under review

ராதிகா சாந்த்வனமு: Difference between revisions

From Tamil Wiki
Line 59: Line 59:
*[https://www.sramakrishnan.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/ ராதிகா சாந்த்வனம் எஸ்.ராமகிருஷ்ணன்]  
*[https://www.sramakrishnan.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/ ராதிகா சாந்த்வனம் எஸ்.ராமகிருஷ்ணன்]  
*[https://ksradhakrish.blogspot.com/2022/11/radhika-santwanamu-was-first-book-to-be.html Radhika Santwanamu was the first book to be banned in Madras presidency]  
*[https://ksradhakrish.blogspot.com/2022/11/radhika-santwanamu-was-first-book-to-be.html Radhika Santwanamu was the first book to be banned in Madras presidency]  
== இணைப்புகள் ==
* ஒரு பழைய பிறழ்வெழுத்து - ஜெயமோகன்
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|11-May-2025, 23:40:44 IST}}
{{Fndt|11-May-2025, 23:40:44 IST}}

Revision as of 18:50, 14 July 2025

ராதிகா சாந்த்வனமு
ராதிகா சாந்த்வனமு

ராதிகா சாந்த்வனமு (1757) (ராதிகா ஸாந்த்வனமு, ராதிகா ஆறுதலடைந்தாள்) தெலுங்கில் இயற்றப்பட்ட அகத்துறை நூல். தஞ்சையில் வாழ்ந்த முத்துப்பழனி என்னும் பெண்மணியால் இயற்றப்பட்டது.

ஆசிரியர்

இந்த நூலாசிரியரின் பெயர் முத்துப்பழனி. இவர் தஞ்சையில் வாழ்ந்த ஒரு தேவதாசி. இவருடைய ஒரே நூல் இது.

காலம்

ராதிகா சாந்த்வனமு முத்துப்பழனியால் 1757 வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

வெளியீடு

ராதிகா சாந்த்வனமு நூலின் பிரதி ஒன்றை சார்ல்ஸ் பிலிப் பிரௌன் என்னும் ஆங்கிலேயர் பாதுகாத்து வந்தார். அது சென்னை கீழ்த்திரை சுவடிகள் காப்பகத்தில் பாதுகப்பப்பட்டது. சார்ல்ஸ் பிலிப் பிரௌன் தெலுங்கு- ஆங்கில அகராதியை தயாரித்தவர்.

1855-ம் ஆண்டில் பிரௌன் தாய்நாடு திரும்பும்போது இச்சுவடியை தன்னுடன் இணைந்து பணியாற்றிய பைடிபாடி வெங்கடநரசு என்னும் அறிஞரிடம் ஒப்படைத்துச் சென்றார். 1887-ல் வெங்கடநரசு இந்நூலை வெளியிட்டார்.

திருக்கடையூர் கிருஷ்ணராவ் என்பவரால் நல்லம்பாகம் ராகவுலு நாயக்கரின் ஸ்ரீநாம அச்சகத்தில் அச்சிடப்பட்டு இந்நூல் 1889-ம் ஆண்டு மீண்டும் வெளியாகியது. இந்த இரு பதிப்புகளில் இந்நூலில் இருந்த காமச்சுவைப் பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டன.

பெங்களூர் நாகரத்தினம்மாள் இந்நூலை திருத்தி செம்மையாக்கி முழுமையான வடிவில், முன்னுரைக் குறிப்புகளுடன் சென்னை வாவிள்ள ராமஸ்வாமி சாஸ்த்ருலு என்னும் பதிப்பாளரின் ஸ்ரீ சரஸ்வதி அச்சகத்தின் வழியாக 1901-ல் வெளியிட்டார். இந்நூல் அப்போதுதான் கவனிக்கப்பட்டு விவாதங்களையும் உருவாக்கியது.

இந்நூலை ஆங்கில அரசு 1912-ல் தடை செய்தது. தடை நீங்கிய பின்னர் 1960-ல் இந்நூல் வாவிள்ள அலுவலகத்தால் சென்னை ஸ்ரீராமா அச்சகம் வழியாக மீண்டும் வெளியிடப்பட்டது.

1974-ல் இநூலை எமெஸ்கோ புத்தக நிறுவனம் சென்னை எம்.வேதாசலம் கம்பெனி வெளியீடாக வெளியிட்டது.

மொழியாக்கம்

தமிழறிஞர் பி.எம். சுந்தரம் இந்நூலை மொழியாக்கம் செய்ய, அகநி பதிப்பக வெளியீடாக 2022-ல் இந்நூல் வெளியிடப்பட்டது. அ. வெண்ணிலா இந்நூல் தடைசெய்யப்பட்ட அரசாணை முதலிய ஆவணங்களைச் சேகரித்து நூலின் பின்னிணைப்பாகச் சேர்த்தார்.

விவாதங்கள்

தெலுங்கு நவீன இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு இந்நூல் ஓர் ஆபாசநூல் என கடுமையாக விமர்சனம் செய்தார். ‘இந்நூல் ஒரு வேசியால் இயற்றப்பட்டு இன்னொரு வேசியால் வெளியிடப்பட்டுள்ளது’ என்று அவர் சொன்னார்.

பெங்களூர் நாகரத்தினம்மாள் அதற்கு பதிலளித்து கடிதம் எழுதினார். ‘ஆம். இந்நூல் ஒரு தேவதாசியால் எழுதப்பட்டு இன்னொரு தேவதாசியால் பதிப்பிக்கப்பட்டதுதான். ஆனால் சிறந்த கல்விமானாகிய பந்துலு அவர்களுக்கு தேவதாசிக்கும் வேசிக்குமான வேறுபாடு கூட தெரியாமற்போனது அதிசயமாக இருக்கிறது. ஆனால் அவரால் சிறப்பாக விமரிசனம் செய்யப்பட்டும் வெளியிடுவதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்ட பைரங்கு திம்மய்யாவின் வைஜயந்தீ விலாசமு என்னும் நூலில் காணப்படுவதை விட நான் வெளிக்கொணர்ந்த இந்த நூலில் ஆபாசம் உள்ளதா என்று கூற அவர் முன்வருவாரா?' என்று கேட்டார். 1910-ல் வெளிவந்த இந்நூலின் முன்னுரையில் பெங்களூர் நாகரத்தினம்மாள் 'ஆண்கள் இத்தகைய நூல்களை எழுதலாம் என்றும், ஆண்கள் இத்தகைய களவொழுக்கங்களில் ஈடுபடுவது பிழையல்ல என்றும் கருதுபவர்கள் தான் பெண்களை வேசிகள் என்று இகழ்கிறார்கள், அவர்கள் எழுதும் நூல்கள் ஆபாசம் என்று பழிக்கிறார்கள்' என்று வாதிட்டார்.

தடை

ஆங்கில அரசு மொழிபெயர்ப்பாளராக இருந்த கோதேடி கனகராஜு பந்துலு என்னும் அறிஞரிடம் இந்நூல் பற்றிய கருத்தைக் கேட்டது. அவர் இந்நூலின் ஆசிரியரும், பதிப்பாளரும் வேசிகள் என்றும், நூல் மிக ஆபாசமாக உள்ளது என்றும் கருத்துரை அளித்தார். நூலை அச்சிட்ட வாவிள்ளா அச்சகம் மக்களால் சூறையாடப்பட்டது. காவல்துறை ஆணையர் கன்னிங்ஹாம், மாகாண தலைமை நீதிபதி ஆகியோர் இணைந்து நூலை 1912-ல் தடைசெய்தனர். பதிப்பித்த பெங்களூர் நாகரத்தினம்மாளும், அச்சிட்ட வாவிள்ளா சாஸ்துருலு இருவரும் குற்றம் சாட்டப்பட்டனர். மெட்ராஸ் பிரசிடென்ஸியில் சட்டபூர்வமான தடையைச் சந்தித்த முதல் நூல் இது என்று ஆய்வாளர் பி.எம்.சுந்தரம் குறிப்பிடுகிறார்.

தடை நீக்கம்

டங்குடூரி பிரகாசம் அன்றைய மதராஸ் மாகாணத்தின் 1946-ல் முதல்வராக ஆனபோது நூலின் மீதான தடை நீக்கப்பட்டது. ‘தெலுங்கு மொழி இலக்கியத்தின் கழுத்தணிக்கு சில முத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன' என்று அவர் அறிவித்தார்.

உள்ளடக்கம்

இந்நூலுக்கு இளா தேவீயம் என்ற பெயரும் உண்டு. 584 பாடல்களைக் கொண்டது இந்நூல்.

இந்நூலின் கதைச்சுருக்கம் இது. ராதிகா, அதாவது ராதை, கிருஷ்ணனின் வளர்ப்புத் தந்தை நந்தகோபனின் சகோதரி. ராதைக்கு முன்னரே மணமாகியிருந்தது, கணவனை பிரிந்து சகோதரன் இல்லத்தில் வாழ்ந்தாள். சிறுவனாகிய கிருஷ்ணனை அவளே வளர்த்தாள். கிருஷ்ணனுடன் ஏற்கனவே அவளுக்கு காம உறவு இருந்தது. நந்தகோபனின் மைத்துனன், அதாவது யசோதையின் சகோதரன், கும்பகன். அவன் மகள் இளா. இளாவையும் ராதையே வளர்த்தாள். கிருஷ்ணனுக்கு இளாவை முன்னின்று மணம்புரிந்து கொடுத்தவளும் ராதைதான்.

ஆனால் இளாவுக்கும் கிருஷ்ணனுக்கும் முதலிரவு நடைபெறும்போது காமமும் பொறாமையும் தாளமுடியாத ராதை இளாவுடன் கிருஷ்ணன் இருக்கும் அறைக்கதவை தட்டுகிறாள். இளாவை அன்பாகப் பேசி வெளியே அனுப்பிவிட்டு கிருஷ்ணனுடன் கூடுகிறாள். பிறகு தன் இல்லம் திரும்பும் ராதை கிருஷ்ணனின் பிரிவை தாளாமல் வாடுகிறாள். கிருஷ்ணனை அழைத்துவர தன் கிளியை அனுப்புகிறாள். கிளி திரும்பி வந்து இளாவும் கிருஷ்ணனும் கூடும் காட்சிகளை வர்ணிக்கிறது. கோபம் கொண்ட ராதை இளாவை தன் பாதங்களால் நசுக்குவதாகச் சூளுரைக்கிறாள்.

ராதையின் நினைவு மேலிட கிருஷ்ணன் அவளைத் தேடிவருகிறான். அவனை மறிக்கும் இளாதேவியின் சகோதரனாகிய ஸ்ரீதாமன் அவனை தடுக்கிறான். அந்த முறை தவறிய உறவு சரியா என்று கேட்கிறான். காமத்திற்கு உறவுமுறைகள் தேவையில்லை என்று பல புராணங்களைச் சொல்லி விளக்கும் கிருஷ்ணன் ராதையைத் தேடி வருகிறான். ராதை அவனை சீற்றத்துடன் உதைத்து தள்ளுகிறாள். அவன் இறங்கி மன்றாடவே மனம் கரைந்து ஏற்றுக்கொள்கிறாள். அவர்கள் காமத்தில் திளைக்கிறார்கள். ராதிகா சாந்தமடைகிறாள்.

நடை

இந்நூலின் நடை மிக எளியது,நேரடியானது என்று நாகரத்தினம்மாள் குறிப்பிடுகிறார். சில பிழைகள் இருந்தாலும் அக்கால நூல்களுக்கு அவை இயல்பானவை என்கிறார்

“அவனை முத்தமிட முயன்று தடுமாறினாள். பேச முயன்றபோது குரல் தழுதழுத்தது. ஒரு வெற்றிலைச் சுருளை அவன் கொடுத்தபோது அரை வெற்றிலையை மட்டும் எடுத்துக்கொண்ட புதுமணப்பெண்ணை வெட்கம் திணறச் செய்தது. மலர்கள் வாடியபின் கழுத்தணி ஒருபுறம் சாய, முத்துச்சரங்கள் தளர்வுற, அவன் மீது அவள் ஏறிக்கொண்டு காமலீலையில் தன் நாயகனுக்குத் தான் இணையானவள் என நிரூபிக்கலானாள்’.

இலக்கிய இடம்

இந்திய இலக்கியத்தில் அகத்துறை நூல்களும், காம விளக்கம் அளிக்கும் நூல்களும் பல உள்ளன. ஆனால் அவையெல்லாமே ஆண்களால், ஆண்களின் கோணத்தில் எழுதப்பட்டவை. ராதிகா சாந்த்வனமும் பெண்ணின் கோணத்தில் பெண்ணின் காமவேட்கையை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட நூல். அவ்வகையில் இந்திய இலக்கியத்தில் பிறிதொன்றிலாத தனித்தன்மை கொண்டது.

உசாத்துணை

இணைப்புகள்

  • ஒரு பழைய பிறழ்வெழுத்து - ஜெயமோகன்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-May-2025, 23:40:44 IST