being created

அயோத்திதாச பண்டிதர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 79: Line 79:
* அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை: [[டி. தருமராஜ்]]
* அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை: [[டி. தருமராஜ்]]
* நான் பூர்வ பெளத்தன்: 2003: டி. தருமராஜ்
* நான் பூர்வ பெளத்தன்: 2003: டி. தருமராஜ்
* அயோத்திதாச பண்டிதர்: ந.முத்துமோகன் (தமிழில்: இந்திரா மோகம்)
* அயோத்திதாச பண்டிதர்: [[ந.முத்துமோகன்]] (தமிழில்: இந்திரா மோகம்)
* அயோத்திதாசர் சிந்தனைகள்: ஞான அலாய்சியஸ்
* அயோத்திதாசர் சிந்தனைகள்: [[ஞான அலாய்சியஸ்]]
* க. அயோத்திதாசர் ஆய்வுகள்: ராஜ் கெளதமன்
* க. அயோத்திதாசர் ஆய்வுகள்: [[ராஜ் கெளதமன்]]
* அயோத்திதாச பண்டிதரின் சொற்பொழிவுகள்: முனைவர் பெ.விஜயகுமார்
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.nakkheeran.in/special-articles/special-article/who-ayothidasar-why-should-we-celebrate-him-and-what-dravidian அயோத்திதாசர் ஏன் கொண்டாடப்பட வேண்டும்? இவருக்காக என்ன செய்தன திராவிடக் கட்சிகள்?: நக்கீரன்]
* [https://www.nakkheeran.in/special-articles/special-article/who-ayothidasar-why-should-we-celebrate-him-and-what-dravidian அயோத்திதாசர் ஏன் கொண்டாடப்பட வேண்டும்? இவருக்காக என்ன செய்தன திராவிடக் கட்சிகள்?: நக்கீரன்]

Revision as of 16:16, 5 October 2022

அயோத்திதாச பண்டிதர்

அயோத்திதாச பண்டிதர் (காத்தவராயன்) (மே 20, 1845 – மே 5, 1914) தமிழறிஞர், சிந்தனையாளர், கல்வியாளர், ஆய்வாளர், பத்திரிகையாளர், சித்த மருத்துவர், சமூக சேவகர். திராவிடச் சிந்தனைகளின் முன்னோடி, சாதி ஒழிப்புப் போராளி. "தமிழன்”; “திராவிடன்” என்ற கருத்தியலின் முன்னோடியாக அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர் காத்தவராயன். அயோத்திதாச பண்டிதர் மே 20, 1845-ல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் கந்தசாமிக்கு மகனாகப் பிறந்தார். தந்தையின் பணி காரணமாக நீலகிரிக்கு புலம்பெயர்ந்தார். நீலகிரியில் அயோத்திதாச பண்டிதரின் தாத்தா பட்லர் கந்தப்பன் ஜார்ஜ் ஆரிங்டனிடம் உதவியாளராகவும் சமையலராகவும் வேலைபார்த்தார். சித்தவைத்தியரான இவருடைய தாத்தா தன் வீட்டுப் பரணிலிருந்த ஓலைச்சுவடிகளை தன் குடும்ப சேமிப்பு ஏடுகளிலிருந்து மீட்டு ஆரிங்டனின் நண்பரான எல்லிசு துரையிடம் வழங்கினார். இதிலிருந்து 1812-ல் திருக்குறள் முதன்முறையாக பதிப்பிக்கப்பட்டது.

தனது தந்தையிடமும் காசிமேடு சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவரிடமும் 1830-1892வரை கல்வி கற்றார். மெட்ராஸ் ப்ளாக் டவுன் பகுதியில் வாழ்ந்துவந்த வல்லக்காளத்தி வீ. அயோத்திதாசர் பண்டிதரிடம் 1836-1900வரை கல்வி கற்றார். தமிழ், சித்த மருத்துவம், தத்துவம் ஆகியவற்றில் புலமை கொண்டார். ஆங்கிலம், வடமொழி, பாலி போன்ற மொழிகள் கற்றார். தன் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தனது பெயரை அயோத்திதாசர் என மாற்றிக் கொண்டார்.

தனிவாழ்க்கை

அயோத்திதாச பண்டிதர் நீலகிரியில் தோடர் இனத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கண்பார்வையற்ற தசரதராமன் என்ற குழந்தை பிறந்தது. பிறந்த சில தினங்களில் இந்தக் குழந்தை இறந்தது. குழந்தை இறந்த சோகத்தில் அயோத்திதாசரின் மனைவி காலமானார். அதன்பின் அயோத்திதாச பண்டிதர் பர்மா சென்றார். பத்து வருடங்களுக்குப் பின் ஊர் திரும்பிய அயோத்திதாசர் முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்தார். அவரது குடும்பம் வைணவ சமய மரபுகளைப் பின்பற்றியது. தன் ஆண் குழந்தைகளுக்கு மாதவராம், பட்டாபிராமன், சானகி ராமன், இராசராம் என்றும், புத்த மதத்தைத் தழுவிய பின்னர் பிறந்த தனது பெண் குழந்தைகளுக்கு அம்பிகா தேவி, மாயா தேவி என்றும் பெயர் சூட்டினார்.

ஆன்மீகம்

ஆதிசங்கரரின் கொள்கைகளை உள்வாங்கிய அயோத்திதாசர், 1876-ம் ஆண்டு 'அத்வைனந்தா சபை'யைத் தோற்றுதார். தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையினப் பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்தார். இதன் மூலம், அத்வைத கொள்கைகளைப் பரப்பினார். அங்கு வாசித்த 'நாரதீய சங்கைத் தெளிவு' எனும் ஓலைச்சுவடி ஆதிதிராவிடர் பற்றிய சிந்தனைத் தெளிவைத் தந்தது. பண்டிதர் வைணவ மரபை ஆதரித்தாலும் "இந்து" என்ற அடையாளத்தை ஏற்க மறுத்தார்.

சமூக சேவை

பிரம்ம ஞான சபை ஆல்காட் அவர்களுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாகத் தாழ்த்தப்பட்டோருக்குச் சென்னையில் ஐந்து பள்ளிக் கூடங்களை நிறுவினார்.

சித்த மருத்துவம்

அயோத்திதாசரைப் பற்றிய குறிப்புகள் திருவிக-வின் நாட்குறிப்புகளில் உள்ளன. அதில் அயோத்திதாசரை தங்களது குடும்ப மருத்துவர் என திருவிக குறிப்பிட்டார். இளம்பருவத்தில் முடக்குவாத நோயால் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் பாதிக்கப்பட்டிருந்தபோது, அயோத்திதாசர்தான் சித்த மருத்துவத்தின் மூலம் எழுந்து நடக்க வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.பாம்பு போன்ற விஷக் கடிகளுக்கு அவர் மருந்து தரமாட்டார் என்றும் பார்வையாலேயே விஷத்தை இறக்கிவிடும் கலைகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார் என்றும் அவரைப் பற்றி கூறியுள்ளார். தமிழக அரசு அயோத்திதாச பண்டிதர் பெயரில் “அரசு அயோத்திதாசர் சித்த மருத்துவமனைˮ என பெயர் சூட்டியது.

பூர்வ பெளத்தர்

1880-களில் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 'பூர்வத் தமிழர்' என்ற பிரிவைப் பதிவு செய்யச் சொல்லி வேண்டுகோள் வைத்தார். 'ஆதித் தமிழர்', 'ஆதி திராவிடர்' போன்ற பல அடையாளங்களை முன்வைத்தார். ஆங்கிலேய அரசு அவற்றை ஏற்க மறுத்தது. "இவையெல்லாம், மொழி அல்லது இன அடையாளத்தின் கீழ் வருபவை. மத அடையாளத்தின் கீழ் இவற்றைக் கொண்டுவர முடியாது" என விளக்கம் அளித்தது. அவர் 'பூர்வ பவுத்தர்' எனும் அடையாளம் நோக்கிச் சென்றார்.

சாக்கிய பவுத்த சங்கம்

ஆங்கிலேய நண்பரான ஆல்காட்டின் உதவியால் இலங்கைக்குச் சென்றார். அங்கு, சிங்கள பௌத்தத் துறவியிடம் தீட்சை பெற்று இந்தியா வந்தார். தென்னிந்தியா முழுவதும் பவுத்தத்தைப் பரப்பும் நோக்குடன் 'சாக்கிய பவுத்த சங்கத்தை' தோற்றுவித்தார். 'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலரும், இந்த இயக்கத்தில் இணைந்துகொண்டு சாதிய கொடுமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பினார். "இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் யாரும் இந்துக்கள் அல்ல. அவர்கள் அனைவரும் ”சாதியற்ற திராவிடர்கள்" என்னும் கருத்தை முன்வைத்துப் பேசவும் எழுதவும் செய்தார்.

தென்னிந்திய பவுத்த சாக்கிய சங்கம்

அயோத்திதாச பண்டிதர் 1902-ல் 'தென்னிந்திய பவுத்த சாக்கிய சங்கம்' எனும் அமைப்பை ராயப்பேட்டையில் நிறுவி பவுத்த மதக் கொள்கைகளைப் பரப்பினார்.

அரசியல் வாழ்க்கை

அயோத்திதாச பண்டிதர் 'திராவிட மகாஜன சபை'யை நிறுவினார். 1891ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், திராவிட மகாஜன சபையின் சார்பாக, ஊட்டியில் மாநாடு நடத்தப்பட்டது. இதில், "பறையர் எனக் கூறுவது குற்றம் எனச் சட்டம் இயற்ற வேண்டும், பொது இடங்களில் நுழைய உரிமை அளிக்க வேண்டும், கல்வி வசதி செய்துதர வேண்டும்" என்பன உள்ளிட்ட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு காங்கிரஸ் செயலாளருக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் அனுப்பப்பட்டது.

ஏப்ரல் 1892-ல் சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற சென்னை மகாஜன சபை மாநாட்டில், நீலகிரி பிரதிநிதியாக அயோத்திதாசர் கலந்துகொண்டார். இம்மாநாட்டில்தான், ஒடுக்கப்பட்டோருக்கு இலவசக் கல்வி, புறம்போக்கு தரிசு நிலம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். தாழ்த்தப்பட்டவர்களின் கோயில் நுழைவுக்கு அனுமதி கேட்டபோது மறுத்ததால் இலவசக் கல்வியும் நிலமற்றவர்களுக்கு நிலமும் கேட்டார். 1893-ல் தாழ்த்தப்பட்டவர்களிடம் கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. பஞ்சமி நிலம் உருவாக இந்த முன்னெடுப்பு காரணமாக அமைந்தது. 1912 அக்டோபர் 30 தமிழன் இதழில், இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தால் ஆதி தமிழர்களிடம் அரசியல் அதிகாரத்தை வழங்கவேண்டுமென ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை வைத்தார்.

"தங்கவேல் அப்பாதுரை பண்டிதமணியும் அயோத்திதாசப் பண்டிதரும் தன்னுடைய பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகள்" என ஈ.வெ.ராமசாமி மதிப்பிடுகிறார்.

ஆய்வுகள்

அயோத்திதாசர் மேற்கொண்ட ஆய்வுகளில் ஒன்று ’இந்திர தேச சரித்திரம்’. இந்திர தேசத்தின் பிரதான கோட்பாடான ’புத்த தர்மத்தை’ ஏற்று அரசர்களும் மக்களும் இன்புற்று வாழ்ந்ததாகவும், விவசாயம் செழித்திருந்ததாகவும், அறிவிலும் கலையிலும் மக்கள் தேர்ச்சி பெற்று விளங்கியதாகவும் கூறினார். தான் கட்டமைத்த இந்திர தேச வரலாற்றை முன்னெடுத்து இந்திய வரலாறு என்பது பூர்வ பவுத்தத்துக்கும், ஆரியத்துக்கும் நடந்த போராட்டம் என்று தன் இந்திர தேச வரலாற்றின் மூலம் எடுத்துரைத்தார்.

ஒரு பைசா தமிழன்

இதழியல்

திராவிடப் பாண்டியன்

அயோத்திதாச பண்டிதருக்கு ரெவரன்ட் ஜான் ரத்தினம், ஆல்காட் பிரபு உள்ளிட்டோரின் நட்பு கிடைத்தது. 1882 ஆம் ஆண்டு "திராவிடர் கழகம்" என்ற பெயரில் ஜான் ரத்தினம் ஒரு அமைப்பை நடத்தினார். 1885-ல் நண்பர் ஜான் ரத்தினத்துடன் இணைந்து 'திராவிடப் பாண்டியன்' எனும் இதழைத் தொடங்கினார். அயோத்திதாசர் அந்த இதழின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

தமிழன்
ஒரு பைசாத் தமிழன்

அயோத்திதாச பண்டிதர் 1907-ம் ஆண்டு ஜூன் 19 அன்று 'ஒரு பைசாத் தமிழன்' எனும் பத்திரிகையைத் தொடங்கினார். "ஒரு நயா பைசாவுக்குக் கூட தகுதியில்லாதவனாகத் தமிழன் இருந்துவருகிறான்" எனும் வேதனையை விளக்கும் விதமாக 'ஒரு பைசாத் தமிழன்' எனப் பெயர் வைக்கப்பட்டதாகக் கூறினார். ஆகஸ்ட் 26, 1908-ல் 'அச்சுகூடமும் பத்திரிக்கைப்பெயரும் மாறுதலடைந்தது' என்ற விளக்கத்துடன் “தமிழன்” என பத்திரிக்கை பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

இந்தப் பத்திரிகையில் தொடர்ந்து, பிராமணிய சிந்தனைகளுக்கு எதிரான கட்டுரைகளை எழுதிவந்தார் அயோத்திதாசர். அதன்மூலம், இந்திய வரலாற்றையே அவர் மறுகட்டமைப்பு செய்தார் எனலாம். இது பல தரப்பிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கார்த்திகை தீபம், தீபாவளி, பொங்கல், திருமணச் சடங்கு, இறுதிச் சடங்கு உள்ளிட்ட சடங்குகள் எல்லாம் பவுத்தம் வசம் இருந்தவை என்றும் காலப்போக்கில், இவையெல்லாம் எப்படி இந்துமயமானது என்பதையும் விளக்கி எழுதினார்.

இதே காலகட்டத்தில் 'சுதேசமித்திரன்' பத்திரிகையுடன் கடும் வார்த்தைப் போர்களையும் நடத்தியுள்ளார். ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் பாரதியாருக்கும் அயோத்திதாசருக்கும் இடையே காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. 1914 வரை இவ்விதழ் செயல்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

அயோத்திதாச பண்டிதர் தாழ்த்தப்பட்டவர்களின் வரலாற்றை கட்டமைக்கும் ஈடுபட்டார். இதற்காக இரட்டை காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, திருக்குறள், நன்னூல், வீரசோழியம், நாலடியார், காக்கை பாடினியம் போன்ற தமிழ் இலக்கிய சான்றுகளை எடுத்துக் கையாண்டார்.

திருவள்ளுவர் பற்றிய புனைவுகளை ஆதாரத்துடன் வெளியிட்டு உண்மையை விளக்கினார். விபூதி ஆராய்ச்சி, கபாலீஸ்வரர் சரித்திர ஆராய்ச்சி, அரிச்சந்திரனின் பொய்கள், திருவள்ளுவர் வரலாறு, திரிக்குறள் எனும் பெயரில் திருக்குறளுக்கு தெளிவுரை, புத்த மார்க்க வினா விடை, இந்திர தேச சரித்திரம், விவேக விளக்கம் போன்ற படைப்புகளையும் எழுதினார்.

சிறப்புகள்

  • 1999-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 2005-ம் ஆண்டு தாம்பரத்தில் அயோத்திதாசர் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டது.
  • அக்டோபர் 21, 2005-ல் அயோத்திதாசருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
  • அயோத்திதாசர் நடத்திய ‘ஒரு பைசாத் தமிழன்’ இதழின் நூற்றாண்டு விழாவை, 2008-ல் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி மிகப்பெரிய அளவில் அரசு விழாவாகக் கொண்டாடினார்.
  • அயோத்திதாசப் பண்டிதரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அவரின் வாரிசுகளுக்குப் பத்து லட்சம் ரூபாய் நிதியும் 2008-ல் வழங்கப்பட்டது.
  • 2019-ம் ஆண்டு, சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் போன்ற துறைகளில் முத்திரை பதித்தவர்களுக்கு, 'அயோத்திதாசப் பண்டிதர் விருது' வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
  • 2022-ல் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

மறைவு

அயோத்திதாசப் பண்டிதர் 1914-ம் ஆண்டு, மே 5-ம் தேதி காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
  • அம்பிகையம்மன் சரித்திரம்
  • அரிச்சந்திரன் பொய்கள்
  • ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
  • இந்திரர் தேச சரித்திரம்
  • இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம்
  • கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
  • சாக்கிய முனிவரலாறு
  • திருக்குறள் கடவுள் வாழ்த்து
  • திருவள்ளுவர் வரலாறு
  • நந்தன் சரித்திர தந்திரம்
  • நூதன சாதிகளின் உள்வே பீடிகை
  • புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி
  • புத்த மார்க்க வினா விடை
  • மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
  • முருக கடவுள் வரலாறு
  • மோசோயவர்களின் மார்க்கம்
  • யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
  • விபூதி ஆராய்ச்சி
  • விவாஹ விளக்கம்
  • வேஷ பிராமண வேதாந்த விவரம்
  • பூர்வ தமிழ்மொழியாம் புத்தாது ஆதிவேதம்
  • வேஷபிராமண வேதாந்த விவரம்
இவரைப்பற்றிய நூல்கள்
  • அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை: டி. தருமராஜ்
  • நான் பூர்வ பெளத்தன்: 2003: டி. தருமராஜ்
  • அயோத்திதாச பண்டிதர்: ந.முத்துமோகன் (தமிழில்: இந்திரா மோகம்)
  • அயோத்திதாசர் சிந்தனைகள்: ஞான அலாய்சியஸ்
  • க. அயோத்திதாசர் ஆய்வுகள்: ராஜ் கெளதமன்
  • அயோத்திதாச பண்டிதரின் சொற்பொழிவுகள்: முனைவர் பெ.விஜயகுமார்

உசாத்துணை

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.