மா. கண்ணப்பன்: Difference between revisions

From Tamil Wiki
Logamadevi (talk | contribs)
No edit summary
; Added info on Finalised date
 
Line 51: Line 51:
* நகரத்தார் கலைக்களஞ்சியம்: பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன்; இணையாசிரியர்கள் கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம். முதல் பதிப்பு: 1998.
* நகரத்தார் கலைக்களஞ்சியம்: பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன்; இணையாசிரியர்கள் கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம். முதல் பதிப்பு: 1998.
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|10-May-2026, 21:44:37 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 11 May 2026

மா. கண்ணப்பன்

மா. கண்ணப்பன் (மே 25, 1938) தமிழ்ப் பேராசிரியர். கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

மா. கண்ணப்பன், மே 25, 1938 அன்று, காரைக்குடியில், சி.ப.சித. மாணிக்கம் செட்டியார் - உமையாள் ஆச்சி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்விக்குப் பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்த் துறைத் தலைவராக உயர்ந்து ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப் பின் புதுக்கோட்டையில் மான்டிசோரி பள்ளி ஒன்றைத் தொடங்கி நடத்தினார். மணமானவர்.

கண்ணதாசனுடன் மா. கண்ணப்பன்

இலக்கிய வாழ்க்கை

மா. கண்ணப்பன், இளம் வயது முதலே கவிதையிலும் பேச்சிலும் ஆர்வம் கொண்டிருந்தார். சா. கணேசனினும் பேச்சாலும், கண்ணதாசனின் கவிதைகளாலும் ஈர்க்கப்பட்டார். இதழ்களிலும், மலர்களிலும் மரபுக் கவிதைகளை, பக்திக் கவிதைகளை எழுதினார். தனது கவிதைகளுக்காக கண்ணதாசனின் பாராட்டைப் பெற்றார். செட்டிநாட்டு வாழ்க்கையையும் பண்பாட்டையும் சித்திரிக்கும் 'குட்டி' எனும் குறுங்காப்பியத்தை இயற்றினார். சிறார்களுக்கான பாடல்களை எழுதினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார்.

மேடையுரை

மா. கண்ணப்பன், தமிழ் குறித்தும், அதன் தொன்மை, வளம் குறித்தும் பல்வேறு அரங்குகளில் உரையாற்றினார். பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். கவிதை, பட்டிமன்றம், சமய உரை, இலக்கிய உரை என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடையுரைகளை நிகழ்த்தினார். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று பல உரைகளை நிகழ்த்தினார். தமிழின் சிறப்பு குறித்த யூ ட்யூப் உரைகளைத் தயாரித்தளித்தார். நகைச்சுவையை மையமாக வைத்து உரையாற்றுவதில் வல்லவராக அறியப்பட்டார்.

நாடகம்

மா. கண்ணப்பன் 'குட்டி', 'தெண்டாயுதபாணி துணை' போன்ற நாடகங்களை எழுதி அரங்காற்றுகை செய்தார். நூல்களாகவும் அவற்றை வெளியிட்டார்.

மதிப்பீடு

மா. கண்ணப்பன், கல்வியாளராக நீண்டகாலம் தமிழ் இலக்கியம் பயிற்றுவித்தார். மாணவர்களிடையே தமிழ் இலக்கிய ஆர்வத்தைத் தோற்றுவித்தார். இலக்கிய, சமய, ஆன்மிக, நகைச்சுவைச் சொற்பொழிவாளராகப் புகழ்பெற்று விளங்கினார். மரபு வழுவாத பக்திப் பாடல்களை இயற்றினார். நீள்கவிதையையும், குறுங்காப்பியத்தையும் எழுதினார். சிறார் படைப்பாளியாகவும் செயல்பட்டார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.

மா. கண்ணப்பன், கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், சொற்பொழிவாளர், மரபுசார்ந்த இலக்கியப் படைப்பாளி ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

நாடகம்
  • குட்டி
  • மழலை நாடகங்கள்
  • தெண்டாயுதபாணி துணை
கவிதைத் தொகுப்புகள்
  • தமிழிசைப் பாமாலை
  • மழலை மலர்கள்
  • கண்ணப்பன் கவிதைகள்
  • மேடை ஓடை
  • கவிதையும் கற்பித்தலும்
  • மழலை மேடை
  • குழந்தைப் பாடல்கள்
  • கவிதைக் கதம்பம்
  • முருகன் பாடல்கள்
சிறுகதை
  • வெள்ளைப் பணியாரம்

உசாத்துணை

  • நகரத்தார் கலைக்களஞ்சியம்: பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன்; இணையாசிரியர்கள் கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம். முதல் பதிப்பு: 1998.

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-May-2026, 21:44:37 IST