அகஸ்தியர் கதை: Difference between revisions
Corrected typo errors; |
Normalized selected wikitext line breaks; |
||
| Line 128: | Line 128: | ||
*அகஸ்தியர் ராமருக்கு விஷ்ணுவிடமிருந்து பெற்ற வில் ஒன்றைப் பரிசளித்தார். ராவணனைக் கொன்று சீதையுடன் ராமர், லட்சுமணர் இலங்கையிலிருந்து அயோத்திக்குத் திரும்பும் பயணத்தில் அகஸ்தியரும் உடன் சென்றார். | *அகஸ்தியர் ராமருக்கு விஷ்ணுவிடமிருந்து பெற்ற வில் ஒன்றைப் பரிசளித்தார். ராவணனைக் கொன்று சீதையுடன் ராமர், லட்சுமணர் இலங்கையிலிருந்து அயோத்திக்குத் திரும்பும் பயணத்தில் அகஸ்தியரும் உடன் சென்றார். | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
*[https://www.wisdomlib.org/hinduism/compilation/puranic-encyclopaedia/d/doc241351.html அகஸ்தியர் கதை - வெட்டம் மாணி புராண கலைக்களஞ்சியம்] | *[https://www.wisdomlib.org/hinduism/compilation/puranic-encyclopaedia/d/doc241351.html அகஸ்தியர் கதை - வெட்டம் மாணி புராண கலைக்களஞ்சியம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
Latest revision as of 23:53, 11 October 2026

அகஸ்தியர் (அகத்தியர்) தமிழ்நாட்டில் வாழ்ந்த பதினெண் சித்தர்களில் முதன்மையானவர். இவரைப் பற்றிய தொன்மக் கதைகள் மகாபாரதம், ராமாயணம், பிரம்மபுராணம், ஸ்கந்தபுராணம், அக்னிபுராணம் ஆகியவற்றில் உள்ளன.
பரம்பரை
விஷ்ணுவிடமிருந்து வந்தவர்கள் பிரம்மன்-மரீசி-காசியபர்-சூர்யர்-அகஸ்தியர்.
பிறப்பு கதை
மகாபாரதத்தின் சாந்தி பர்வத்தில், 88-ம் அத்தியாயம் 343-வது வசனத்தில் அகஸ்தியரின் பிறப்பு பற்றிய கதை உள்ளது.
அகஸ்தியரின் பிறப்பு பற்றி உத்தர ராம சரிதையில் ஒரு கதை உள்ளது. நிமி சூர்ய வம்சத்தைச் சேர்ந்த இக்ஷ்வாகுவின் மகன். அவர் அரியணை ஏறியதும் யாகம் செய்ய வசிஷ்டரை அழைத்தார். ஆனால் இந்திரனின் யாகத்தில் பங்கு கொள்ள வேண்டி இருந்ததால் வசிஷ்டர் அவரது அழைப்பை ஏற்க மறுத்தார். இதனால் நிமி கோபமடைந்து துறவி கௌதமரின் மகனான சதானந்தரின் உதவியை நாடினார். யாகம் தொடங்கியது. வசிஷ்டருக்கு இது பிடிக்கவில்லை. நிமியின் உடலை விட்டு உயிர் பிரிந்து போகட்டும் என்று சபித்தார். நிமியும் அவருக்கு அதே சாபத்தை திருப்பி அளித்தார். வசிஷ்டரின் ஆவி அவரது உடலிலிருந்து பிரிந்து வானில் உலாவத் தொடங்கியது. வசிஷ்டர் தனக்கு ஒரு உடலைத் தருமாறு பிரம்மாவிடம் வேண்டினார். பிரம்மா அவருக்கு மித்ரன் மற்றும் வருணனிடமிருந்து மீண்டும் பிறப்பெடுக்க வரமளித்தார்.
வசிஷ்டரின் ஆவி பூமிக்கு வந்தபோது, மித்ரனும் வருணனும் ஒரே உடலை மட்டுமே கொண்டிருந்தனர். வசிஷ்டரின் ஆவி அந்த உடலுக்குள் நுழைந்தது. ஒரு நாள் மித்ரனும் வருணனும் கடற்கரையில் சொர்க்கத்தின் அழகியான ஊர்வசியைக் கண்டனர். அவர்கள் ஊர்வசியைத் தழுவினார்கள். உடனே வசிஷ்டரின் ஆவி ஊர்வசியின் உடலில் நுழைந்தது.
இதற்குப் பிறகு மித்ரனும் வருணனும் ஒருவரையொருவர் பிரிந்து இரு வேறு உடல்களை ஏற்றனர். வருணன் காமத்துடன் ஊர்வசியை அணுகினான். ஆனால் ஊர்வசி அவனை நிராகரித்து மித்ரனை ஏற்றுக்கொண்டாள். வெளிப்பட்ட வருணனின் விந்து ஒரு பானையில் வைக்கப்பட்டது. இதைப் பார்த்ததும் ஊர்வசிக்கு மனவருத்தமும் ஆவேசமும் உண்டாகி, அவள் வயிற்றில் ஏற்கனவே பெற்றிருந்த மித்ரனின் விந்து வெளியேறி தரையில் விழுந்தது. இதுவும் அதே பானையில் சேமிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு பானை தானாகவே உடைந்து இரண்டு குழந்தைகள் வெளியே வந்தன. ஒருவர் அகஸ்தியர் மற்றவர் வசிஷ்டர். இவர்கள் இருவரும் மித்ரன் மற்றும் வருணனின் வித்தில் பிறந்ததால், அவர்கள் பின்னர் மைத்ராவருணிகள் என்று அழைக்கப்பட்டனர்.
திருமணம்
அகஸ்தியர் போன்ற கடும் துறவு கொண்டவர் திருமணம் செய்ததற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.
துறவி அகஸ்தியர் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரது முன்னோர்கள் ஒரு பள்ளத்தாக்கில் தலைகீழாகத் தொங்குவதைக் கண்டார். அதன் காரணத்தை அறிய விரும்பினார். முன்னோர்கள் பதிலளித்தனர்: "குழந்தை! உனக்கு மகன்கள் பிறந்தால் மட்டுமே நாங்கள் சொர்க்கத்தில் நுழைவோம். எனவே கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்" என்றனர். திருமணத்தின் அவசியம் அப்போதுதான் அவருக்கு புரிந்தது. ஆனால் இந்தக் குள்ளமான தாடித் துறவியின் மனைவியாக வருவதற்கு பொறுமை காக்கும் பெண் யாராவது இருப்பார்களா? அகஸ்தியர் மனம் தளரவில்லை.
அப்போது விதர்ப்ப மன்னன் மகனைப் பெறுவதற்காக தவம் செய்து கொண்டிருந்தான். அகஸ்தியர் அனைத்து உயிரினங்களின் சாராம்சத்தை சேகரித்து அதிலிருந்து மிகவும் அழகான பெண்ணை உருவாக்கி அவளுக்கு லோபாமுத்ரா(லோபமுத்திரை) என்று பெயரிட்டார். அகஸ்தியார் விதர்ப்ப மன்னனுக்கு லோபாமுத்ரையை மகளாகக் கொடுத்தார். அத்தகைய மகளைப் பெற்றதில் மகிழ்ச்சியடைந்த மன்னன், குழந்தையைப் பராமரிக்க நூற்றுக்கணக்கான பணிப்பெண்களை நியமித்தார். அவள் விரைவில் இளம் பெண்ணாக வளர்ந்தாள்.
அகஸ்தியர் விதர்ப்ப மன்னனை அணுகி லோபாமுத்ராவை மனைவியாகப் பெற விரும்பினார். அரசர் குழப்பமானார். ஒருபுறம், தனது அழகான மகள் துறவிக்கு மனைவியாகக் கொடுக்கப்படுவதையும், துறவுக்கோலம் அணியப்போவதும் அவருக்குப் பிடிக்கவில்லை. மறுபுறம் துறவி அகஸ்தியரின் சாபத்திற்கு அவர் பயந்தார். மன்னன் இதற்கு ஒரு தீர்வைக் காண கடுமையாக முயன்றபோது, லோபாமுத்ரா அரசனிடம் வந்து, "அப்பா, நான் துறவி அகஸ்தியரின் மனைவியாவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினாள். அரச ஆடைகளையும் ஆபரணங்களையும் துறந்தாள். அகஸ்தியருடன் சென்றாள். அவர்கள் மகாசிந்துதீர்த்தத்தில் திருமணம் செய்துகொண்டதாக வன பர்வத்தின் , 130-ம் அத்தியாயம் வசனம் 5-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பிறகு அவர்கள் கங்காத்வாரத்துக்குச் சென்றனர். (மஹாபாரதம், வன பர்வம், அத்தியாயம் 96).
வாதாபி
அகஸ்தியர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்த போது லோபாமுத்ரா பருவமடைந்தாள். குழந்தைக்காக ஏங்கி அகஸ்தியர் முன் சென்று நின்றாள். குடும்ப வாழ்க்கை நடத்த விருப்பம் தெரிவித்தாள். அவளது கோரிக்கைகள் அதோடு நிற்கவில்லை. இருவரும் இணையும் போது, அகஸ்தியர் மலர் மாலைகள் மற்றும் ஆபரணங்கள் அணிய வேண்டும் என்றம் அவளுக்கு தெய்வீக ஆபரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்தாள். பணமில்லாத அகஸ்தியர் லோபாமுத்ராவை ஆசிரமத்தில் விட்டுவிட்டு பணத்தைத் தேடிச் சென்றார். அவர் முதலில் மன்னன் ஸ்ருதர்வாவை அணுகினார். அவர் தனது வருமானம் மற்றும் செலவினங்களைக் கூறி, அகஸ்தியரிடம் தன்னிடம் ஒன்றும் இல்லை என்றார். அகஸ்தியர், ஸ்ருதர்வாவுடன் மன்னன் பிரத்னாஸ்வாவிடம் சென்றார். அவரும் தன் கணக்குகளைக் காண்பித்து அகஸ்தியருக்கு உதவ மறுத்தார். பின்னர் ஸ்ருதர்வா மற்றும் பிராத்னாஸ்வா ஆகியோருடன் இணைந்து செல்வந்த மன்னன் த்ரசதஸ்யுவிடம் சென்றார். அவரும் தனது கணக்குகளைக் காட்டி அகஸ்தியருக்கு எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டார். இறுதியாக அகஸ்தியரும் மூன்று அரசர்களுடன், அபரிமிதமான செல்வம் கொண்ட அசுரன் இல்வலன் வீட்டிற்குச் சென்றார்.
அசுரன் இல்வலன் தனது தம்பி வாதாபியுடன் மணிமதிபட்டணத்தில் வசித்து வந்தான். ஒருமுறை இல்வலன் ஒரு துறவி பிராமணரை அணுகி, இந்திரனின் சக்தியும் அந்தஸ்தும் கொண்ட ஒரு மகன் வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றும்படி வேண்டினான். பிராமணன் அத்தகைய வரம் தர மறுத்தான். அன்றிலிருந்து இல்வலனும் வாதாபியும் பிராமணர்களை எதிரிகளாகக் கருதினர். மூத்த சகோதரன் இளையவனை ஆடாக மாற்றி, அந்தணன் அவன் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம், அவன் ஆட்டைக் கொன்று, ஆட்டிறைச்சி உணவுகளை தயார் செய்து, விருந்தாளிக்கு முன் வைப்பான். சாப்பிட்டு முடித்ததும் இல்வலன் "வாதாபி, வெளியே வா" என்றதும் விருந்தினரின் வயிற்றை உடைத்து, வாதாபி வெளியே வருவார். இவ்வாறே இல்வலன் பல பிராமணர்களைக் கொன்றான். இந்த நேரத்தில்தான் அகஸ்தியரும் அரசர்களும் அவரிடம் செல்வம் வேண்டி வந்தனர்.
இல்வலன் விருந்தாளிகளை விருந்தோம்பல் செய்து வழக்கம்போல் ஆட்டைக் கொன்று அதன் மூலம் உணவு தயாரித்து அகஸ்தியருக்குப் பரிமாறினார். அகத்தியர் சாப்பிட்டு முடித்ததும், இல்வலன் வாதாபியை சத்தமாக அழைத்தார். ஆனால் அகஸ்தியர் மெதுவாக, "வாதாபி, ஜீர்ணோ பவ" (வாதாபி ஜீரணமாகட்டும்) என்று கூறினார். உடனே வாதாபி அகஸ்தியரின் வயிற்றில் ஜீரணமானார். பிரமிப்புக்குள்ளான அசுரன் இல்வலன் ஒவ்வொரு பிராமணனுக்கும் பத்தாயிரம் பசுக்களையும், தங்கத்தையும் கொடுத்து, அகஸ்தியருக்கு இரு மடங்கு தானம் அளித்து அவருக்கு விரவன், சுரவன் என்ற இரு சிறந்த குதிரைகள் பொருத்தப்பட்ட தேரைப் பரிசாக அளித்தார். அகஸ்தியர் தனது ஆசிரமம் திரும்பி லோபாமுத்திரை கூறியபடி தன்னை அலங்கரித்துக் கொண்டார். (மஹாபாரதம், வன பர்வம், அத்தியாயம் 99).
மகன்
லோபாமுத்ரா கர்ப்பமானார். அகஸ்தியர் அவளிடம், "ஆயிரம் சாதாரண மகன்கள் அல்லது நூறு மகன்கள், ஒவ்வொருவருக்கும் பத்து சாதாரண மகன்கள் அல்லது பத்து மகன்கள், ஒவ்வொருவருக்கும் நூறு சாதாரண மகன்கள் அல்லது ஒரு மகன், ஆயிரம் மகன்களை விட பெரிய மற்றும் உன்னதமான மகன். இவற்றில் எதை நீ விரும்புகிறாய்?" என்று கேட்டார். லோபாமுத்ரா ஒரு மகனை விரும்பினாள். அவள் கருவுற்றிருந்தபோது அகஸ்தியர் மீண்டும் காட்டுக்குச் சென்று தவம் செய்தார். ஏழு வருட கர்ப்பத்திற்குப் பிறகு லோபாமுத்ரா ஒரு பொலிவான மகனைப் பெற்றெடுத்தாள். இத்மவாஹா என்றும் அழைக்கப்படும் துறவி திருதஸ்யு இந்த மகன். இந்தக் குழந்தை பிறந்த உடனேயே வேதங்களை (புனித நூல்கள்) உச்சரித்ததாகக் கூறப்படுகிறது. தனது தந்தையின் யாகத்தீயை மூட்டுவதற்காக மரக்கிளைகளைச் சேகரித்து வந்ததால் இத்மவாஹா என்றும் அழைக்கப்பட்டார்.
விந்திய மலை
ஒருமுறை கதைசொல்லியான நாரதர் விந்திய மலைக்கு வந்தார். அகஸ்தியர் நாரதரை மகிழ்ச்சியுடன் வரவேற்று இருக்கையில் அமர்ந்து உபசரித்து செய்தி கேட்டார். நாரதர் "இப்போதுதான் நான் மகாமேருவிலிருந்து வருகிறேன். இந்திரன், அக்னி மற்றும் பிற தேவர்கள் அங்கே வாழ்கிறார்கள். கைலாச, நிஷாத, நீல, கந்தமாதன மலைகள் இந்த மேருவை விட மிகவும் உன்னதமான மலைகள். ஆனால் மேருவைப் போல ஆணவம் கொண்டவை அல்ல. சூரியனும் சந்திரனும் அவனைச் சுற்றி வருவதுதான் அவனுடைய அகந்தைக்குக் காரணம்" என்றார். இந்தக் கதைகளைக் கேட்ட விந்தியன் (விந்திய மலை), மேருவுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து, தனது சிகரங்களை வானத்தைத் தொடும் வரை மேலும் மேலும் உயரச் செய்தான். சூரியன், சந்திரன் மற்றும் பிறர் தங்கள் வழக்கமான மேற்குப் பயணங்களில் உயரமான சிகரங்களைக் கடந்து செல்வது மிகவும் கடினமாக இருந்தது, அதனால் அவர்கள் வானத்தில் சுற்றித் திரிந்தனர். சூரிய சந்திரர்களளின் பயணங்கள் தடைபட்டபோது, உலகில் உள்ள அனைத்தும் குழப்பத்தில் விழுந்தன. தேவர்கள் குழுவாக விந்திய மலையைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே அவர்கள் அகஸ்தியரை அணுகி அவரிடம் தங்கள் கோரிக்கையை வைத்தனர். அகஸ்தியரும் அவரது மனைவியும் காசிநகரில் இருந்து விந்திய மலைக்கு வந்தனர். அகஸ்தியரைக் கண்டதும் பயத்தில் நடுங்க ஆரம்பித்த விந்திய மலை தனது உயரமான சிகரங்களையெல்லாம் சுருக்கி, அகஸ்தியரை வணங்க, அவர் விந்திய மலையே, நான் தெற்கு பாரதத்திற்குச் செல்கிறேன். நான் திரும்பி வரும் வரை உங்கள் தலைகள் தாழ்வாக இருக்கட்டும்" என்று கூறினார். விந்தியனும் ஒப்புக்கொண்டான்.அகஸ்தியர் தென்னாடு சென்று மலையசாலையில் ஒரு துறவு இல்லம் அமைத்து அங்கு வாழ்ந்தார். அன்றிலிருந்து அகஸ்தியர் வடக்கே சென்றதில்லை, விந்திய மலைக்குச் செல்லவில்லை. மலையைத் தலைகுனியச் செய்ததால் அகஸ்தியர் என்று பெயர் பெற்றார். (தேவிபாகவதத்தின் பத்தாவது ஸ்கந்தம்)
நகுஷனுக்கு சாபம்
தேவர்களின் எதிரியான விருத்திராசுரனை தேவேந்திரன் கொன்றான். எதிரியைக் கொல்வதற்காக தேவேந்திரன் நம்பிக்கை துரோகம் செய்ததால் பிரம்மஹத்தி( 'பிரம்மஹத்யா') தோஷத்தால் பீடிக்கப்பட்ட இந்திரன் யாருக்கும் தெரியாமல் மானசசரஸ் என்னும் பொய்கையில் சென்று தாமரை மலரின் இதழில் ஒளிந்து கொண்டான். தேவேந்திரன் மறைந்ததைக் கண்டு தேவர்களும் குறிப்பாக சசிதேவியும் மிகவும் கவலையடைந்தனர். சொர்க்கம் தலைவன் இல்லாமல் ஆனது. கெட்ட சகுனங்கள் தோன்ற ஆரம்பித்தன. தாமரைத் தண்டில் நீர்ப்பாம்பின் வடிவில் மறைந்திருந்த இந்திரன் மேல் இதழ்கள் மூடியிருந்ததால் அவன் கண்ணுக்குத் தெரியவில்லை.
இந்த இக்கட்டான தருணத்தில்தான் நஹுஷ(நகுஷ) மன்னன் 100 அஸ்வமேதயாகம் முடித்து தேவேந்திரனின் அரியணைக்குத் தகுதி பெற்றான். கடவுள்களின் ஒரு பெரிய கூட்டத்தில் நஹுஷன் தேவேந்திரனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நஹுஷன் அனைத்து விண்ணகப் பணிப்பெண்களையும் நந்தனோத்யானாவில் பெற்றிருந்தாலும், பெண்கள் மீதான அவரது மோகம் தணியவில்லை. அதனால் அவருக்கு இந்திராணி மீது மோகம் வந்தது. தன் கணவன் இந்திரனைக் காணாமல் துக்கத்திலும் துயரத்திலும் இருந்த இந்திராணி புதிய இந்திரனின் இந்த நடவடிக்கைகளை கவனிக்கவில்லை. கவனித்ததும் நஹுஷனைத் தடுக்க அவள் பிரஹஸ்பதியின் உதவியை நாடினாள். நஹுஷனால் இந்திராணியின் இந்த துரோகத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
நஹுஷன் கோபமடைந்து உடனடியாக இந்திராணியை தன்னிடம் அனுப்பாவிட்டால் பிரஹஸ்பதியைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார். அனைத்து துறவிகளும் நஹுஷனை இந்த முயற்சியில் இருந்து விலக்க முயன்றனர். ஆனால் அவர் மனம் தளரவில்லை. நஹுஷன் பிரஹஸ்பதியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டார். இறுதியாக துறவிகள் நஹுஷனுக்கு பயந்து,இந்திராணியை நஹுஷனிடம் அனுப்பும்படி பிருஹஸ்பதியிடம் வற்புறுத்தினர்.
பிருஹஸ்பதி கூறிய யோசனைப்படி அவள் நஹுஷனிடம் வந்து அவனிடம் "இறையே, உமது மனைவியாக மாறுவது எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். ஆனால் அதற்கு முன் என் கணவர் எங்காவது இருக்கிறாரா என்பதை நான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே என்னைத் தேட அனுமதியுங்கள்" என்றாள். நஹுஷன் இதற்கு ஒப்புக்கொண்டார். தேவியின் ஆசியால் இந்திராணி தனது கணவரைக் கண்டுபிடித்தார். இந்திரன் அனைவரின் முன்னும் வரமறுத்தான். இந்திராணி நஹுஷனின் மூர்க்கத்தனமான நடத்தையைப் பற்றி புகார் செய்தாள். நஹுஷனின் தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள இந்திரன் அவளுக்கு ஒரு புதிய வழியைக் கூறினான்.
இந்திராணி நஹுஷனிடம் திரும்பி வந்து அவரிடம் " பெண்களுக்கு பொதுவாக ஆடம்பரமும் பெருமையும் பிடிக்கும். எனக்கு வாகனங்கள் மீது வெறி உண்டு. நீங்கள் ஒரு பல்லக்கை உருவாக்குங்கள். பல்லக்கு தாங்குபவர்கள் சந்நியாசிகளாக இருக்கட்டும். அந்தப் பல்லக்கில் என் வீட்டிற்கு நீங்கள் வர வேண்டும். அதன்பிறகு நான் உங்களை என் கணவராக ஏற்றுக்கொள்கிறேன்." என்றாள். நஹுஷன் ஒப்புக்கொண்டார். அவர் அகஸ்தியரையும் மற்ற துறவிகளையும் தனது பல்லக்கைச் சுமக்க நியமித்தார். அவர் தனது பல்லக்கில் ஏறி இந்திராணியின் வீட்டிற்குச் சென்றார். இந்திராணியை அடைய வேண்டும் என்ற அவரது ஆசையால் துறவிகளை விரைவாக நடக்க ('சர்ப்ப சர்ப்ப') கட்டளையிட்டார். துறவிகள் ஓடத் தொடங்கினர். அப்போதும் நஹுஷன் திருப்தி அடையவில்லை. அவர் துறவிகளின் தலையில் எட்டி உதைத்து குள்ளமான அகஸ்தியரை சாட்டையால் அடித்தார்.
அகஸ்தியர் கோபமடைந்து "நீ என்னை 'சர்ப்ப சர்ப்ப' என்று சாட்டையால் அடித்ததால், நீ மகாசர்ப்பமாக(பாம்பு) மாறி, பெரும் காட்டில் வீழ்வாயாக." என்றார்.
திகிலடைந்த நஹுஷன் அகஸ்தியரைப் பணிந்தார். தர்மபுத்திரரை சந்திக்க நேர்ந்ததும் நஹுஷன் தன் சாபத்தில் இருந்து விடுபட்டு சொர்க்கத்தை அடைவார் என்று அகஸ்தியார் சாப விமோசனம் கூறினார். நஹுஷன் உடனடியாக ஒரு பெரிய பாம்பாக மாறி இமயமலையில் உள்ள ஒரு பெரிய காட்டில் வாழ ஆரம்பித்தார். (தேவிபாகவதம், 8-வது சர்கம்).
வனவாசத்தின் போது, பாண்டவர்கள் பல புண்ணிய தலங்களுக்குச் சென்று இமயமலையில் உள்ள யமுனை மலையை அடைந்தனர். பீமன் ஒரு குகையின் வாயில் சென்றபோது ஒரு பெரிய பாம்பினால் தாக்கப்பட்டார். அபார பலம் இருந்தபோதிலும் பீமனால் பாம்பின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. இறுதியில் அது பீமனுக்கு தன் முந்தைய வரலாற்றை தெரிவித்தது. அந்தப் பாம்பு சூரிய வம்சத்தின் மன்னனான நஹுஷன் என்று பீமன் புரிந்துகொண்டு வருந்தினார். பீமனைத் தேடி அங்கு வந்த தர்மபுத்திரர் நஹுஷனுடன் பேசினார். நஹுஷன் உடனடியாக தனது அசல் வடிவத்தைப் பெற்று சொர்க்கத்திற்குச் சென்றார். (மஹாபாரதம், உத்யோக பர்வம் அத்தியாயம் 17; வன பர்வம் அத்தியாயம் 179; சாந்தி பர்வம் அத்தியாயம் 342)
கடலைக் குடித்தது
காலகேயர்களின் உதவியுடன் தேவர்களைத் துன்புறுத்திய விருத்திராசுரனை இந்திரன் இரக்கமின்றிக் கொன்றான். பயந்து போன காலகேயர்கள் கடலில் இறங்கி அடியில் மறைந்தனர். அந்த மறைவிடத்திலிருந்து மூவுலகையும் அழிக்க முடிவு செய்தனர். இரவில் அவர்கள் பூமிக்கு வெளியே வந்து பிராமணர்களைக் கொன்று தின்றார்கள். மேலும் வசிஷ்டர் மற்றும் ச்யவனரின் ஆசிரமத்திலிருந்த துறவிகளுக்கு மிகவும் சேதம் விளைவித்தனர். பூமியிலுள்ள அனைத்து பிராமணர்களும் காலகேயர்களைக் கண்டு மிகவும் பயந்தனர். தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று காக்க வேண்டினர். சமுத்திரம் வற்றாத வரை காலகேயர்களைப் பிடிக்க முடியாது என்றும் அகஸ்தியரால் மட்டுமே இந்தப் பணியைச் செய்ய முடியும் என்றும் விஷ்ணு கூறியதால் தேவர்கள் அகஸ்தியரை அணுகினர். தேவர்களுடனும் துறவிகளுடனும் அவர் பெருங்கடலை நெருங்கினார். அனைவரும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அகஸ்தியர் மகா சமுத்திரத்தை தன் உள்ளங்கையில் எடுத்து மிக எளிதாகக் குடித்தார். அடியில் மறைந்திருந்த காலகேயர்கள் கொல்லப்பட்டனர். இப்போது தேவர்கள் மீண்டும் விஷ்ணுவை அணுகி கடலின் இழப்பைப் பற்றி விளக்கினர். விஷ்ணு அவர்களிடம் பகீரதனின் தவத்தால் தெய்வீக கங்கை பூமியில் எழும் என்றும் அதன்மூலம் கடல் மீண்டும் நிரம்பும் என்றும் கூறினார். இதன் மூலம் பூமி இழந்த கடலைத் திரும்பப் பெற்றது. (மகாபாரதம், வன பர்வம், அத்தியாயங்கள் 101 முதல் 105 வரை)
குபேரனைச் சபித்தல்
வனவாசத்தின் போது பாண்டவர்கள் பல புனிதத் தலங்களுக்குச் சென்று இமயமலையைச் சென்றடைந்தனர். தன் சகோதரர்களை விட்டுவிட்டு அர்ஜுனன் சிவனை வணங்குவதற்காக மஹாமேருவில் ஏறினான். வருடங்கள் ஓடின. கடைசியாக அவனது சகோதரர்களும் அர்ஜுனனைத் தேடி மஹாமேருவைத் தேடி, துறவிகளான விருஷபர்வர் மற்றும் ஆரஷ்டிஷேனர் ஆகியோரின் உதவியுடன் குபேரபுரியை அடைந்தனர். அங்கு பீமன் குபேரனின் படையை அழித்து அவனுடைய நண்பனான மணிமானைக் கொன்றான். தர்மன் தன் தம்பியின் அக்கிரமத்தைக் கண்டு மனம் வருந்தி குபேரனின் முன் பணிந்து, மனித சக்தி எவ்வாறு கடவுளின் சக்தியை வீழ்த்தியது என்று கேட்டார். அகஸ்தியரின் சாபத்தால் நிகழ்ந்தது என்று பதிலளித்த குபேரர். அந்த நிகழ்வை விவரித்தார்.
"ஒருமுறை நானும் எனது நண்பன் மணிமானும் குசாவதியில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு தேரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது அகஸ்தியர் காளிந்தி நதிக்கரையில் உள்ள தனது ஆசிரமத்தில் சூரிய வழிபாடு செய்து கொண்டிருந்தார். இதை வானத்தில் இருந்து பார்த்த மணிமான் அகஸ்தியரின் தலையில் எச்சில் உமிழ்ந்தான். உடனே அவர் என்னை சபித்தார். "இதோ, குபேரா, உன் நண்பன் மணிமான் உன் பார்வையில் என் தலையில் எச்சில் துப்பினான். அதனால் இந்த மணிமானும் உன் படையும் ஒரு மனிதனின் கையால் மரணத்தை சந்திக்கும். அவர்கள் இறக்கும் போது நீங்கள் அவர்களைக் கொன்ற மனிதனைச் சந்திக்க நேர்ந்தால் இந்த சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்கும் என்றார். இந்த சாபமே மணிமானுக்கும் படைக்கும் மரணத்தை ஏற்படுத்தியது." என்று குபேரன் தர்மனுக்கு பதிலளித்தார். பின்னர் குபேரன் பீமனை நேருக்கு நேர் பார்த்ததும் அந்தச் சாபம் நீங்கியது. (மஹாபாரதம், வன பர்வம், அத்தியாயம் 160)
மாரீசனையும் தாடகையையும் சபித்தல்
சிறுவர்களான ராமனும் லட்சுமணனும் விஸ்வாமித்திரரின் யாகத்தைப் பாதுகாப்பதற்காக விஸ்வாமித்திரருடன் காட்டிற்குச் சென்றனர். அவர்கள் தாடகா வனத்திற்குள் நுழைந்ததும் விஸ்வாமித்திரர் தாடகையின் கதையை அவர்களிடம் கூறினார்.
தாடகை சுகேதுவின் மகள். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த சுகேது துக்கமடைந்து பிரம்மாவின் முன் தவம் செய்யத் தொடங்கினார். பிரம்மன் தந்த வரத்தால் அவருக்கு தாடகை என்ற மகள் பிறந்தாள். பிரம்மன் அவளை ஆசீர்வதித்து, அவளுக்கு ஆயிரம் யானைகளின் பலத்தை அளித்தார். தாடகை வளர்ந்து இளம் பெண்ணானாள். சுகேது அவளை இஹர்ஜனின் மகன் சுந்தனுக்கு மணமுடித்து கொடுத்தான். தாடகை மாரீசன் என்ற மகனைப் பெற்றெடுத்தாள். சுந்தன் கொல்லப்பட்டபோது தாடகை காட்டுமிராண்டித்தனமாக அகஸ்தியரின் சந்நிதிக்குள் ஓடியது அங்கு பெரும் அழிவை ஏற்படுத்தியது. இதனால் கோபமடைந்த அகஸ்தியர் அவளை அரக்கி ஆகும்படி சபித்தார். உடனே தாடகை மற்றும் மாரீசனின் உடல்கள் அரக்க வடிவம் பெற்றன. தாடகை தன் கோபத்தை அடக்க முடியாமல் அகஸ்தியரின் ஆசிரமத்தை இடித்துத் தள்ளினாள். (வால்மீகி ராமாயணம், பாலகாண்டம்).
தாமரை திருட்டு கதை
ஒருமுறை பிருகு, வசிஷ்டர் மற்றும் பிற துறவிகள் இந்திரனைத் தலைவராகக் கொண்டு புனித யாத்திரை சென்றனர். வழியில் கௌசிகி என்ற புண்ணிய ஸ்தலத்தில் உள்ள பிரம்மசரஸை அடைந்தனர். அகஸ்தியர் அங்கே சில தாமரை மலர்களை வளர்த்திருந்தார். அகஸ்தியரால் வளர்க்கப்பட்ட தாமரை மலர்களை யாத்ரீகர்கள் திருட்டுத்தனமாக பறித்து சாப்பிட்டனர். கோபமடைந்த அகஸ்தியர் குற்றவாளியைத் தேடி துறவிகளிடம் கேட்டார். யாரும் திருட்டை ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியாக இந்திரனைப் பிடித்தவுடன் இந்திரன் "முனிவரே! உமது வாயில் இருந்து கடமை பற்றிய உபதேசங்களைக் கேட்கும் ஆர்வம் எனக்கு இல்லாவிட்டால், உமது தாமரை மலர்களைத் திருடியிருக்க மாட்டேன்" என்று கூறி தாமரை மலர்களைத் திருப்பிக் கொடுத்தான். அகஸ்தியர் மகிழ்ந்து, இந்திரனையும் துறவிகளையும் அனுப்பி வைத்தார். (மஹாபாரதம், அனுசாசன பர்வம், அத்தியாயம் 94).
அசுரர்களை எரித்தது
(இந்தக் கதை மகாபாரதத்தில் அகஸ்தியரின் மகத்துவத்தைப் பற்றி வாயு பகவானால் பீஷ்மருக்குச் சொல்லப்பட்டது. பீஷ்மர் அதை மீண்டும் அர்ஜுனனிடம் வலியுறுத்துவதாகவும் அமைந்தது).
ஒருமுறை தேவர்கள் அசுரர்களிடம் தோற்க வேண்டியிருந்தது. அவர்கள் அகஸ்தியரை அணுகி, "துறவியே, நாங்கள் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டதால், எங்கள் வளமான வாழ்வு முடிவுக்கு வந்தது. உன்னைத் தவிர எங்களுக்கு உதவி செய்பவர் யாருமில்லை." என்றனர். இதைக்கேட்ட அகஸ்தியர் கோபமடைந்து அவருடைய தவத்தின் பலனால் அசுரர்களை எரிக்கத் தொடங்கினார். அவர்களில் பலர் பூமியிலும், சிலர் பாதாளத்திலும் விழுந்தனர். இவ்வாறு வீழ்ந்த அசுரர்கள் அகஸ்தியரால் கொல்லப்படவில்லை. இதனால் சொர்க்கத்தில் இருந்த அசுரர்களின் அச்சுறுத்தல் நீங்கி, தேவர்கள் அமைதியுடனும் வளத்துடனும் வாழ்ந்தனர்.
இந்திரனுடனான மோதல்
ஒருமுறை அகத்தியர் பன்னிரண்டு ஆண்டுகள் யாக்க வேண்டிய யாகத்தை செய்யத் தொடங்கினார். இந்த யாகத்தில் ஏராளமான துறவிகள் கலந்து கொண்டனர். அகஸ்தியர் யாகத்தை ஆரம்பித்த உடனேயே, இந்திரன் உலகில் மழையை நிறுத்தினார். பயிர்கள் வளரவில்லை. ஆனால் யாகத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அகஸ்தியர் நல்ல உணவை வழங்கினார். அகஸ்தியரால் எப்படி இதைச் செய்ய முடியும் என்று துறவிகள் ஆச்சரியப்பட்டனர். வறட்சி தொடர்ந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே யாகத்தை நிறுத்த வேண்டியிருக்கும் என்று சில துறவிகள் பயந்தனர். அகஸ்தியர் பயப்பட வேண்டாம் என்றும், இந்திரன் மழையை அனுப்ப மறுத்தால் தானே இந்திரனாக மாறி குடிகளைக் காப்பேன் என்றும் கூறினார். இதைக் கேட்ட இந்திரன் திகிலடைந்து, தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கினான். (மஹாபாரதம், ஆஸ்வமேதிகா பர்வம், அத்தியாயம் 92)
கஜேந்திரமோக்ஷம்
மகாபாரதத்தில் அகஸ்தியர் இந்திரத்யும்னனை சபித்து அவரை யானையாக மாற்றிய கதை உள்ளது.
பாண்டிய மன்னன் இந்திரத்யும்னன் விஷ்ணுவின் மீது ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது அகஸ்தியர் அவன் அரண்மனையை அடைந்தார். தியானத்தில் மூழ்கியிருந்த மன்னன் துறவியின் வருகையைக் கவனிக்கத் தவறிவிட்டான். மன்னன் மீது கோபமடைந்து ஆயிரம் ஆண்டுகள் அவரை யானையாகும்படி அகஸ்தியர் சபித்தார். உடனே அரசன் ஒரு பெரிய யானையாக உருவெடுத்து அரண்மனையை விட்டு வெளியேறி காட்டிற்குச் சென்று அங்குள்ள யானைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். அப்போது அந்தக் காட்டில் தேவலர் என்ற துறவி தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஹுஹு என்ற ஒரு கந்தர்வன் சில விண்ணுலக பணிப்பெண்களுடன் உல்லாசமாக இருந்தபோது தேவலர் தனது ஆசிரமத்திற்கு வந்தார். தன் ஆசிரமத்திற்கு எதிரில் உள்ள குளத்தில் முழு நிர்வாணமாக கந்தர்வனும் பணிப்பெண்களும் விளையாடுவதையும் குளிப்பதையும் பார்த்து கோபமடைந்த தேவாலர் ஹுஹுவை சபித்தார். அவன் ஒரு முதலையாக ஆனான். திரிகூட மலையில் இருந்த இந்த குளம் அந்த முதலையின் கட்டுப்பாட்டில் வந்தது. யானையாக இருந்த இந்திரத்யும்னன் தண்ணீர் குடிக்க குளத்தில் நுழைந்தது. யானையின் காலை முதலை பிடித்தது. ஒவ்வொருவரும் சம பலத்துடன் மற்றொன்றை இழுக்க முயன்றனர். இந்த சண்டை ஆயிரம் ஆண்டுகளாக நீடித்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் சோர்ந்த போது அவர்கள் மனதில் தெய்வீக உணர்வுகள் உதிக்க ஆரம்பித்தன. பின்னர், மகாவிஷ்ணு கழுகு மீது ஏறி அவர்கள் முன் தோன்றி, தனது சக்ராயுதத்தால் அவர்களை வெட்டி, இருவருக்கும் விடுதலை அளித்தார். (பாகவதம், 8-வது ஸ்கந்தம், அத்தியாயம் 2).
ராமருக்கு ஆதித்ய ஹ்ருதய மந்திரம் கற்பித்தல்
ராமர் இலங்கையில் ராவணனுடன் சண்டையிட்டபோது, அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டது. அவரது இதயம் சிறிது நேரம் மயக்கத்தால் துடித்தது. ராவணன் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு முன்னேற ஆரம்பித்தான். போரைக்காண மேலே வானத்தில் தேவர்கள் கூடியிருந்தனர். அகஸ்தியர், அந்த குறிப்பிட்ட தருணத்தில் ராமருக்கு ஆதித்ய-ஹ்ருதய மந்திரத்தை உபதேசித்தார். இது சூரியக் கடவுளைப் போற்றும் ஒரு பாடல். (வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், சரகம் 107)
பூமியின் சாய்வு சரி செய்யப்பட்ட கதை
இமயமலையில் சிவன், பார்வதியின் திருமணம் நடைபெற்றது. அந்த சுபநிகழ்ச்சியில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் பிரசன்னமாகியதால் இமயமலைப் பகுதி கீழே மூழ்கி கண்டத்தட்டு சாய்ந்தது. பூமியின் சமநிலையை பராமரிக்க சிவன் அகஸ்தியரை தெற்கு நோக்கி அனுப்பினார். அதன்படி அகஸ்தியர் குற்றாலத்தை அடைந்தார். அங்கு விஷ்ணு வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் இருந்தது. அகஸ்தியர் நெற்றியில் சாம்பல் பூசியிருந்ததால் அங்குள்ள வைணவ பக்தர்களால் அவருக்கு கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டது. அகஸ்தியர் தனது சொந்த சக்தியால் தன்னை ஒரு வைணவனாக மாற்றிக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தார். உடனே கோயிலில் இருந்த விஷ்ணுவின் உருவம் தானாகவே சிவலிங்கமாக மாறியது. அன்று முதல் குற்றாலத்தில் உள்ள கோயில் சிவன் கோயிலாகவே இருந்து வருகிறது. அகஸ்தியர் பூமியின் தென்கோடியில் சென்று அங்கே அமர்ந்தார். அவருடைய எடையின் காரணமாக பூமி தனது இயல்பு நிலைக்குத் திரும்பியது. (ஸ்கந்த புராணம்)
க்ரௌஞ்சா மலை
அகஸ்தியர் விந்திய மலையைக் கடந்து தெற்கு நோக்கிச் சென்றபோது க்ரௌஞ்சன் என்னும் ராட்சசன் அவர் வழியைத் தடுத்தான். அவனுடைய சக்தியால் ராட்சசன் எல்லா இடங்களிலும் மிகக் கடுமையான மழையைப் பொழிந்தான். அகஸ்தியர் தனது கமண்டலத்திலிருந்து சில துளி தண்ணீரை க்ரௌஞ்சனின் மீது தெளித்தார். அவன் உடனடியாக மலையாக மாறினான். சுப்ரமணியரின் ஆயுதம் அவரைத் தாக்கும்போது சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று கூறி அகஸ்தியர் தெற்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தார். (ஸ்கந்த புராணம்)
காவேரி நதி
ஒருமுறை சூரபத்மன் என்ற அசுரன் தேவர்களை சொர்க்கத்திலிருந்து விரட்டினான். இந்திரன் தஞ்சாவூரில் உள்ள சியாலி என்ற இடத்திற்கு வந்து சிவனை மகிழ்விக்க தவம் செய்யத் தொடங்கினான். மழை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அகஸ்தியர் காவேரி நதியிலிருந்த தண்ணீர் முழுவதையும் சுருக்கித் தன் கமண்டலத்தில் வைத்தார். இதையறிந்த கணபதி, காக வடிவில் வந்து அந்த கமண்டலத்தைக் கவிழ்த்தார். அகஸ்தியர் கோபமடைந்து காகத்தின் பின்னால் ஓடினார். அது உடனடியாக ஒரு சிறுவனின் வடிவத்தை எடுத்தது. அகஸ்தியர் அவனைப் பிடித்தார். சிறுவன் உடனடியாக தன்னை சுப்ரமணியனாக வெளிப்படுத்தி, "உங்கள் கமண்டலம் எப்போதும் நிறைந்திருக்கும்" என அகஸ்தியருக்கு வரம் அளித்தான். அன்று முதல் காவிரியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. (ஸ்கந்த புராணம்)
பத்ராஷ்வாவின் அரண்மனையில்
ஒருமுறை அகஸ்தியர் பத்ராஷ்வனின் அரண்மனையில் விருந்தாளியாக ஏழு நாட்கள் இருந்தார். அகஸ்தியர் அரசி காந்திமதியைப் பல முறை பாராட்டினார். அரசன் அதற்கான காரணத்தை அறிய விரும்பி அவரிடம் கேட்டான். அகஸ்தியர், "முந்தைய பிறப்பின் போது காந்திமதி ஒரு செல்வந்தரின் பணிப்பெண்ணாக இருந்தாள். செல்வந்தர் அவளிடம் துலா மாதத்தில் (ஐப்பசி) தேய்பிறை த்வாதசியில் ஒரு குறிப்பிட்ட கோவிலில் விளக்குகள் அணையாமல் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டார். அவள் அதை சரியாகச் செய்ததன் விளைவாக தற்போதைய பிறப்பில் காந்திமதி என்ற பெயரைத் தாங்கி உனது ராணியாகிவிட்டாள்" என்றார். அகஸ்தியரின் இந்த விளக்கத்தில் அரசனும் அரசியும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் துவாதசியை விரத நாளாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். (வாயு புராணம்).
ஊர்வசி, ஜெயந்தன், நாரதரை சபித்தல்
ஒருமுறை அகஸ்தியர் இந்திரனின் விருந்தினராக தேவலோகத்துக்குச் சென்றார். அன்று அகஸ்தியருக்கு மரியாதை செய்யும் வகையில் ஊர்வசியின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நடனத்தின் நடுவே ஊர்வசியின் கண்கள் ஜெயந்தனின் மேல் பட, அவள் அவன் மே காதல் கொள்ள, நடனத்தில் தாளம் தப்பியது. நாரதர் மஹதி எனப்படும் அவரது புகழ்பெற்ற வீணையை வாசிப்பதில் சிறிது தவறு செய்தார். அகஸ்தியர் கோபமடைந்து ஊர்வசி, ஜெயந்தன் மற்றும் நாரதர் ஆகியோரை சபித்தார். சாபத்தின் படி ஜெயந்தன் மலர்மொட்டாக ஆனார். ஊர்வசி மாதவி என்ற பெண்ணாக பூமியில் பிறந்தாள். நாரதரின் வீணை 'மஹதி' பூமியில் மக்களின் வீணையாக மாறியது.
துஷ்பண்யனைச் சபித்தல்
துஷ்பண்யன் பாடாலிபுத்திர மன்னனின் கடைசி மகன். பொல்லாத துஷ்பண்யன் ஏராளமான குழந்தைகளைக் கொன்றான். அதனால் அரசன் அவனை அரண்மனையிலிருந்து வெளியேற்றினான். துஷ்பன்யன் காட்டிற்குச் சென்று அங்கு உக்ரரவஸ் என்ர முனிவரின் குழந்தையைப் பிடித்து தண்ணீருக்கு அடியில் வைத்து கொன்றான். உக்ரரவஸ் அவரை சபித்ததால் அவன் தண்ணீரில் விழுந்து இறந்தான். அவனுடைய ஆவி ஒரு பேயாக மாறி வலியுடனும் வேதனையுடனும் அலைந்தது. கடைசியாக அந்த ஆவி அகஸ்தியரை அணுகியது, அவர் தனது சீடரான சுதிஷ்னனை அழைத்து, கந்தமாதன மலையில் உள்ள அக்னிதீர்த்தத்தில் குளித்துவிட்டு அதிலிருந்து சிறிது தண்ணீரைக் கொண்டு வந்து துஷ்பண்யரின் ஆவியின் மீது தெளிக்கச் சொன்னார். சுதிஷ்னன் அதன்படி செய்ய, துஷ்பண்யனின் ஆவி தெய்வீக உருவத்தைப் பெற்று சொர்க்கத்தில் நுழைந்தது. (சேது மாஹாத்ம்யம்)
தங்க வளையல் கிடைத்தது
ஒருமுறை அகத்தியர் சுமார் நூறு யோஜனை அகலமுள்ள காட்டுக்குள் நுழைந்தார். காடு உயிர் இல்லாமல் இருந்தது. அவர் இன்னும் சில படிகள் நடந்தபோது சில கந்தர்வர்களும் மற்றும் விண்ணுலகத்தைச் சேர்ந்த பணிப்பெண்களும் பாடி நடனமாடியபடி அங்கு வந்தனர். அவர்களிலிருந்து ஒரு உத்தம ஆண் காட்டில் ஒரு ஏரியின் கரைக்கு முன் வந்து, அங்கே கிடந்த ஒரு மனிதனின் சடலத்தை எந்தத் தயக்கமுமின்றி சாப்பிட்டான். அதன் பிறகு அகஸ்தியரை சுற்றி வந்து வணங்கினான். ஒரு மனிதனின் சடலத்தை ஏன் சாப்பிட்டாய் என்று அகஸ்தியர் அவனிடம் கேட்டார். அந்த மனிதர் அகஸ்தியரிடம், "திரேதாயுகத்தில் (மூன்றாம் யுகம்) விதர்ப்பன் என்ற அரசன் இருந்தான். நான் அவனுடைய மகன். என் பெயர் ஸ்வேதன். என் ராஜ்யத்தை நீண்ட காலம் ஆண்ட பிறகு அனைத்தையும் துறந்து இந்த ஏரிக்கரையில் தவம் செய்யத் தொடங்கினேன். அதன்பின் என் உடலைத் துறந்து சொர்க்கத்தில் நுழைந்தேன். நான் சொர்க்கத்தை அடைந்தாலும் என் பசி தணியவில்லை. சொர்க்கவாசியான எனக்கு எப்படி இந்த பசி வந்தது என்று பிரம்மாவிடம் கேட்டேன். அப்போது பிரம்மா அரசனாக இருந்த நான் யாருக்கும் எதுவும் கொடுக்கவில்லை என்பதால் சொர்க்கத்தில் நுழைந்த பிறகும் எனக்கு இந்த பசி ஏற்பட்டது என்றும் அதற்கு பரிகாரமாக நான் தினமும் இங்கு வந்து பிணத்தை சாப்பிட வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். பத்தாயிரம் நாட்கள் முடிந்ததும் துறவி அகஸ்தியர் இங்கு வருவார் என்றும் அவருக்கு ஒரு தங்க வளையல் கொடுத்தால் என் பாவம் கழுவப்படும் என்றும் கூறினார். இவ்வாறு கூறி ஸ்வேதன்அகஸ்தியருக்கு பிரம்மனால் வழங்கப்பட்ட தங்க வளையலைக் கொடுத்தார். பின்னர் அவர் மறைந்தார். சடலமும் மறைந்தது. ஸ்வேதன் சொர்க்கம் சென்றார். (உத்தர ராமாயணம்)
பிற தொன்மங்கள்
- அகஸ்தியருக்கு சுதிஷ்ணன் என்று ஒரு சகோதரர் இருந்தார். (அக்னிபுராணம், அத்தியாயம் 7)
- சுதீஷ்ணன் அகஸ்தியரின் சீடனாகவும் இருந்தான். (சேது மாஹாத்ம்யம்)
- இல்வலனும் வாதாபியும் அஜமுகியின் மகன்கள். ஒரு மலையின் பள்ளத்தாக்கில் அஜமுகி துர்வாசரின் காதலுக்காக பிரார்த்தனை செய்தபோது இல்வலன் மற்றும் வாதாபி பிறந்தனர். இந்த இரண்டு மகன்களும் துர்வாசரை அவரது தவப்பலனைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரினர். கோபமடைந்த துர்வாசர், அகஸ்தியரின் கைகளில் மரணத்தை சந்திக்க நேரிடும் என்று அவர்களைச் சபித்தார். (ஸ்கந்தபுராணம், ஆசுர காண்டம்)
- அகஸ்தியர் கேல மன்னனின் புரோகிதராக இருந்தார்.
- ராமர் இலங்கையிலிருந்து சீதையுடன் அயோத்திக்குத் திரும்பியபோது, தத்தாத்ரேயர், நமுசி, பிரமுசி, வால்மீகி, சோமர், காண்டு, அகஸ்தியர் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த துறவிகள் அவர்களைச் சந்தித்தனர் என உத்தர ராமாயணத்தில் உள்ளது.
- அகஸ்தியர் ராமனுக்கு அசுரர் மீது எய்தால் அவர்களின் இதயத்தைத் துளைத்து, மறுபுறம் சென்று, கடலுக்குப் பறந்து, கடல் நீரில் குளித்து மீண்டும் திரும்பும் அம்பைப் பரிசளித்ததாக உத்தர ராமாயணத்தில் உள்ளது.
- ஆபஸ்தம்பரின் ஆசிரமத்திற்கு அகஸ்தியர் சென்றதாகவும், அவர் அகஸ்தியரிடம் "பிரம்மா, விஷ்ணு, சிவன் யார்" என்று கேட்ட கேள்விக்கு, "இவை மூன்றும் ஒரே உயர்ந்த மனிதனின் மூன்று வெவ்வேறு வெளிப்பாடுகள் மட்டுமே" என்று பதிலளித்ததாகவும் பிரம்மபுராணத்தில் உள்ளது.
- அகஸ்தியர் மணிபத்திரனின் மகன்களை ஏழு பனைமரங்களாக மாறும்படி சபித்தார்.
- சுதிஷ்ணன் என்ற துறவி அகஸ்தியரின் தம்பி. இவரை ராமரும் லட்சுமணரும் காட்டில் சந்தித்ததாக ராமாயணத்தில் உள்ளது.
- அகஸ்தியர் சுக முனிவரைச் சபித்து அவரை ராட்சசனாக மாற்றினார்.
- அகஸ்தியர் ராமருக்கு விஷ்ணுவிடமிருந்து பெற்ற வில் ஒன்றைப் பரிசளித்தார். ராவணனைக் கொன்று சீதையுடன் ராமர், லட்சுமணர் இலங்கையிலிருந்து அயோத்திக்குத் திரும்பும் பயணத்தில் அகஸ்தியரும் உடன் சென்றார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jul-2025, 18:55:31 IST