட்டாவது நாள்' குறுநாவல் ஆ. மாதவனுடைய படைப்புகளில் பரவலாகப் பேசப்பட்டது.
‘கிருஷ்ணப்பருந்து', 'தூவானம்' ஆகிய நாவல்களையும் எழுதி இருக்கிறார். இவற்றுள் கிருஷ்ணப்பருந்து நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஆ. மாதவன் மொழிபெயர்ப்பாளராகவும் தமிழுக்கு முக்கிய பங்காற்றி இருக்கின்றார். 1974 இல் காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சம்மானம் எனும் குறுநாவலை தமிழாக்கம் செய்தார். 2002 இல் சாகித்ய அக்காதமி வெளியிட்ட மலையாள எழுத்தாளர் பி. கெ. பாலகிருஷ்ணனின் 'இனி ஞான் உறங்ஙட்டே' என்ற நாவலை 'இனி நான் உறங்கட்டும்' என்ற பேரில் மொழியாக்கம் செய்தார். மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் ‘யட்சி’ என்ற நாவலையும் தமிழுக்கு கொண்டு வந்திருக்கின்றார்.
1981 இல் நா. பார்த்தசாரதியின் தீபம் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் இருந்தார்.
தமிழக அரசின் இயல் துறைக்கான கலைமாமணி விருது 2007ஆம் ஆண்டு ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும், ‘இலக்கிய சுவடுகள்’ என்ற திறனாய்வு கட்டுரை நூலுக்காக 2015 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதினையும் பெற்றவர்.
2010ல் விஷ்ணுபுரம் விருது அளிக்க்ப்பட்டபோது இவரது இலக்கிய உலகை திறனாய்வு செய்து 'கடைத்தெருவின் கலைஞன்' என்ற நூலை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வெளியிட்டது.
இலக்கிய இடம்
குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பு முடிந்த உடன் வணிகத்துக்குள் நுழைந்து விட்டார். ஆயினும் இலக்கிய ஆர்வமும் தேடலும் மிகுந்தவராக இருந்தார்.
பள்ளிக்காலத்தில் தீவிர வாசகராக இருந்தார். அப்போது வாசிக்கக் கிடைத்த புத்தகங்கள், இதழ்கள் தான் தன்னை ஒரு கதாசிரியனாக ஆக்கின என்று ஆ. மாதவன் குறிப்பிட்டார்.
அவருடைய ஆரம்ப கால படைப்புகள் பெரும்பாலும் திராவிட இயக்கம் சார்ந்த நாளிதழ்கள், சஞ்சிகைகளில் வெளிவந்தன. ஆனால் அவருடைய படைப்புகளில் அரசியல் இருக்கவில்லை. சமூக சீர்திருத்தம் சார்ந்த பார்வையிலேயே பெரும்பாலும் எழுதினார். பின்னாளில் அவருடைய இலக்கிய நண்பர்களுடைய தூண்டுதலால் யதார்த்தவாத எழுத்துக்கு மாறினார்.
தன்னுடைய ஆயுளின் பெரும்பகுதியை ஆ. மாதவன் திருவனந்தபுரம் சாலை கம்போளத்தில் ஒரு வியாபாரியாகத் தான் கழித்தார். அங்கு வாழ்ந்த பல தரப்பட்ட மனிதர்கள், விலங்குகள், பொருட்கள் என தன் கருத்தைக் கவர்ந்த அனைத்தையும் படைப்புகளில் கொண்டு வந்தார். ஒரு கடைத் தொகுதியின் தெளிவான குறுக்குவெட்டுத் தோற்றத்தை தன்னுடைய கதைகளின் வழியாகக் காட்டியதால் ஆ. மாதவன் கடைத் தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப்படுகின்றார்.
பசி, காமம், வன்முறை போன்ற அந்தரங்கமான உணர்வு சார்ந்த விஷயங்களை நுட்பமாகக் கூறும் எழுத்துக்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் ஆ. மாதவன். உலகின் எல்லா அவலங்களுக்கும், அனர்த்தங்களுக்கும், அர்த்தங்களுக்கும் எடுத்துக்காட்டு வடிவங்கள் இந்த தெருவிலே உள்ளன என்று கருதினார்.
அந்த வகையில் எளிய அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை யதார்த்தமான முறையில் கொண்டு வந்த படைப்புகளின் முன்னோடியாக ஆ. மாதவன் திகழ்கிறார். தமிழும் மலையாளமும் கலந்த அந்த வட்டார வழக்குக்கு ஒரு செழுமையையும் மதிப்புக்குரிய இடத்தையும் இலக்கிய உலகில் அளித்தார்.
எழுத்தாளராக மட்டும் இல்லாமல் மாதவன் ஒரு தேர்ந்த இலக்கிய வாசகரும் கூட. சமகால இலக்கியங்கள் மீது தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார். ஒரு கறாரான வியாபாரியாக இருந்த போதிலும் ஒரு எழுத்தாளராக எப்போதும் கறாரான கருத்துக்களை வெளியில் சொல்லாதவராகவே இருந்தார்.
ஆ. மாதவனின் படைப்புகளில் பல பாலியல் ஒழுக்க மீறல் சார்ந்த விஷயங்கள் இடம் பெற்றிருந்தன. அது குறித்த விமர்சனம் இருந்த போதிலும் அவை சமூக அவலங்களை வெளிப்படுத்துவதாகவும் அவை எழுதப்பட வேண்டியவை என்றும் மாதவன் கருதினார். அரசியலில், கோட்பாடுகளில் ஆர்வமற்றவர். இலக்கியப்படைப்புகளில் உபதேசம் செய்வதை விரும்பாதவர்.
ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களைக் கொண்டு நகரின் மிகப்பெரிய நூலகமாகவும், கலாச்சார அரங்கமாகவும் திகழ்கின்ற திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சியில் ஆ. மாதவனின் பங்கு மிக முக்கியமானது. அதன் சங்க வெளியீடாக 1978 இல் ஆரம்பிக்கப்பட்ட 'கேரளத்தமிழ்' என்னும் ஏடு கேரளா வாழ் தமிழர் வாழ்வின் இலக்கிய முகமாக விளங்கியது. ஆ. மாதவனை ஆசிரியராகக் கொண்டு பல்வேறு முன்னணி எழுத்தாளர்களுடைய படைப்புகளையும் நினைவுகளையும் சுமந்து அது வெளிவந்தது.
விருதுகள், நூல்கள்
- செண்பகம் இலக்கிய அமைப்பு வழங்கிய சிறுகதைச் செல்வர் பட்டம் - 1977
- திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த சிறுகதை நூல் விருது (அரேபியக்குதிரை) - 1994
- மொழி பெயர்ப்புகளுக்காக உள்ளூர் பரமேஸ்வர அய்யர் நினைவுப் பரிசு - 2002
- கன்னியாகுமரி மாவட்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய தமிழ் மாமணி பட்டம் - 2003
- தமிழக அரசின் இயல் துறைக்கான கலைமாமணி விருது - 2007
- விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு வழங்கும் விஷ்ணுபுரம் விருது - 2010
- கேந்திர சாகித்ய அக்காதமி விருது - 2015
படைப்புகள்
சிறுகதைத் தொகுப்புகள்
- மோகபல்லவி - 1974, சென்னை கலைஞன் பதிப்பகம்
- கடைத்தெருக்கதைகள் - 1974
- காமினிமூலம் - 1975 , சென்னை கலைஞன் பதிப்பகம்
- மாதவன் கதைகள் - 1984
- ஆனைச்சந்தம் - 1990
- அரேபியக்குதிரை - 1995
- ஆ.மாதவன் கதைகள் முழுத்தொகுப்பு (72 கதைகள் அடங்கியது) - 2002, தமிழினி பதிப்பகம்
- ஆ.மாதவன் கதைகள் முழுத்தொகுப்பு (66 கதைகள் அடங்கியது) - 2016, நற்றிணை பதிப்பகம்
நாவல்கள்
- புனலும் மணலும் - 1974, வாசகர் வட்டம்
- கிருஷ்ணப்பருந்து - 1982
- தூவானம் - 1990
கட்டுரைத்தொகுப்பு
- இலக்கியச்சுவடுகள் - 2015
மொழியாக்கம்
- யட்சி [மூலம் மலையாற்றூர் ராமகிருஷ்ணன், யக்ஷி]
- இனி நான் உறங்கட்டும் [மூலம் இனி ஞான் உறங்ஙட்டே, பி.கெ.பாலகிருஷ்ணன்] - 2002
- சம்மானம் [மூலம், காரூர் நீலகண்டப்பிள்ளை] - 1974
மறைவு
ஆ மாதவன் ஜனவரி 5, 2021 அன்று தன்னுடைய 86 ஆவது வயதில் திருவனந்தபுரத்தில் காலமானார்.
உசாத்துணை
- ஆ.மாதவன்... மலையாள மொழியின் செழுமையைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர்!" - நாஞ்சில் நாடன், ஆனந்தவிகடன், 2021
- கடைத்தெருக் கதைகளைச் சொன்ன ஆ.மாதவன்! - கதை சொல்லிகளின் கதை, ச. தமிழ்ச்செல்வன், ஆனந்தவிகடன் 2018
- ஆ.மாதவன்: எளியவர்களின் கதைக்காரர்!, கவிஞர் சுகுமாரன், இந்து தமிழ்திசை 2021
- ஆ. மாதவன் - கம்போளத்தின் கதைஞர், சுகுமாரன், வாழ்நிலம் வலைத்தளம், தி இந்து நாளிதழ் 2015-2016
- ஆ. மாதவன் – அஞ்சலி, ஆர்வி சுப்ரமனியம், சிலிக்கான்ஷெல்ப்
- மாதவம், ஜெயமோகன் 2010
- கடைத் தெருவின் கலைஞன், முன்னுரை, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
- திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி, 2010, ஜெயமோகன்.இன்
- Sahitya Academy, meet the author Aa. Madhavan
- Sahitya Academy awards list
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.