under review

பார்த்திபன் கனவு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(category & stage updated)
Line 24: Line 24:


[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81 பார்த்திபன் கனவு இணையத்தில் விக்கி]
[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81 பார்த்திபன் கனவு இணையத்தில் விக்கி]
{{ready for review}}
[[Category:Tamil Content]]

Revision as of 08:50, 10 February 2022

பார்த்திபன் கனவு 2019 பதிப்பு

பார்த்திபன் கனவு (1941-1943 ) கல்கி (எழுத்தாளர்) எழுதிய வரலாற்று நாவல். கல்கியின் முதல் வரலாற்று நாவல் இது. பார்த்திப வர்மன் என்னும் சோழமன்னன் பல்லவர்களை எதிர்த்து போராடி மடிவதை விவரிக்கிறது. பொதுவாசிப்புக்குரிய நாவல். மர்மம், வீரச்செயல்கள், திருப்பங்கள், காதல் ஆகியவை வரலாற்றுப் பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ளன

எழுத்து, பிரசுரம்.

பார்த்திபன் கனவு கல்கியில் 1941

கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்தவிகடனில் இருந்து விலகி வந்து 1941ல் கல்கி (வார இதழ்) தொடங்கினார். அவ்விதழில் 1942ல் பார்த்திபன் கனவு தொடராக வெளிவந்தது. பின்னர் நூல்வடிவம் பெற்றது. இது கல்கி எழுதிய முதல் வரலாற்றுப் புனைவு.

பார்த்திபன் கனவு கல்கியில் 1941

கதைச்சுருக்கம்

பார்த்திபன் கனவு மூன்று பாகங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. பார்த்திப சோழன் மரணத்துடன் முதல் பாகம். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் நடப்பதாகத் தொடங்கும் இரண்டாம் பாகம் விக்கிரமன் செண்பகத்தீவுக்குச் செல்ல, அரசி அருள்மொழி சிறுத்தொண்டருடன் புண்ணிய நகரங்களைத் தரிசிக்கச் செல்வது இரண்டாம்பாகம். அதன் பின் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கும் நிகழ்ச்சியுடன் மூன்றாம் பாகம் தொடங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கதை சுமார் பத்து ஆண்டுகள் நடக்கிறது.

பார்த்திபன் கனவு கல்கியில் 1941
பார்த்திபன் கனவு கல்கியில் 1941

முற்காலச் சோழர்களின் வலிமை குன்றி சிதறி அவர்கள் சிற்றரசர்களாக பல்லவர்களுக்கு கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். சோழ அரசனாகிய பார்த்திப வர்மன் தன் மகன் விக்ரமசோழனுக்கு பல்லவர்களிடமிருந்து விடுதலைபெற்று சோழநாடு பழம்பெருமையை மீட்டெடுக்கவேண்டுமென கூறுகிறான். சோழநாடு எப்படி இருக்கவேண்டும் என்னும் தன் கனவை ஓவியமாக வரைந்து வைக்கிறான். பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மனுக்கு பார்த்திபன் கப்பம் கொடுக்க மறுத்து போர்க்களத்தில் மடிகிறான். போர்க்களத்தில் ஒரு சிவனடியார் பார்த்திபனுக்கு அவன் கனவை நிறைவேற்றுவதாக வாக்களிக்கிறார்.

சோழ இளவரசன் விக்ரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழத் தளபதியும் விக்ரமனின் தாய்மாமனுமான மாரப்ப பூபதி ஆகியோர் இக்கதையின் இரண்டாம் பகுதியில் விரிவாக வரும் கதைமாந்தர். மாரப்ப பூபதியின் துரோகத்தால் விக்ரமன் தீவு ஒன்றுக்கு நாடுகடத்தப்படுகிறான். குந்தவை என்னும் அழகியிடம் காதல் கொள்கிறான். பல்லவர்களிடமிருந்து விடுதலைபெற போராடும் விக்ரமனுக்கு சிவனடியார் உதவுகிறார். சிவனடியாரின் உயிரை விக்ரமன் காப்பாற்றுவதனால் அவன் கனவை அடைய உதவுவதாக சிவனடியார் சொல்கிறார். நாவலின் இறுதியில் அந்த சிவனடியார் நரசிம்மவர்மப் பல்லவர்தான் என தெரியவருகிறது. விக்ரமன் குந்தவையை மணக்கிறான். பார்த்திபனின் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு தொடங்குகிறது. இந்நாவலில் சிறுத்தொண்டர் எனப்படும் பரஞ்சோதி ஒரு முக்கியமான கதாபாத்திரம்.

இலக்கிய இடம்

எஸ். வையாபுரிப் பிள்ளை கல்கியின் பார்த்திபன் கனவு நாவலின் முன்னுரையில் இவ்வாறு சொல்கிறார், ‘சோழநாடு சுதந்திரம் இழந்து அடிமை வாழ்வு வாழ்கிறது. அதன் சுதந்திர வாழ்வையும், பரதகண்டம் முழுவதிலும் பரந்து நிற்க வேண்டிய புகழையும் குறித்துப் பார்த்திபன் கனவு கண்டு, அக்கனவைச் சித்திரமாக எழுதி, ஏங்கி ஏங்கி வருந்துகிறான். தனது ராணியாகிய அருள்மொழியையும், தன் புதல்வனாகிய விக்கிரமனையும் தன் கனவுலகைக் காணச் செய்கிறான். சுதந்திரத்தை மீட்கும் பொருட்டு நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்தியுடன் வீரப்போர் செய்து மடிகிறான். இவ்வாறு நாவலின் முதலிலிருந்து கடைசிவரை தேசப்பற்று என்னும் அடிநாதமே ஒலித்துக் கொண்டிருக்கிறது”

பார்த்திபன் கனவு இருவகையில் இலக்கியக் கவனத்திற்குரியது. இந்திய விடுதலைப்போராட்டத்தை அது உருவகப்படுத்துகிறது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் அலைகள் அதிலுள்ளன. கல்கி பின்னர் எழுதிய இரு பெரிய நாவல்களின் இணைப்பு போல் உள்ளது பார்த்திபன் கனவு. சிவகாமியின் சபதம் இக்கதையின் காலகட்டத்துக்கு முந்தையது. பொன்னியின் செல்வன் இக்கதையின் காலத்திற்குப் பிந்தையது.

உசாத்துணை

பார்த்திபன் கனவு முழுமையாக இணையத்தில்

பார்த்திபன் கனவு இணையத்தில் விக்கி



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.