சேர்.பொன். அருணாசலம்: Difference between revisions

From Tamil Wiki
Line 62: Line 62:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* சேர் பொன்னம்பலம் அருணாசலம்: noolaham
* [https://velaler.com/on-ponnambalam-arunachalam-memorial-day-1853-1924-the-founder-of-the-tamil-mahajana-sabha-the-father-of-the-ceylon-national-congress-party-and-the-father-of-the-ceylon-national-league-we-pay-homa/ பொன்னம்பலம் அருணாசலம் நினைவு நாளில் (1853-1924) ஐயாவை போற்றி வணங்குவோம்: velalar]
* [https://velaler.com/on-ponnambalam-arunachalam-memorial-day-1853-1924-the-founder-of-the-tamil-mahajana-sabha-the-father-of-the-ceylon-national-congress-party-and-the-father-of-the-ceylon-national-league-we-pay-homa/ பொன்னம்பலம் அருணாசலம் நினைவு நாளில் (1853-1924) ஐயாவை போற்றி வணங்குவோம்: velalar]

Revision as of 17:26, 2 October 2022

சேர்.பொன். அருணாசலம் (பொன்னம்பலம் அருணாசலம்) (14 செப்டம்பர் 1853 – 9 சனவரி 1924) ஈழத்து தமிழ் அறிஞர், ஆய்வாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். பண்டைய இலக்கியங்கள், வரலாறு புதைபொருளாராய்ச்சி, கீழைத்தேய மேலைத்தேசியத் தத்துவஞானம் ஆகியவற்றில் ஈடுபாடுடையவர். இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர்.

பிறப்பு, கல்வி

பொன்னம்பலம் அருணாசலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மானிப்பாயைச் சேர்ந்த ராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) என அழைக்கப்பட்ட பொன்னம்பல முதலியார், செல்லாச்சி (சேர் முத்து குமாரசுவாமியின் சகோதரி) இணையருக்கு மூன்றாவது மகனாக செப்டெம்பர் 14, 1853-ல் கொழும்பு நகரில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர்.பொன். இராமநாதன் ஆகியோர் இவரது சகோதரர்கள்.

சேர்.பொன். அருணாசலம் தாய் மாமனாரான சேர். முத்துக்குமாரசுவாமியின் கண்காணிப்பில் கொழும்பில் வளர்ந்தார். கொழும்பு றோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வி பயின்றார். இங்கு கல்வி கற்றபோது இராணி கல்விச் சகாய நிதியினையும் இரேணர் பரிசினையும் பெற்றார். 1870ஆம் ஆண்டில் ஆங்கிலப் பல்கலைக் கழகச் சகாயநிதிப் பரிசினையும் பெற்று, லண்டன் கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள கிறைஸ்ட் கல்லூரியில் இளங்கலைமானிப் பட்டம் பெற்றார். 1880இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பாரிஸ்டர் பட்டம் பெற்றார். பவுண்டேஷன் புலமைப்பரிசிலைப் பெற்று கணிதத்திலும் புராதன இலக்கியத்தையும் கற்றார்.

தனி வாழ்க்கை

சேர்.பொன். அருணாசலம் மானிப்பாயைச் சேர்ந்த சுவர்ணம் நமசிவாயம் என்பவரை மணந்தார். இவர்களுக்கு எட்டு பிள்ளைகள். பத்மநாபன், அருணாசலம் மகாதேவா, அருணாசலம் இராமநாதன் என்ற ஆண்பிள்ளைகள். மகேஸ்வரி செகராசசிங்கம், மனோன்மணி பத்மநாதன், பத்மாவதி பரராஜசிங்கம், சிவானந்தம் தம்பையா, சுந்தரி நடராஜா ஆகிய ஐந்து பெண்பிள்ளைகள். இவர்களில் பத்மநாபன், மகேஸ்வரி, மனோன்மணி, பத்மாவதி ஆகியோர் அருணாசலம் மறைவதற்கு முன்பே இறந்து விட்டனர். தஞ்சாவூரைச் சேர்ந்த இலக்கணம் இராமசாமிப் பிள்ளை என்னும் அருட்பரானந்தி தேசிகர் இவரது ஞானசாரியர்.

பொன்னம்பலம் அருணாசலத்தின் மகன் அருணாசலம் மகாதேவா பிற்காலத்தில் அரசியல்வாதியாக இருந்தார். அருணாசலம் கேட்ட கொழும்புத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் மகாதேவாவிற்கு கிடைத்திருந்தது. டொனமூர் அரசாங்க காலத்தில் சிறிது காலம் அமைச்சராகவும் பதவி வகித்தார். 1947-ல் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் ஜி.ஜி. பொன்னம்பலத்திற்கு எதிராகப் போட்டியிட்டு அவரிடம் தோல்வியடைந்தார்.

பணிகள்

இங்கிலாந்தில் பாரிஸ்டர் ஆகவும் 1875 ஏப்ரலில் சிவில் சேவை உத்தியோகத்தேர்வில் சித்தி பெற்ற முதல் இலங்கையராகவும் இலங்கை திரும்பினார். 1913ஆம் ஆண்டு வரை அரசாங்க சேவையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தார்.

முதலில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிய இவர் கண்டி காவல்துறை நீதிமன்றத்திலும் தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளிலுமுள்ள நீதிமன்றங்களிலும் அலுவலராகப் பணிபுரிந்தார். இவ்வனுபவம் காரணமாக மட்டக்களப்பில் மாவட்ட நீதிபதியாகக் பணியாற்றும் வாய்ப்பு பெற்றார். இவ்வனுபவத்தைப் பயன்படுத்தி சிவில் சட்டச் சுருக்கம் என்ற நூலை எழுதினார். தேசாதிபதியாக இருந்த சேர்.ஆர்தர் கோர்டன் இவரைப் பதிவாளர் நாயகமாக (1888–1902) நியமித்தார். பல்வேறு நுணுக்கங்களுடனான குடிசன மதிப்பீட்டு முறையினை அறிமுகப்படுத்தினார். இப்பதவியை வகித்த காலத்திலேயே சட்ட சபையில் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராகவும் இருந்தார். 1913ஆம் ஆண்டு அருணாசலம் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்றார். 1900ஆம் ஆண்டில் கல்விப் பணிப்பாளராயிருந்த எஸ்.எம். பரோஸ் அவர்களுக்கு கல்வித்திட்டம் சார்ந்த அறிக்கை சமர்ப்பித்தார். இலங்கையில் 'தாய் மொழிக் கல்வி'யின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

பதவிகள்
  • 1903ஆம் ஆண்டிலே குருநாகலில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
  • 1906ஆம் ஆண்டிலே சட்ட நிரூபண சபையில் ஓர் உறுப்பினராக நியமிக்கப் பட்டார்.
  • 1912ஆம் ஆண்டிலே சட்ட நிருவாக சபையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அமைப்புப் பணிகள்

இவரது பெரு முயற்சியினலேயே 1906ஆம் ஆண்டிலே இலங்கைப் பல்கலைகழகச் ஆங்கம் தொடங்கப் பட்டது. இவரை நினைவு கூரும் வகையில், இப்போது பேராதனையில் அமைக்கப்பட்டிருக்கும் பல்கலைக் சழகத் திலும் ஒரு கட்டடம் “அருணுசல மண்டபம்" என அமைக்கப்பட்டுள்ளது. ருேயல் ஆசியசங்கத்தின் (R.A.S.C.) தலைவராக இருந்தார். "கொழும் புச் சைவ பரிபாலன சபை' தாபனத்தினை "இலங்கைச் சைவ பரிபான சபை' என மீட்டமைத்தார். இவரே அச்சபையின் முதலாவது தலைவராக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அருணாசலம் அரசியலில் நுழைந்தார். சட்ட நிரூபண சபையில் சேர் பொன் இராமநாதனுக்குப் பின் உறுப்பினராக இருந்தார். அரசாங்க சேவையில் பணியாற்றும் காலத்திலேயே சுயராஜ்யத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக ஜனவரி 29, 1915-ல் சமூகச் சேவை சங்கத்தினை உருவாக்கினார். அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1915-ல் சிங்கள, முஸ்லிம் கலவரத்தைத் தொடர்ந்து தேசிய இயக்க அரசியலிலும் பங்கு கொண்டார்.

தேசிய இயக்க அரசியலுக்காக 1917 டிசம்பரிலும், 1918 டிசம்பரிலும் இரு மாநாடுகளை ஒழுங்கு செய்தார். ஜூன் 25, 1919-ல் இலங்கைத் தொழிலாளர் சேமாவிருத்திச் சங்கத்தை உருவாக்கினார். இதன் தலைவராக அருணாசலமும் செயலாளராக பெரி. சுந்தரமும் பதவியேற்றனர். இச்சங்கம் 1920 இல் இலங்கைத் தொழிலாளர் சம்மேளனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1919 டிசம்பர் 11 இல் அருணாசலத்தின் முயற்சியினால் இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது தலைவராகவும் 1919 முதல் 1922 வரை பொன்னம்பலம் அருணாசலமே ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். தமிழர்களை தேசிய காங்கிரசுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இவரே நடுவராகத் இருந்தார். எழுத்து வடிவில் ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்பட்டது.

1921-ல்மானிங் அரசியல் சீர்திருத்தத்தின் அடிப்படையிலான தேர்தலில் பிரதிநிதிகளைக் தெரிவு செய்யும் முறை இனவிகிதாசாரப் படி இருக்கவேண்டுமென்பதாலும், கொழும்பு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சேர். ஜேம்ஸ் பீரிஸ், நு.து. சமரவிக்கிரம போன்ற சிங்கள தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலும், சிங்களவர் தங்களைத் தெரிவு செய்யமாட்டார்கள் என்பதனைப்புரிந்து கொண்டு இலங்கைத் தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறினார். 1921 ஆகஸ்டில் தமிழர் அடையாள அரசியலை நிலைநிறுத்தும் வகையில் தமிழர் மகாஜன சபையினை உருவாக்கினார். அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு பல மொழிபெயர்ப்புகள் செய்தார். A Revel in Bliss என்பது தாயுமானவர் பாடல்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்பு. ‘A Few Hymns of Manikka Vachaka and Thayumanavar’ என்ற நூலை ஜி.யூ.போப் அவர்களுடன் இணைந்து மொழிபெயர்த்தார். Studies and Translations from the Tamil, Studies and Translations, Philosophical and Religious போன்ற ஆங்கில கட்டுரைத்தொகுப்புகளையும் வெளியிட்டார். திருக்கோவையார், கல்லாடம், திருமுருகாற்றுப்படை, ஞானவாசிட்டம், புறநானூறு போன்றவற்றிலிருந்தும் பாடல்கள் மொழிபெயர்ப்புச் செய்தார். ருேயல் ஆசியச் சங்க இலங்கைக்கிளைச் சஞ்சிகையில் கட்டுரைகள் எழுதினார்.

விருதுகள்/ நினைவுச் சின்னங்கள்

  • 1913ஆம் ஆண்டு இவரது அரசாங்க சேவையைப் பாராட்டி ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பக்கிங்காம் அரண்மனையில் வைத்து இவருக்கு சேர் பட்டம் வழங்கினர்.
  • ஏப்ரல் 3, 1930ஆம் ஆண்டு அரசாங்க சபை மைதானத்தில்(தற்போதைய ஜனாதிபதி செயலகம்) தேசாதிபதியால் அருணாசலத்தின் வெண்கலச்சிலை திறந்துவைக்கப்பட்டது.
  • இவரது உருவப்படங்கள் றோயல் கல்லூரி சமூக சேவைச் சங்கம், இலங்கைத் தேசிய காங்கிரசின் தலைமை அலுவலகம் போன்றவற்றில் திறந்துவைக்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக்கழக மண்டபம் ஒன்றிற்கு அருணாசலத்தின் பெயர் சூட்டப்பட்டது.

மறைவு

1923ஆம் ஆண்டின் இறுதிக் காலத்தில் இந்தியாவி லுள்ள திருக்கோயில்களுக்கு யாத்திரை செய்வதற்காகச் சென்ற சேர்.பொன். அருணாசலம் ஜனவரி 9, 1924-ல், தனது 71 ஆவது வயதில் மதுரை மீனாட்சியம்மன் ஆலயப் பிரதேசத்தில் காலமானார். இவருடைய பூதவுடல் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு, கொழும்புப் பொது மறுானத்தில் ஈமக்கிரி யைகள் செய்யப்பட்டன.

நூல் பட்டியல்

  • 1901ஆம் ஆண்டின் குடிசன மதிப்புச் சூசிகை கொழும்பு (1901)
  • 1901ஆம் ஆண்டின் இலங்கைக் குடிசனமதிப்பு (1902)
  • அறிதுயில்-வெஸ்ற்மினிஸ்ரர் ரிவியூ-லண்டன் நவம்பர். 1902,
  • இலங்கைச் சரித்திரச் சுருக்கம் இலங்கைத் தேசிய சஞ்சிகை தொகுதி (1906)
  • இலங்கைக்கு ஒரு பல்கலைக் கழகத்தின் அத்தியாவசியம் (இலங்கைப் பல்கலைக் கழகச் சஞ்சிகை 1906)
  • எங்கள் அரசியல் தேவைகள்-கொழும்பு (1917)
  • இக்கால அரசியல் நிலைமை-கொழும்பு (1919)
  • தலைமையுரையும் வேறு அரசியற் சொற்பொழிவுகளும்
  • இலங்கைத் தேசிய காங்கிரஸ் கைநூல், 1918-1919, (1928)
கட்டுரைகள்
  • ஞான வாசிட்டம்
  • கண்டி மாகாணங்கள்
  • பொலநறுவை வெண்கல உருவங்களும் சிவவழிபாடும்,
  • முருக வழிபாடு (கதிர்காமக்கடவுள்), தொகுதி 1924
  • ருேயல் ஆசிய சங்கத் தலைமைப் பேருரை 1904
  • கொழும்புப் பொருட்காட்சிச் சாலையிலுள்ள புராதன வெண்கல உருவங்கள் ஸ்பொலியா சிலோனிக்க சஞ்சிகை 1909
  • கிழக்குத் திசையின் ஜோதி
மொழிபெயர்ப்பு
  • A Revel in Bliss (1895)
  • A Few Hymns of Manikka Vachaka and Thayumanavar (1897)
  • Studies and Translations from the Tamil
  • Studies and Translations, Philosophical and Religious (1937, மறு பதிப்பு: 1981)

இவரைப்பற்றிய நூல்கள்

  • ஸ்ரீ பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் ஜீவிய சரித்திரச் சுருக்கம், நவாலியூர் க. சோமசுந்தரப் புலவரால் செய்யுள் நடையில் எழுதப்பட்டது. (சுதேச நாட்டியம், யாழ்ப்பாணம், 1928)

உசாத்துணை