under review

அஸ்கோ பர்ப்போலா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Finalized)
Line 58: Line 58:
*[https://youtu.be/nbStc8vEeW0 அஸ்கோ பர்ப்போலா, காணொளி]
*[https://youtu.be/nbStc8vEeW0 அஸ்கோ பர்ப்போலா, காணொளி]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Finalised}}

Revision as of 07:33, 6 December 2022

அஸ்கோ பர்ப்போலா
அஸ்கோ பர்ப்போலா
அஸ்கோ பர்ப்போலா நூல்
சிந்துவெளி எழுத்துருக்கள்
அஸ்கோ பர்ப்போலா, ராணி சிரோமணி, ஐராவதம் மகாதேவன்

அஸ்கோ பர்ப்போலா (Asko Parpola) ( 1941) (ஆஸ்கோ பர்ப்போலா). இந்தியவியல் அறிஞர். சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் ஆய்வுகள் செய்தவர். தொல்தமிழ் ஆய்வுகளுக்காக மதிக்கப்படுகிறார்.பின்லாந்தின் ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தின் ஆசிய, ஆப்பிரிக்கவியல் ஆய்வுகளுக்கான மையத்தில் இந்தியவியல் துறையின் ஆய்வுப்பேராசிரியராகப் பணியாற்றினார். சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருக்கள் பற்றிய ஆய்வுகளுக்காக உலக அளவில் கவனிக்கப்படுபவர்

பிறப்பு, கல்வி

அஸ்கோ பர்ப்போலா 12 ஜூலை 1941 ல் ஃபின்லாந்தில் ஃபோர்ஸா (Forssa) என்னும் ஊரில் பிறந்தார். அஸ்கோ பர்ப்போலாவின் சகோதரர் ஸிமோ பர்ப்போலா (Simo Parpola) மெசபடோமியாவில் பேசப்பட்டு, இப்போது மறைந்துவிட்ட செமிட்டிக் மொழியான அக்காடியன் (Akkadian) மொழியின் எழுத்துருக்களை ஆய்வு செய்யும் நிபுணர்.

தனிவாழ்க்கை

அஸ்கோ பர்ப்போலாவின் மனைவி மார்ஜட்டா ( Marjatta Parpola) இந்திய சமூகவியலில் ஆய்வு செய்தவர். கேரள நம்பூதிரிகளைப் பற்றியது அவருடைய ஆய்வு. அஸ்கோ பர்ப்போலா ஹெல்சிங்கி பல்கலையின் தென்னாசிய ஆய்வுப்பிரிவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.

ஆய்வுகள்

ஆய்வுக்களம்

பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா கீழ்க்கண்ட துறைகளில் ஆய்வு செய்தவர்

  • சிந்துசமவெளி நாகரீகம் மற்றும் சிந்து சமவெளி முத்திரைகளும் எழுத்துருக்களும்
  • வேதநாகரீகம், வேதச்சடங்குகள். சாமவேதத்தின் ஜைமினிய வடிவம். பூர்வ மீமாம்ஸம்
  • தென்கிழக்காசிய மொழிகள், இந்துமதம், சைவ -சாக்த மரபுகள். துர்க்கை தெய்வ உருவகம்
  • சம்ஸ்கிருதம், மலையாளம், கன்னடம் தமிழ் மொழிகளின் தொல்கால உறவுகள்
  • தெற்காசியாவின் வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் சான்றுகள், ஆரியர்களின் வருகை.
முதன்மைக் கொள்கைகள்
  • ஆரியர்கள் சிந்துவெளி நாகரீகத்தின் அழிவுக்குப் பின் மத்திய ஆசியாவில் இருந்து ஈரான் வழியாக சிந்து சமவெளியில் குடியேறியவர்கள்.
  • பொமு 2500–1900 வாக்கில் வேதகால நாகரீகம் அல்லது ஆரிய நாகரீகம் தழைத்தது.
  • ஆரியர் குடியேற்றத்துக்கு முன்னரே சிந்துவெளி நாகரீகத்துக்கு மெசபடோமியாவுடன் உறவிருந்தது. மெசபடோமியாவின் அக்காடியன் மொழி போன்றவை சிந்துவெளி நாகரீகத்தின் மொழிக்கு அணுக்கமானவை.
  • சிந்துவெளி நாகரீகத்தின் முத்திரைகளும் எழுத்துருக்களும் தெய்வ உருவங்களும் அந்நாகரீகத்திற்கு தென்னிந்தியாவின் திராவிட நாகரீகத்துடனான நெருக்கமான ஒற்றுமையைக் காட்டுகின்றன.
  • வேதகால சம்ஸ்கிருதத்திலேயே திராவிடமொழிச் சொற்கள் உள்ளன. பொமு 1000 ஆண்டில் தொகுக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ள ரிக்வேதத்தில் சில திராவிடமொழிச் சொற்கள் உள்ளன.
  • வேதகால பண்பாடு இரண்டு அலைகளாக மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆரியர்களால் உருவாக்கப்பட்டது. முதல்அலை 1900-1700 வாக்கில் வந்தது. இரண்டாம் அலை பொமு 1400 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது.முதல் அலையை அதர்வவேதம்தான் அதிகமாக வெளிப்படுத்துகிறது. இரண்டாவது அலையில்தான் இந்திரன், சோமன் போன்ற தெய்வங்கள் வந்தன. அவ்விரு அலைகளும் பின்னர் யஜூர்,சாமவேத சம்ஹிதைகளின் காலகட்டத்தில் ஒருங்கிணைந்தன.
  • வேதகால கடவுளுருவகங்களில் புருஷ -பிரஜாபதி, ருத்ரன், வாக்தேவி ஆகியவை பழைய சிந்துவெளி பண்பாட்டைச் சேர்ந்தவை
  • மோகஞ்சதாரோவுக்கு அருகே சன்ஹுதாரோ (Chanhu-daro) அகழ்வாய்வில் கிடைத்த ஒரு முத்திரையில் தரையில் கிடக்கும் ஒரு பெண்ணை காளை புணரமுற்படுவதுபோன்ற சித்திரம் உள்ளது. இது மத்திய ஆசியாவின் புதுக்கற்காலப் பண்பாடுகளில் பொதுவாக இருக்கும் புனிதத்திருமணம் ('sacred marriage ) என்னும் கருத்திற்கு அணுக்கமானது. வானம் எருதாகவும் மண் பெண்ணாகவும் உருவகிக்கப்படுகிறது. மெசபடோமியாவின் இஸ்தர் (Ishtar) தெய்வத்தை ஒட்டியும் இப்படி ஒரு விழா உண்டு. ஆரியர்களின் அஸ்வமேதச் சடங்கில் குதிரை அரசியை புணர்கிறது. இந்த இணைவே பின்னர் மகிஷாசுரமர்த்தனியாக உருவாகியது. துர்க்கை என்னும் தெய்வத்தின் தொல்வடிவம் இது.
  • சம்ஸ்கிருதம் இந்தோ- ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. மொழிகளை பகுப்பாய்வு செய்து பின்னால் சென்றால் பொமு 3600 ல் உக்ரேன் -ரொமானியா பகுதியின் ட்ரிபாலியெ(Tripolye) புதுக்கற்காலப் பண்பாட்டை சென்றடைய முடிகிறது. சக்கரங்கள் இழுக்கும் வண்டிகளும் கோடரிகளும் கொண்ட இந்தப் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்து பின்னாளில் சென்றடைந்த இடங்களிலெல்லாம்தான் இந்தோ- ஐரோப்பிய மொழிகளின் பிற்கால வடிவங்கள் காணக்கிடைக்கின்றன. ஆகவே ஆரியர்கள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தவர்களாக இருக்கவே வாய்ப்பு.

திராவிடவியல் ஆய்வு

அஸ்கோ பர்ப்போலா திராவிடவியல் ஆய்வுகளில் முக்கியமானவராக கருதப்படுகிறார். அஸ்கோ பர்ப்போலா 1960 முதல் 1980 வரை சிந்துவெளி எழுத்துருக்களை ஆராய்ந்தார். கணிப்பொறி எழுத்துருவாக்க முறைப்படி பகுப்பாய்வு செய்து பிற மத்திய ஆசியமொழிகளின் எழுத்துருக்களுடன் ஒப்பிட்டும், பிற மத்திய ஆசிய தொல்மொழிகளின் சொற்களையும் திராவிடமொழிகளின் சொற்களையும் இணைநோக்கியும் சிந்துவெளி மக்கள் பேசிய தொல்மொழி திராவிடமொழியே என்று வாதிட்டார். பாகிஸ்தானிலுள்ள ப்ரஹ்யி ( Brahui) மக்கள் சிந்து சமவெளி மக்களின் தொடர்ச்சி என கருதுகிறார். அவருடைய சிந்துவெளி எழுத்துருக்களை பிரித்தறிதல் அவ்வகையில் ஒரு முன்னோடி நூலாகக் கருதப்படுகிறது.

மறுப்புகள்

அஸ்கோ பர்ப்போலாவின் இரு மையக்கருத்துக்கள் மறுதரப்பு ஆய்வாளர்களால் மறுக்கப்படுகின்றன. ஆரிய திராவிட இனவாதம் என்பது தெளிவான தொல்லியல் சான்றுகளோ, மொழிச்சான்றுகளோ இல்லாமல் சில மொழிக்குறிப்புகள் மற்றும் அடையாளங்களைக் கொண்டு நிகழ்த்தப்படும் ஊகங்களாகவே இன்றளவும் உள்ளது, அது ஒரு கொள்கையே ஒழிய வரலாற்றுண்மை அல்ல என அவர்கள் கூறுகிறார்கள். ஆரியர்கள் கிழக்கு ஐரோப்பிய வேர்கள் கொண்டவர்கள் என்பதற்கும் குறியீடுகளைக் கொண்டு அகவயமாக நிகழ்த்தப்படும் ஊகங்களே சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன என்று கூறி மறுக்கிறார்கள். காலின் ரென்ஃப்ரியூ (Colin Renfrew) பேரா நிகோலஸ் கன்ஸானஸ் (Prof. Nicholas Kazanas) பேரா ஸ்ரீகாந்த் தலகேரி (Shrikant Talageri ) ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்.

விருதுகள்

  • 2009-கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது
  • 2015 -சம்ஸ்கிருத அறிஞருக்கான இந்திய ஜனாதிபதி விருது

பதவிகள்

  • அஸ்கோ பர்ப்போலா அமெரிக்க கீழையியல் கழகம் (American Oriental Society) கௌரவர் உறுப்பினராக 1990 முதல் பதவி வகிக்கிறார்
  • அஸ்கோ பர்ப்போலா ஃபின்னிஷ் அறிவியல் இலக்கிய அக்காதமி (Finnish Academy of Science and Letters) உறுப்பினர்.

நூல்கள்

  • சிந்துவெளி எழுத்துருக்களை பிரித்தறிதல் (1994: Deciphering the Indus Script, Cambridge University Press
  • இந்துமதத்தின் வேர்கள் (2015: The Roots of Hinduism: The Early Aryans and the Indus Civilization, Oxford University Press)
  • சிந்துவெளி எழுத்து - அஸ்கோ பர்ப்போலா - தமிழோசை வெளியீடு

உசாத்துணை


✅Finalised Page