second review completed

உறவுகள் (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Madhusaml moved page உறவுகள் to உறவுகள் (நாவல்) without leaving a redirect)
(No difference)

Revision as of 19:26, 9 February 2022

உறவுகள்

உறவுகள் (1975) நீல பத்மநாபன் எழுதிய நாவல். ஒரு மகனின் நினைவுகள் வழியாக தந்தையின் ஆளுமை விரிந்து வருவதைக் காட்டும் இந்நாவல் தமிழில் யதார்த்தவாத நாவல்களில் நனவோடை முறையை கடைப்பிடித்து எழுதப்பட்டது.

எழுத்து, பிரசுரம்

உறவுகள் 1975-ல் நீல பத்மநாபனால் சொந்த செலவில் நாகர்கோயில் ஜெய்குமாரி ஸ்டோர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்

ராஜகோபால் தன் தந்தை உடல்நலம் குன்றியிருக்கும் செய்தியை அறிந்து திருவனந்தபுரம் வருகிறான். 18 நாட்கள் அவன் தந்தையுடன் இருக்கிறான். அவரைப்பற்றிய நினைவுகள் ஒருபக்கமும், அவர் வழியாக அவனை வந்துசேரும் உறவுகளின் வலை இன்னொரு பக்கமுமாக விரிகிறது. தன் மொத்த உறவுப்பரப்பும் அப்பாவிடமிருந்தே வந்திருப்பதை ராஜகோபால் உணர்கிறான். அவன் தந்தை மறைகிறார்.

இலக்கிய இடம்

‘தமிழ் நாவல்களில் இந்த அளவுக்கு எந்தக் கதாபாத்திரமும் தோலுரிக்கப் பட்டதில்லை, அதன் வேஷம் கலைக்கப் பட்டதில்லை’ என்று நகுலன் உறவுகள் பற்றி குறிப்பிட்டார். இந்நாவல் தந்தை மகன் உறவை விவரிக்கையில் வழக்கமான ஐரோப்பியப் பார்வையில் உள்ள ஃப்ராய்டிய உளப்பகுப்பை மேற்கொள்ளவில்லை. மாறாக தந்தையை உளநெகிழ்வுடன் மகன் எண்ணிக்கொள்வதையே சொல்கிறது. ஆனால் உலகியல் வழியாக தந்தையிடமிருந்து அகன்று சென்ற மகன் அந்த இறுதி நாட்களில் கொள்ளும் அந்த நெகிழ்வு ஒரு பாவனை. அதன் வழியாக அந்த உறவை அவன் மிக இயல்பாக மரபான முறையில் புனைந்துகொள்கிறான். ‘மிகச் சீக்கிரத்திலேயே அவன் அவரை ஒரு படமாக்கி பூபோட்டு வணங்க ஆரம்பித்து தன் அன்றாட வாழ்க்கையிலிருந்து வெளியேற்றி விடுவான். அவர் விட்டுச் சென்ற உறவுகளில், மரபுகளில் எவை அவனுக்கு வசதியானவையோ அவற்றை மட்டும் அவன் பேணுவான்.  அதாவது அவனுக்கும், அவன் தந்தைக்குமான மோதலின் ஒரு சமமான மறுதட்டுதான் இந்த நெகிழ்வு. ராஜகோபாலை பொறுத்தவரை தந்தை தரும் குற்ற உணர்வையும் அவர் வழியாக வரும் உறவின் வலையையும் எப்படி கையாள்வது என்பதே பிரச்சினை. ராஜகோபாலின் நெகிழ்ச்சியை, அதனூடாக ஓடும் சுய பாவனைகளை, உறவுகளில் அவனது சுயநலப் பார்வையை கூர்மையாக நீல பத்மநாபன் சுட்டிக் காட்டுகிறார் என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்* நீல பத்மநாபனின் இந்நாவல் உளப்பகுப்புக்குரிய ஆய்வுமனநிலை இல்லாமல், ஆசிரியர் கூற்று இல்லாமல், இயல்பாக தந்தை மகன் உறவின் அகஅடுக்குகளை விவரித்த முக்கியமான ஆக்கம்.

விருது

ராஜா அண்ணாமலைச் செட்டியார் பரிசு 1977 (உறவுகள் நாவலுக்கு)

உசாத்துணை

  • நீல பத்மநாபன், சாதாரணத்துவத்தின் கலை ஜெயமோகன் https://www.jeyamohan.in/363/
  • நீலபத்மநாபன் படைப்புலகம் பாரதி நேஷனல் ஃபாரம்


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.